சாத்தானெனும் யாத்ரீகன்

சாத்தானெனும் யாத்ரீகன்

இவ்வளவு நாளாய் கலகலப்பாய் இருந்த அந்த வீடு,
இன்று என்னவோ கவலை ரேகையை முகத்தில் வரைந்திருந்தது..
உள்ளே எட்டி பார்த்தேன்.
ஒரு வாலிபன் தன் மனைவியிடம் பிரிய மனமில்லாமல் பிரியாவிடை பெற உரையாடி கொண்டிருந்தான்..
அழாத செல்லம் ஒரு இரண்டு வருடத்தில் உன்னை பார்க்க ஓடி வந்துருவேன்.
இந்த ஊரில் நாமும் காசு பணத்துடன் கடன் இல்லாமல் கௌரவமாக வாழ வேண்டாமா..
கடனை அடைத்து விட்டு என் ஆருயிர் மனைவிக்கு
என் கையால ஒரு தங்க தாலி செயினாச்சும் வாங்கி போட்டு அழகு பார்க்க வேண்டும்..
புன்னகையோடு என்னை அனுப்பி வை என்று தன் கண்ணீரை லாகவமாய் மறைத்து கொண்டான்.

அம்மாவின் நெற்றி முத்தத்தில் பிறந்த பாலகனை போல் உணர்ந்தான்.
தந்தையின் அறிவுரையையும், நம்பிக்கையையும் நெஞ்சில் சுமந்து கொண்டான்..
சொந்தத்தையும் சொந்த மண்ணையும் விட்டு கிளம்பினான்.
சில உடுப்புகளோடு..
வண்டியில் ஏறி கையசைத்து தெருவை கடக்கும் போது
ஒரு புள்ளியாய் மறைந்து போயினர் அவன் குடும்பத்தினர்..

வானூர்தி கந்தக பூமியை அடைந்ததும்,
அனல் காற்று வீசி அவனை வரவேற்றது..
உலை கொதித்து நெஞ்சில் தெறித்தது போலிருந்தது..
அவனுக்காய் ஒதுக்கப்பட்ட அறையின் அவனை போலவே ஆறேழு பேர் அடைக்கலமாயிருந்தனர்.
செய்யாத தப்பிற்க்கு பல வருடமாய் விசாரணை கைதியாய் அடைத்தது போலிருந்தது அவர்களை பார்க்கும் போது,.
வெளிச்சத்தை கண்ட விட்டில் பூச்சிக்கு தெரியவில்லை அது நெருப்பு குண்டமென்று..

நாட்கள் ஒவ்வொன்றும் அவனை நாதியற்றவன் போல தனிமையை உணரச்செய்தது.
கடிதங்களில் கண்ணீரை எப்படி நிரப்புவது.!!!
தொலைபேசியில் மாதமொரு முறை மனப்போராட்டத்தை மறைத்து பேசி கொண்டான்.
என்னங்க நான் மூனு மாசம் என்றவளினை தூக்கி கொண்டாடனும் போலிருந்தது.
சந்தோசமும்,துக்கமும் நாலு சுவர்களுக்குள் அடங்கிவிட்டது.
சாப்பாட்டை மிஞ்சம் பிடிச்சு,
சாதி சனங்களை பாராமல் கடனுக்காய் காசுகளை குருவி போல சேர்தது,
தானோ எறும்பாய் இளைத்து போயிருந்தான்.
பத்து மாதங்களில் அவள் ஈன்றெடுத்த மகவை காண முடியாது மறுங்கி மூலையில் முடங்கி போயிருந்தான்..
காலங்கள் கரைந்தது,பிரசவ செலவு,குழந்தைக்கு செலவு,நன்மை துன்மை நாலுக்குமாய் இரண்டென்று சொல்லி,அஞ்சு வருசமாயிற்று..

கடனும் காலமும் காலாவதியாகி கண்கள் மனைவி பிள்ளையை தேடி தவித்தது..
ஆசையுடன் தாலி செயினும்,புள்ளைக்கோர் சட்டையும் எடுத்து பந்துசாய் வைத்து கொண்டான்..
அவளுக்கு தெரியாமல் அதிர்ச்சியளிக்க சொல்லாமல் கொள்ளாமல் மூட்டை முடிச்சுகளை கட்டினான்..
ஊருக்கு செல்லும் சந்தோசத்தில் இருப்பு கொள்ளாமல் கற்பனையில் மனைவி பிள்ளையை பார்த்து என்ன பேசலாம் என்று பலவாறு நினைத்து கொண்டான்..
தாய்நாடு காற்றை உள்ளிழுத்து ஆசுவாச படுத்தினான்.
வரும் வழியெல்லாம் பழைய நினைவுகள் அலைக்கழித்தது..
கதவை தட்டினான்..
திறந்து பார்த்ததும் அம்மா என்று உள்ளே ஓடினான் பையன்..
மனைவி வருவாளென கண் தேடினான்.
அம்மா ஒரு ஒத்த ரூபாய் தாம்மா.
வெளியே புதிதாய் ஒரு பிச்சைகாரர் நிற்கிறார் என்றவாறு காசு வாங்கி அவன் கையில் திணித்தான்.
அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது.
அவன் இறந்த பிறகு நெற்றியில் ஒட்டும் காசு போல் தெரிந்தது..
அந்த ஒற்றை ரூபா நாணயம்..
வாழும் போதே நரக வேதனையை அடைந்து விட்டாய்.
இனி நானெப்படி இன்னொரு நரக வேதனையை தருவேன் என்றபடி சாத்தான் திரும்பி சென்றான்.

எழுதியவர் : சையது சேக் (22-Jan-19, 11:25 am)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 31

மேலே