தையினை தழைத்திட செய்திடுவோம்

மகத்துவம் பெற்றது இத் தமிழ் மண்
மாடுகளின் பாதம் பட்டு பதம் பெற்றதால்

சகலமும் சாதாரணமாய் சஞ்சாரம் செய்கையில்
பவழமும் பொன்னுமாய் விளைவித்தது இம்மண்

சயனத்தை துறந்து வான் அயனம் பொழிந்ததால்
தேன் மழையை புசித்த நிலமகள் செழித்தாள்

உழைத்தவன் இல்லம் மகிழ்ச்சியில் மலராய் விரிய
மனைவர வேண்டி நெல் மகள் நெகிழ்ச்சியில் இருக்க

உழைப்பின் அழற்சியால் சோர்ந்திருந்த விவசாயி
குதிராய் குவிந்த நெல்மணிகளால் மகிழ்ந்தான்

குழந்தையாய் நினைத்து வளர்த்தவன் முதுகில்
குதிரான நெல் மகள் அவன் இல்லம் நோக்கி

குஷியாய் குதுகலித்தவாரே கும்மியுடன் - குடும்பத்தில்
குங்குமம் மஞ்சள் சூடி, சூடத்தோடே குடியேறினாள் பவுனாய் விளைந்த நெல் மணிகளுக்கு
பட்டாபிஷேகம் செய்ய நினைத்த விவசாயி

கவனமாய் நாள் பார்த்து இப்புவனமே போற்ற
புது பானையில் பொங்கலிட்டு பெரும் பேரு பெற்றான்

தோழனாய் இருந்த ஏர் எருதுகளுக்கு - இந்த
அகிலமே போற்றும் ஆற்றல் மிகு விழா எடுத்தான்

பொங்கலோ பொங்கல் என்று அங்கம் குளிர
புது கீதம் பாடி தையினை தழைத்திட செய்திடுவோம்.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Jan-19, 10:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 3066

மேலே