பொருள்வழிப் பிரிவு

பொருள்வழிப் பிரிவு…
(பிரிவு ற்றிப் பேசவும் விரைந்த தலவியை எண்ணித் தலைவனின் தனிமொ]ழி)
(அறுசீர் விருத்தம்)

கூடிக் களித்த பெண்மயிலை;
=கொஞ்ச நினைத்து வந்தவளைத்
தேடிச் சென்றோர் அயல்நாட்டில்
=தேவை யான பொருளீட்டி
ஓடி வருவேன் உன்கழுத்தில்
=ஒருமண மாலை யாகிடுவேன்
வாடி இருத்தல் தவிரெனவே
=வாய்மூ டிடுமுன் பிரிந்தாளே!

ஆசைக் கனலைக் கண்மூட்டும்;
=அமுதைக் கொவ்வை இதழூட்டும்!
மீசை முறுக்கி நான்காட்ட
=மின்ன லுருவம் பாய்ந்தோடும்!
காசை ஈட்டி வருவதனைக்
=கன்னி கேட்கச் சொல்லிடுமுன்
பூசல் காட்டிப் போயினளே!
=பொறுக்க மாட்டாள் பிரிவினையே!

காட்டு மயிலாய் முன்வந்தாள்;
=காதற் குயிலாய்த் தமிழ்தந்தாள்;
கூட்டில் உயிராய் எனைச்சேர்த்தாள்;
=கொஞ்சிக் காதல் தனைவார்த்தாள்;
ஏட்டில் அறியா மொழியானாள்;
=என்னுள் கனவின் விரிவானாள்;
வாட்டம் நீக்கும் பொருளீட்டி
=வருவேன் எனுமுன் மறைந்தாளே!

மார்பில் சாய்ந்த மதுக்குடமே!
=மரணம் போக்கும் என்னமுதே!
சோர்வில் லாத இலக்கியமே!
=சுவைக்கத் திகட்டாத் தேனடையே!
கார்வில் உன்கண் படுமுன்னே
=கருமே கங்கள் வருமுன்னே
சேர்வேன் எனச்சொல் லிடுமுன்,ஏன்
=சிறுபுயல் வளைத்த மழையானாய்!
======+++++=====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியேல் (12-Jan-19, 5:48 pm)
பார்வை : 51

மேலே