கடல் அன்னை

கடல் அன்னை
வானை உள்வாங்கி வரைந்திட்ட ஓவியம்
மீனை மடிக்கொண்டு மிதக்கின்ற கோலம்
நீண்ட அலைக்கரம் நிறம் மாறி கரைசேரும்
மீண்டு உள்வாங்கி மீதம் நீல நிறமாகும்

அசைந்தாடும் நீலவண்ண கட்டில்-அதில்
இசைந்தாடும் இளந்தென்றல் புதுமெட்டில்
ஒருபோதும் உறங்காத பெரு ஆழி நீயே
ஓடம் கொண்டோர் பசிதீரும் உன்னாலே

இளந்தென்றல் நடைபோடும் நாடக மேடை
கலங்கரை விளக்கம் கரை காட்டும் பாதை
இமையில்லா உனக்குள் இத்தனை கண்ணீர்
சுமை தாங்கும் சுகமேனி தானே உன் தண்ணீர்

அலைக்குள்ளும் விண்மீனாய் மீன்கள் துள்ளும்
சளைக்காத காதலர் கால்தனை அலைகள் கொள்ளும்

அலைகள் பிறக்கும் அழுத்தும் காற்றால் அசைந்தேதான்
மலைபோன்ற மழைத்துளிகள் மாயமாகும் உன்னில்தான்

வல்லவன் இறைவன் கட்டிய எழில்மிகு பாலம்
புள்ளிகள் இன்றி வரைந்திட்ட புதுமையின் கோலம்

தினந்தோறும் பகலவனை பெற்றெடுக்கும் தாயே
மறந்தேனும் நிறுத்திவிட்டால் மண்ணுலகின் சாவே

எழுதியவர் : ilaval (29-Jan-19, 11:48 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : kadal annai
பார்வை : 587

மேலே