தசரத மாமன்னர்கள்

தசரதமா மன்னர்கள் இங்கே
தவித்து நிற்கிறார்கள் காண்!
எவரையும் அம்பெய்தி கொல்லவில்லை,
எவராலும் சபிக்கவும் படவில்லை
எனினும்,
தசரதனாக மாறி புவி மேல்
தவித்து நிற்கின்றார் பார்!
பெற்ற புத்திரர்களைப்
பிரிந்து காத்து நிற்கின்றார்!
காகுந்தன் அன்று நாடு
கடத்தப்பட்டதால் வருந்தினான்
முடி சூடிய மாமன்னன்.
முடிசூடா மன்னர்களோ இன்று
நாடு கடந்து வாழும்
தம் பிள்ளைகளை எண்ணி
ஏங்கி நிற்கின்றார்.
ஊணினால் உண்டாகும் பாசம்
உறவாகும் பாசம் கண்டோம்.
மாமன், அத்தை என
மாறத உறவுகள் உண்டு-
இப்பொழுதோ புது உறவு
இங்கு ஒன்று உண்டு - அதுதான்
கிரகாஹாம் பெல் நம்முடன்
கொண்ட உறவு!
அவனே மாமனுமானான்! மாமியுமானான்!
அந்த மாமனிதன் இந்தியாவில்
அவதரித்திருந்தால், கோவில்கள்பல
அவனுக்கு தோன்றியிருக்கும்!
ஆறுகால பூசைகள் நடந்திருக்கும்!
ஆளு ர மாலைகள் ஆயிரம்
அன்புடனே அவன் மேல்விழுந்திருக்கும்!
கடற்கரையில் சிலைகள் தோன்றியிருக்கும்!
காக்கப்பட்டிருக்கும் யாவராலும் கடத்தப்படாமல்!
வீட்டில் அடிக்கும் பூசை மணிஒலியைவிட
விடாமல் நீண்டு அடிக்கும் தொலைபேசி ஒலியே
சொர்கமென சந்தோஷப்படுத்துகிறது!
சோர்ந்த முகத்தில் சிரிப்பைத் தோற்றுவிக்கிறது!
புதுவரவு இந்த உறவு!
புத்துணர்வூட்டும் தொலைபேசி உறவு!
இந்த உறவு அன்று
அந்த தசரதனுக்கு இருந்திருந்தால்,
அறுபதினாயிரமாண்டு ஆட்சிக்குப்பின்
அநியாயமாய் உயிர்துறந்திருக்கமாட்டானோ?
அந்த பிள்ளை பாசம் அவன் காதில்
தொலைபேசி மணியாய் ஒலித்திருக்குமே!
தவறாமல் அவனை உயிர்ப்பித்திருக்குமே!


சாந்தா வெங்கட்.

எழுதியவர் : சாந்தா வெங்கட் (4-Feb-19, 8:43 am)
சேர்த்தது : சாந்தா
பார்வை : 120

மேலே