கன்னி வழிபாட்டுப் பாமாலை மரபுப் பாடல்கள் ------------by செம்மை நதிராசா Author-------------------- நூல் விமர்சனம்

வழிபடு தெய்வமாகிய கன்னிக்குச் சாத்தப்படும் செழுந் தமிழ்ப் பாமாலை இது. இதன் பாடல்கள் அனைத்தும் தரவு கொச்சகக் கலிப்பா என்னும் யாப்பினால் அமைந்துள்ளன. முன்னிலைப் பராவல் என்னும் முறையின. கன்னியின் நலன்கள் பலவாறு விதந்து காணப்பட்டவற்றை ஒருமுகமாக்கியுள்ளது இந்நூல்.

இப் பாடல்களை எழுதி முடித்து, மதிப்பிற்கும், போற்று தலுக்கும் உரியவரும் கோ. வெ . நா கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவரும், எங்கள் கம்பன் கழகத் தலைவருள் ஒருவரும் ஆன முனைவர் மு. சிங்காரவேலனார் எம். ஏ. எம்.பில்., பி.எச்டி அவர்களிடம் காட்டினேன். வேண்டிய திருத்தம் செய்து தந்துள்ளார். அன்னார்க்கு என் நன்றி என்றும் உரித்தாகும்.

கன்னி. நம் முன்னோரின் வழியில் வந்தவள். இறைவி யாகி இன்றும் நம் மீது தன் அன்பைச் சொரிபவள். அவளின் அன்புக்குப் பாத்திரர் ஆகி, அவளின் அருளையும் காப்பையும் பெற்றுக் கடைத்தேறும் வழியைக் காண்பதற்கு இக் கன்னி வழிபாட்டுப் பாமாலை உறுதுணையாக இருக்கும்.

அனைவரும் ஒருசேரச் சேர்ந்து பாடுவதற்கு ஏற்பாக இந் நூற்பாக்கள் விளங்குவதை உணரலாம். ஒருவர், முதல் இருசீர் களைப் பாட, என்ற முறையிலும் முற்றுறப் பாடிப் பரவுதற்கு ஏற்ப பாகவும் விளங்குகின்றன. இறைவியின் சிறப்புகள் யாவும் அவளுடன் இணைந்துள்ள கன்னிக்கும் உரித்தானவையே. இங்ஙனம் நாராயணியாகவும் சக்தியாகவும் இந்துமத அடிப்படைத் தத்துவங் களைத் தாங்கியவளாகவும் விளங்கி நமக்கு அருளுகிறாள்.

பரம் என்பது பொதுப் பெயர்; பரன் என்பது ஆண் பால்; பரை என்பது பெண்பால். குலாம்பரை என்பவள் அவ்வக் குடிகளுக்கே உரியவள். எனினும் தத்துவக் கருத்துகள், அனைத்துத் தெய்வங்களுக்கும் உரியனவேயாம்.

வானாக விரிந்துள்ள தெய்வத்தை வணங்குகிறோம். அவ் வானம் இரவில் கருமையாகவும் பகலில் நீலமாகவும் தோற்றுகிறது. வானம் என்பது வெற்றிடம் என்றே அறிகிறோம். ஒன்றுமில்லாத வெளி. அவ் வெளிக்குள்தான் எத்தனை எத்தனை அண்டங்கள்! இப்பூமி அவ் வெளியில் சுழன்று வருகின்ற ஒரு கோள். ஆகவே பூமிக்கு மேல் இருக்கின்ற 'வெளி' வானம் என்றும் (வானமே! வையமே! என்னும் நூலுள் இக் கருத்து இடம் பெற்றுள்ளது) அது : நிறமற்றது என்றும் அறிகிறோம். ஒ! இறையை நாம் இவ்வாறல்லவா காண்கிறோம்.

கும்பமதி (மாசி) யில், காருவாவுக்கு(அமாவாசை) முந்தைய சதுர்த்தசியில் நாம் செய்யும் வழிபாடு இவ்வாறு வானை எட்டுகிறது. நாம் வானில் தான் உள்ளோம். வான் நம் வசத்திலேயே உள்ளது. 'வெட்டவெளி' நம் அன்னை! அவளுள் நாம்! ஒப்பிலா உண்மையை உற்ற பெற்றி அன்றோ இது! அளப்பறும் சக்தி நல்லாள், தன் வயிற்றில் நமைச் சுமந்து, நமக்குத் தன் அருளால் உணவூட்டி, உணர்வூட்டி வாழ்விக்கிறாள் என்ற எண்ணமே எழுகிறது.

'இருள் முழுமையானது; ஒளி வந்து செல்லக் கூடியது. ஒளி வரும் போது இருள் போய்விடாது. அது, ஒளியுடன் இரண்டறக் கலந்து அதனுடன் ஒன்றி விளங்கி வருகிறது. இதனை அறிகின்ற அறிவே அறிவு; இவ் உண்மையை யான் எழுதி வெளியிட்டுள்ள குழந்தையர்க்கான பாவாலான தேன் சொட்டுகள், துதிப்பாடல் களான வான் மெட்டுகள், உரைவீச்சுகளால் ஆன சுடரும் இருட்டுகள் ஆகிய நூல்களுள் சிறப்புற இடம் பெறச் செய்துள்ளேன்: அதுவே இந் நூலுக்கும் அடிப்படையாகும். இருளுக்கு நாம் செய்யும் வழிபாடு இதில் இடம் பெற்றுள்ளது, என்று அறிக.

பரம் பொருளை நிறை கலசத்தில் வைத்து வழிபடும் மாண் பும் இந் நூலுள் காட்டப்பட்டுள்ளது.

முழு முதலாகிய இறைவியை வழிபடுதல் மூலம் நாம் நம்மை - இறைநெறிக்கு உட்படுத்திக் கொள்கிறோம். அதன் மூலம் இறைத் தன்மையை நம்முள் நிறைவித்துக் கொள்கிறோம். அதனால் உற்ற இறைச் சக்தியினால் வாழ்வு நெறிப்படுவதுடன் வளப்படுகிறது என்பதை உணர்வோமாக.

எழுதியவர் : (16-Jan-19, 8:25 pm)
பார்வை : 65

மேலே