அவள் கைம்பெண்ணாக

கோவிலை கடந்து செல்கையில்
பால்ய கால நினைவுகள்
பாடாய் படுத்தின அவளை

ஊர் தேர்திருவிழாவில்
ஊரே களைகட்டும்

சந்தன கற்பூர வாசம்
காற்றில் கலந்து
நாசியில் நுழையும்
கோவில் மணியோசை
செவியில் நுழைந்து
மனம் லயிக்கும்
பூவையர் தலையோ
பூக்காட்டை சுமந்திருக்கும்

அன்றலர்ந்த மலராக
செஞ்சாந்து நிறத்தோடு
வட்ட நிலவாக அவளது முகம்

கயல் விழி இரண்டும்
கருவண்டாக மாற
கண் இமைகளோ
பட்டாம்பூச்சியாய்
படபடக்கும்
புருவம் இரண்டும் வில்லாக
கண்ணோ அம்பாக

அள்ளி முடித்த கூந்தலில்
அரிதாக ஒத்தை ரோசா
பூத்திருக்கும்

வாண்டுகள் கூட்டம்
அவளைச் சுற்றி
அக்கா அக்கா என
மொய்க்கும்

அம்மா கொடுக்கும்
காசுக்கு பொறிவாங்கி
குளத்தில் போட்டு
மீன் தின்னும் அழகை
இதழ் குவித்து ஒலிஎழுப்பி
இரசித்து மகிழ்ந்து
மறக்காமல் கோவில்
உண்டியலில் சில்லறை

அவள் வானில்
உலாவரும் தேவதையாக
சித்திரை மாதத்து
நிலவாக
மெல்ல அடியெடுத்து
நடக்க மண்மகள்
அறிய மாட்டாள்
அவள் பாதசுவடுகளை

அவளின் வருகை
அவனுக்கு மகிழ்ச்சி

நான்கு விழிகள்
இரு விழிகளாக
இதயமது மயக்கம்
கொள்ளும்
இரு உயிர்களும்
ஓர் உயிரானது

இதயத்தை கொள்ளை
கொண்டவன்
இல்லாமல் போக
சிந்திய கண்ணீரோடு
அவள் நிற்கிறாள்
கைம்பெண்ணாக!!!

எழுதியவர் : உமாபாரதி (13-Jan-19, 12:34 am)
பார்வை : 102

மேலே