அலைகள் உணர்த்திய மெஞ்ஞானம்

தவமிருந்து பெற்ற ஞானம் தலைமறைவானதோ கானகம் சென்றே?

வானகம் தாண்டி பறந்த மெஞ்ஞானம் வேகமெடுத்து,
சக்தியொன்றே சகலத்தின் ஆதிமூலமாய், காண்பவையொல்லாம் அச்சக்தியின் திரிபாய்,
அலையலையாய் பரவ அலைகள் அறியவில்லை தாம் சக்தியின் உருவமென்று.

தொண்டு தொண்டு செய்து தன் தொண்டை வரை உணவு உண்டு மயங்கி மமதை ஏறிய சிறு மூளையின் செயல்பாட்டில் தான் மனித அலைகள் அல்லாடுகின்றன அறியாமை என்னும் பிணிபிடித்து.

நட்ட நடு பெருங்கடலிலே பேரலைகள் அதிகமில்லை,
கரையை நெருங்கிய நேரத்தில் பேரலைகளுக்கு கணக்கில்லை,
கரை கண்ட செருக்கிலே அங்கே என்னவொரு ஆர்ப்பாட்டம்!
ஆட்டம்! பாட்டம்!
கொண்டாட்டம்!
கரை தொட்டு மீண்டும் கடலில் வீழ்வதை அறியாமலே, பிறவிப்பெருங்கடல் நீந்தி பெருஞ்செருக்கோடு கரையை அடைந்து நிலை பெறுவதும் சாத்தியமில்லை.

ஆடி அடங்கி, ஆடி அடங்கி, தொடரும் அலைகளைப் போன்ற அலைக்கழிக்கும் வாழ்வில் ஆதிமூலமாகிய சக்தியை உணர்ந்து சரணடைதலே நித்திய ஆனந்தம்,
நிரந்தரமான அமைதி.
புரியாது காலம் போக்கி
பொய்யர்கள் அடி பணிந்தால் பொல்லாத பாழ்நரகாகும் இவ்வுலக வாழ்வே.
மெஞ்ஞானம் உணர்ந்த பின்பும் வீணான வாதங்கள் நம்மை அஞ்ஞானத்துள்ளே சிறை வைக்கும் என்பது சித்தன் வாக்கு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Jan-19, 1:38 am)
பார்வை : 1644

மேலே