அறத்தின் பொங்கல்
புதுப்பானையில்
பொங்கலோடு சேர்த்து
நதிக் காவிரியில்
நாள்தோறும்
நீர்வெள்ளம் பொங்கட்டும் !
அதைத் தடுக்கின்ற காரணிகள்
அடுப்பில் விழுந்த
துரும்பெனப்
பொசுங்கட்டும் !
சபரிமலையில்
சக மனுஷிகள்
மீதான வன்முறை
மங்கட்டும் !
மாதவிடாய்
தீட்டென்று எண்ணும்
மனநோய்
மறையட்டும் !
மனித
நேயத்தைவிட
மதமே
பெரிதெனக் கருதும்
மாய மனங்களில்
மனிதம்
மா இருள் போக்கும்
ஞாயிறாய் உதிக்கட்டும் !
வேறுவேறு சாதிகள்
தமிழர் இல்லை
வேறுபடாத நாமே
தமிழர் என்னும்
மெய்க்கரும்பின் தித்திப்பு
உங்கள் மேனியெங்கும்
பரவட்டும் !
ஆதிக்கச் சிந்தனையும்
அடிமைப் பெரும்பிழையும்
தைச்சூரியன் தணல்பட்டுப்
போகியெனப் போகட்டும் !
இலவசங்கள் இல்லாத
அரசியல் தோட்டத்தில் உழைப்பின் கரும்புகள் உண்மையாய் விளையட்டும் !
எதிர்காலப் பூசனிகள்
இளமஞ்சள் கொத்துகள்
வளமான வாழைகள்
வயல்நெல்லின் கதிர்கள்
இனிப் பேதமையில்லாத
பெரிய மனங்கள்
பயிரிட்டால் மட்டுமே
பசுமையாய்ச் செழிக்கட்டும் !
அதுவரை
நாம் மனிதரென்ற
அடிப்படை நினைப்பு
ஏர்முனையாய் உழுது
நம் மனவயல்களைப்
பக்குவப்படுத்தட்டும் !
வாழிய
வேளாண் திருநாள் !
பொங்குக
அறத்தின் பொங்கல் !
🎋🌞🎋🌼🎋🌞🎋