கடைசி மனிதர்களின் தீர்மானம்
நாங்கள் யாரிடமும்
சொல்லிக் கொள்ளாமல்
கிளம்புகிறோம்.
போதையில் மிதக்கும்
பெரும் குடிகாரனாக
இந்த நகரம்
போய் கொண்டிருக்கிறது.
உணவை சேமிக்கும்
எறும்பு கூட்டத்தைப் போல
நாங்கள்
காணாமல் போகிறோம்..
ஆயிரம் மிருகங்கள்
எலும்பு சதைகளோடு
எங்களை
வாயில் கவ்விக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கின்றன...
பகல் தொடங்கி
இரவில் முடியும்
ஈசலை போல
நாங்கள் மறைந்து போகிறோம்..
கசங்கிய குப்பையாக
எங்களை
ஆயிரம் கைகள்
தூக்கி எறிகின்றன...
நாங்கள்
நிராதரவற்றவர்கள் ;
உங்களின்
யாருக்கேனும்
மனசாட்சியிலிருந்தால்
நாங்கள் போய்விட்ட பிறகான
பாதையில்
விதைகளை தூவுங்கள்...
நாங்கள் என்றுமே
விவசாத்தினால்
பாதை அமைப்பவர்கள்.
வாழ்க்கையையும் கூட தான்... !