நீ ஒரு மாற்றம்
வினாக்களே விடையாகின்றன உன் விழிகளின் திருப்பங்களில்
வளைந்தும் நெளிந்தும் ஓரமாய் வழியும் அலைகள்
ஆயிரம் அர்த்தங்களில் மொழி பெயர்க்கின்றன அந்த விடைகளை!
அதன் மொழி புரியாமல் நிற்கும் என் தோரணைக்கு
உன் மென் இதழ்களின் மௌனம் ,
என் இதயத்தின் அறைகளின்
எண்ணிக்கையை கூட்டி கொண்டே போகிறது அளவில்லாமல் ...
சொல்வதற்கு எளிதாய் இருக்கும்
"நீ எனக்கு வேண்டாம்" என்ற வார்த்தைகளை
சொல்ல உன் பூவிதழ்களுக்கு எவ்வளவு வலியதாய் இருந்திருக்கும்
என்பதை நான் அறிந்தாலும் அதை கிரகிக்கும் திறன்
எனக்குண்டா என்று நீ அறிவாயா பெண்ணே
கேட்டதெல்லாம் கிடைக்குமா ? எனும்
கேள்வியின் விடைப்பகுதியில் "இல்லை " என்பதனை
எவ்வளவு வேகமாய் பூர்த்தி செய்து
விடைத்தாளை என் விழிமுன்னே நீட்டி விட்டாய் !
வேண்டி பெறுவதில்லை இந்த காதல்
ஒட்டு மொத்த தனிமையின் மரணப்போராட்டம் என்பதை
தெரிந்தும் என் மனம் "நீதான்" என்று
நீ வரும் போதெல்லாம் தீக்குளிக்கிறது
ஒரு ஆண் முகம் அழுவது அவமானம் என்பதில்
தொடங்கி ஒவ்வொரு வலியிலும் அதன் ஆழத்தை
எவ்வளவு எளிதாய் காட்டி விட்டு செல்கிறது உன் கோபம்
எப்போதும் போல வந்து போகின்ற போது ஒவ்வொரு நாட்களின்
அஸ்தமனங்களில் நான்மீண்டு வருவேனா என்கிற
ஆசையை விட நீ மீண்டும் வருவாயா?
பேராசை தான் ஓங்கி எழுகிறது
கோபங்களின் தோய்வில் தான் பரிதாபங்கள்
காளானாய் முளைக்கும் என்பார்கள்
அந்த முளைக்கும் தருணங்களை நான் எதிர்பார்ப்பதில்
எவ்வித தவறில்லை என்றாலும்
வறண்டு போன வயல்வெளியில்
உன் மழை இல்லாமல் எப்படி ?
வானம் பார்த்து வாழ்கிறேன்...
நீயே என் மாற்றம் !