விட்டுக்கொடு

விட்டுக்கொடு
இதயம் தனது ஓய்வை
விட்டுக்கொடுத்தால் தான்
ஒரு நாளைக்கு
மூன்றாயிரத்து அறுநூற்று எண்பத்து ஒன்பது முறை துடித்து
நம்மை உயிரோடு உலவ வைக்கிறது !

உதிரம் கூட தன் ஓய்வை விட்டுக்கொடுத்தால் தான்
ஒரு நாளைக்கு
பதினாறு இலட்சத்து எண்பதாயிரம் மைல்கள் தூரம்
உதிரத்தை நம் உடலில் சுழற்றி
நம்மை உயிர் வாழ உவகை செய்கிறது !

நுரையீரல் தனது தனது ஓய்வை
விட்டுக்கொடுத்தால் தான்
இருபத்து மூன்றாயிரத்து நாற்பது முறை
சுருங்கி விரிந்து நம்மை சுவாசிக்க வைக்கிறது !

அஃறிணையான இவையெல்லாம் விட்டுக்கொடுக்கும்போது
உயர்திணையான நாம் ஏன் மறந்தோம் விட்டுக்கொடுக்க ?

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்திருந்தால்
விவாகரத்து என்னும் வெளிநாட்டுப் பேயை
விரட்டி அடித்திருப்போம் !

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்திருந்தால்
வழித்தகராறுக்காக உயிர்ப்பலி வாங்கியிருக்க மாட்டோம் !

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்திருந்தால்
வீதியெங்கும் விபத்துக்கள்
விஸ்வரூபம் எடுத்திருக்காது !

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்திருந்தால்
தோப்புமரங்களாய் இருந்த உறவுகள்
தனிமரமாய் தவித்திருக்காது !

விட்டுக்கொடுக்கத் தெரியாமல் தான்
மன அழுத்தத்திற்கு விலைபோய்
நடைபிணங்களாய் அலைகிறோம் !

என்று நீ விட்டுக்கொடுக்கக் கற்றுக்கொள்கிறாயோ
அன்று தான் நீ மனிதன் !

விட்டுக்கொடு கெட்டுபோகமாட்டாய்
கெட்டுபோவதற்கோ நீ விட்டுக்கொடுக்கமாட்டாய் !

தான் என்ற அகந்தையை விட்டுக்கொடு
தரணி போற்ற வாழ்வாய் !

எழுதியவர் : புலவர் க.சுமதி (6-Feb-19, 11:46 am)
சேர்த்தது : PULAVARSUMATHI
பார்வை : 372

மேலே