மகள்மருமகள்
நாளை மருமகளாகப் போகும்
என் மகளே..
செல்லமாய் வளர்ந்தவள் நீ..
செல்வதற்குத் தயாராகிவிட்டாய்..
விளையாட்டுப் பெண்ணாகவே இருந்தவள் நீ..
விளக்கேற்றத் தயாராகிவிட்டாய்..
என் மகளாக இருந்தவரை
ஏழு மணிக்குதான் எழுவாய்..
நாளை முதல்
விடியும் முன் விழிக்க வேண்டும்..
நினைவில் கொள்..
அம்மா காபி எங்கே...
என்று இனி மறந்தும் கேட்காதே..
நாளை முதல்
அனைவருக்கும் நீதான் காபி தயாரிக்க வேண்டும்..
நினைவில் கொள்..
பசி தாங்காதவள் நீ..
நாளை முதல் பரிமாறிவிட்டு பின் உன் பசியாற்ற வேண்டும்..
நினைவில் கொள்..
சட்டென கோபம் கொள்வாய் நீ..
நாளை முதல்
எதுவந்த போதும் சகித்துப் போக வேண்டும்..
நினைவில் கொள்..
வேலை முடிந்து வந்தவுடன்
களைத்துப் போய் உறங்கிவிடுவாய்..
நாளை முதல்
களைப்பு வந்த போதும் வேலை முடித்துவிட்டு
உறங்க வேண்டும்..
நினைவில் கொள்..
பிடித்ததையெல்லாம் வாங்கிக் கொள்வாய்..
நாளை முதல்
கிடைத்தது எதுவோ அதை ஏற்க வேண்டும்..
நினைவில் கொள்..
ஏன் நான் மாற வேண்டும்..?
என்கிறாயோ...
மாறித்தானாக வேண்டும் மகளே
மருமகளாகிவிட்டாள்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
