பெற்ற உடம்பின் பெருமைகளை உணராமல் கெடுவழியில் ஓடிப் படுகின்றாய் பழி - உடல் நிலை, தருமதீபிகை 16
நேரிசை வெண்பா
பெற்ற உடம்பின் பெருமை அருமைகளை
முற்றும் உணராமல் மூடமாய்ச் - சுற்றிக்
கெடுவழியில் ஓடியே கேடாக வீணே
படுகின்றாய் என்னே பழி. 16
- உடல் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
அரிதாகக் கிடைத்துள்ள இவ்வுடம்பின் அருமை பெருமைகளை ஒரு சிறிதும் உணராமல் நெடு மடமையாய்க் கெடு வழியில் திரிதல் படுபழியாம் என்கிறார் .கவிராஜ பண்டிதர்
மனிதப் பிறப்பு பெறலரிய பேறாய்க் கிடைத்துள்ளது; இதனால் அடைய உரியதை விரைவில் அடைந்து கொள்ள வேண்டும். அடையாது கழியின் கடையாய் இழிந்துபட நேரும்.
‘உற்ற தேகம் உகுமுன் உயர்கதி
பெற்ற யோகர் பெறலரும் பேறினர்’
என்றது மற்ற மூகரது வறுநிலையை உய்த்துணர வந்தது.
இம்மெய்யின் மெய்யை உணர்ந்து உய்க என்பது கருத்து.