மென்மையானவள் - தொடர்ச்சி

" நீங்க என்ன படிச்சிருக்கீங்க தம்பி? ",என்றார் பலவேசம்.

" நான் தகவல் தொழிற்நுட்பம் இன்சினியரிங் படிச்சிருக்கேன் அங்கிள். ",என்றான் மகேஷ்.

" இப்போ என்ன வேலை பார்க்கிறீங்க? ",என்றார் பலவேசம்.

" படித்த படிப்பிற்கு ஒரு ஐடி கம்பேனியில் வேலைக்கு சேர்ந்தேன்.
அங்க உள்ள சூழல் பிடிக்காத காரணத்தால் வேலையை விட்டு நின்று விட்டேன் அங்கிள். இப்போதைக்கு வெட்டியாதான் இருக்கேன். ",என்றான் மகேஷ்.

" கிடைத்த வேலையை உதறிட்டிங்க. அப்புறம் என்ன செய்வதாக உத்தேசம்? ", என்றார் பலவேசம்.

இந்த கேள்வி சற்று எக்காளமான தோரணையுடன் வெளிப்பட மகேஷ் சற்று மௌனமாக இருந்தான்.

பிறகு, " இனி பாட்டி வீட்டில் தங்கி, எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யப் போகிறேன். ",என்றான் மகேஷ்.

" அட என்ன பா? விவசாயம் செய்யப் போகிறேன்னு அவ்வளவு ஈசியா சொல்லிட்ட! அதில் எவ்வளவு கஷ்டம் உள்ளதென்று தெரியுமா உனக்கு? ",என்றார் பலவேசம்.

" கஷ்டப்படாமல் எவரும் வெற்றியின் எல்லைக் கோட்டை எட்டவில்லை. ", என்றான் மகேஷ்.

" தத்துவம் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் செயல்பட வேண்டும். ",என்றார் பலவேசம்.

" இதற்கு மேல் இவ்விடம் இருப்பதும் மேலும் பேசுவதும் வீண். ",என்று உணர்ந்த மகேஷ் எழுந்தான்.

சமையல் அறையிலிருந்து வந்த முத்து, " உணவு தயார். இருவரும் சாப்பிட வாங்க. ",என்றாள் நடந்ததை அறியாதவளாய்.

" நான் திருப்தியாக சாப்பிட்டு விட்டேன். ",என்று கூறிய மகேஷ் வீட்டை விட்டு வேகமாக வெளியேறிவிட்டான்.

எதிர்பாராத விதமாக இந்நிகழ்வு நடந்ததை எண்ணி வருத்தப்பட்டார் பலவேசம்.

" என்னாச்சு அப்பா? அவர் ஏன் கோபமாகச் செல்கிறார்? ",என்று காப்பி டம்ளர்களை எடுத்தவாறு கேட்டாள் முத்து.

" சும்மா தான் பேசிட்டு இருந்தோம். ஏதோ அவசர வேலை போல. அதான் இப்படி எழுந்து சென்றுவிட்டார். ",என்று பொய் கூறினார், தான் நடந்து கொண்ட விதம் தெரிந்தால் தன் மகள் வருத்தப்படுவாள் என்பதற்காக.

" சரி! நீங்க சாப்பிட வாங்க அப்பா. காலையில சாப்பிட்டது. ",என்றாள் முத்து.

இருவரும் சாப்பிட்டனர்.
தன் தந்தையின் முகம் வழக்கத்திற்கு மாறாக சற்று வாடிக் காணப்பட்டதைக் கண்ட முத்து ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை யூகித்து கொண்டாள்.

தந்தை சாப்பிட்டு முடித்து சென்றதும் கேரியர் உணவை எடுத்துக் கொண்டு பாப்பம்மா பாட்டி வீட்டிற்குச் சென்றாள்.

அங்கு பாட்டி மட்டும் இருந்தாங்க.

" என்னம்மா கேரியரோட வந்துருக்க? ",என்றாங்க பாட்டி.

" உங்களுக்குத் தான் பாட்டி சாப்பாடு கொண்டுவந்தேன். ",என்றாள் முத்து பாட்டிக்கு தெரிய வேண்டாம் என்பதற்காக.

ஆனால் பாட்டிக்கு நடந்ததை எல்லாம் மகேஷ் சொல்லி விட்டான்.
அதோட முத்துவுக்கு தெரியாது என்பதையும் சொல்லி இருந்தான்.

" அந்த கேரியரை சாப்பாட்டு அறையில் வை. கொல்லைப் புறத்தில் மகேஷ் இருப்பான். அவனை கூட்டிட்டு வா. ",என்றாங்க பாப்பம்மா பாட்டி.

முத்து சாப்பாட்டு அறையில் கேரியரை வைத்துவிட்டு கொல்லைப்புறம் சென்றாள்.

அங்கே கேணிக்கு அருகில் இருந்த கல்லில் அமர்ந்திருந்தான் மகேஷ்.

மகேஷ் முன்னால் சென்று நின்று, " பாட்டி சாப்பிட கூப்பிடுறாங்க. ",என்றாள் முத்து.

மகேஷ் அமைதியாக இருந்தான்.

அதை கவனித்த முத்து, " என் அப்பா உங்க கிட்ட என்ன பேசுனாங்கனு தெரியாது. ஆனால், என் அப்பா மேல உள்ள கோபத்தில் என்னை தண்டிக்காதீங்க. வந்து சாப்பிடுங்க. ",என்றாள் முத்து.
அவள் குரலில் வருத்தமும், உருக்கமும் நிறைந்திருந்தது.

மகேஷ் எழுந்து கை, கால்களை கழுவிவிட்டு சாப்பாட்டு அறைக்குச் சென்றான்.

அங்கு பாட்டி அமர்ந்திருக்க, மகேஷும் அமர, இலையை விரித்து இருவருக்கும் உணவு பரிமாறினாள் முத்து.

பாட்டி சாப்பிட்டாங்க.
மகேஷ் அமைதியாக சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடிந்ததும் மகேஷ் கை கழுவச் சென்றான்.
பின்னாடியே சென்ற முத்து, " சாப்பாடு எப்படி இருந்தது? " என்று கேட்டாள்.

" நல்லா இருந்தது. ",என்று சற்று இறுக்கமாகச் சொன்னான் மகேஷ்.

" அதை சிரிச்சிட்டே சொல்லி இருக்கலாம். ",என்று கூறிவிட்டு சென்றாள் முத்து.

புன்னகை தன்னால் பூத்தது மகேஷின் முகத்தில்.

அன்றை தினம் இனிதாக முடிந்தது.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து தோப்பிற்கு சென்று எலுமிச்சை பழங்களை எல்லாம் பறித்து மூட்டைகளாக கட்டி வைத்தான்.
லாரி வரவழைத்து ஏற்றிவிட்டு மணியைப் பார்த்தான்.
பிற்பகல் இரண்டு மணியைத் தொட்டிருந்தது.

வயிறு தீயாகப் பசித்தது.
அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இரண்டு கை நிறைய தண்ணீரை அள்ளி இருமுறை பருகிவிட்டு வீட்டிற்கு வந்தான்.

வீட்டில் பாட்டியிடம் எலுமிச்சை லோடு ஏற்றி விட்டதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு அமர்ந்தான்.
பாட்டி உணவெடுத்து பரிமாறினாங்க.
நல்லா சாப்பிட்டு அயர்ந்து உறங்கினான்.

தூக்கத்தில் இருந்து எழுந்தவன் உணவு உண்டு உறங்கினான்.

மறுநாள் காலை டிராக்டரை எடுத்துப் போய் சும்மா கிடந்த நிலத்தை எல்லாம் உழுதான்.
அங்கு மண்டிக் கிடந்த புட்கள், செடிகளை எல்லாம் அப்புறப்படுத்தினான்.

மதிய உணவிற்கு பிறகு, சந்தை சென்று இரண்டு பசுமாடுகளை வாங்கி வந்து கட்டினான் மகேஷ். பாப்பம்மா பாட்டிக்கு தன் பேரன் உழைப்பாளி என்பதால் மிக மகழ்ச்சியாக இருந்தது.

இந்த மாற்றத்திற்கு காரணம் முத்து தான்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெறுத்த மகேஷிற்கு முத்துவின் சந்திப்பு தான் ஒருபிடிப்பை ஏற்படுத்தியது.

மாலை பால் கரந்து அதை வீட்டு உபயோகத்திற்கு போக மீதியிருந்த பாலை தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் எடுத்தான்.
வெண்ணெய் கிராமவாசிகளுக்கு குறைந்த விலையில் கொடுத்தான்.
இப்படி பல நாளுக்கு நாள் மகேஷின் ஐடியாக்களும் செயல்பாடுகளும் அதிகாரிக்க, வேலைக்கு ஆட்கள் எடுக்கத் தொடங்கினான்.
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டதால் பல குடும்பங்கள் பயனடையத் தொடங்கின.
ஒரு வருட முடிவில் கிட்டதட்ட 100 பேர்களுக்கு மேல் அவனிடம் வேலையைப் பார்த்தார்கள்.

அந்த ஊரில் திருவிழா வந்தது.

(தொடரும்...)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Feb-19, 2:06 am)
பார்வை : 318

மேலே