தைத்திருநாள் வாழ்த்துக்கள்

தீய எண்ணம் களையும்
நல் எண்ணம் பெருக்கும்
மேன்மை பெருநாளாம்
போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்

தை மகள் மலர்வாள்
தரணி எங்கும் நிறைவாள்
வசந்தங்கள் விச வருவாள்
வளங்கள் அள்ளித்தருவாள்

ஆதவன் வருகையில் நாணி
முற்றிய செங்கதிர் தலைசாய்த்து
உழவன் உவகையால் திளைக்கும்
உன்னத பெருநாளாம் பொங்கல்

பச்சரிசி பால் பொங்க
நாட்டுக்காய்கள் நளினமாய் சமைத்து
விளைந்ததை படையலிட்டு விருந்தாக்கி
ஆதவனுக்கு வந்தனம் செய்வோமின்று
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உழுத கால்நடைக்கும்
உழவு உபகரணங்களுக்கும்
உளமார நன்றி பாராட்டும்
உன்னத திருநாளாகும்
மாட்டுப்பொங்கல்

மாட்டை குளிப்பாட்டி
கொம்பிற்கு வர்ணமிட்டு
அழகாக அலங்கரித்து
வெயில் மழை பாராமல்
வேலை செய்தாய் செல்லமே
கோடான கோடி நன்றியுமக்கு
என்று அதற்கு பிடித்ததை
உண்ண கொடுத்து
ஓய்வு கொடுத்து
பாசம் பரிமாறும்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நட்பு நாடி
உறவு பாராட்டும்
சொந்தங்கள் கூடி
இன்பம் கூட்டி
மனங்கள் மகிழ்ச்சியுற
காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவர்க்கும்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (14-Jan-19, 9:49 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 651

மேலே