புது மாப்புள்ள

புது மாப்புள்ள

அவ போய் சேந்து இன்னும் ஆறு மாசம் ஆகல்ல. அதுக்குள்ள ரெண்டு பேரு வந்துட்டாளுகள் உன்ன பங்கு போட வந்தவளில் ஒருத்தி கூட உன் மூணு பிள்ளைக்கும் அம்மாவ வரல்ல .
ஊரெல்லாம் கத வந்துட்டு
நெருப்பில்லாம புக வருமா?
நீ வெச்ச நெருப்பு தான்
நெசமா போச்சு .

கண்ணெல்லாம் மை வைச்சு
நெஞ்சுக்குள்ள அவ நெனப்ப தச்சு
பருவத்துக்கு முதலே
நேசம் வளத்த கத என்ன ஆச்சு
பதினஞ்சு வருசம் வாழ்க்க நடத்தி
பக்குவமா உன் மனசுக்கு ஏத்த பொஞ்சாதி ஆனவ தான் உன்ன பாதியில விட்டு
கண் மூடினா.

உசுரெல்லாம் நீ தானே
அவ உடம்புக்குள்ள நரம்பானாய்
உன் உழப்பு போதாது
ஒன்னுக்குமே உதவாதுன்னு
உன் குடும்பம் தட்டிக் கழிக்க
என் புருசன் எனக்கு ராசா தான்
கையில காசு இல்லாட்டியும் என் மடி
மெத்தையில அவர் தல வெச்சு தூங்கும்
போது நானும் தான் ராணி ஆகுவேன்
என அவ உன் மனசு நோகாம
உனக்கு உத்தமியா வாழ்ந்துருந்தா.

அவக்கு முதல் நீ போய் சேந்துருந்தா
வெள்ளப் புடவ உடுப்பாட்டி ஒதுங்கி ஒடுங்கிப் போயிருப்பா உன் பொஞ்சாதி
அவ நெஞ்சுக்குழி நெனப்பெல்லாம்
உன்ன எண்ணி தவிச்சிருக்கும்
தாங்காத வேதனையில உன் கூட
உடன்கட்டை ஏறியிருப்பா

வெச்ச நேசம் உண்மை ஆனா
அவ போன பின்னாடி
உன் அசலா பெத்து வெச்ச பொம்பள புள்ளைங்களுக்கு நீ தாயுமாகி இருப்பாய்
உன் வசதிக்கு ஏத்தபடி
உனக்கு இன்னும் ரெண்டு தேவயாச்சு
கடைசில கஞ்சி ஊத்த
யாரு வருவான்னு நீயே பார்த்துக்குவாய்.

என்னமோ மனசு கேக்கல
பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்புளயாம்..
ஊரறிஞ்ச கத தானே
இருந்தாலும் என் மனசு ஏத்துக்கல
ஏன்னா நானும் ஒரு பொம்பள.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (24-Jan-19, 9:46 pm)
பார்வை : 72

மேலே