வருடம் -3050
பெரிய நிலைக் கண்ணாடிமுன் நின்று என் கேசத்தை சரிபார்த்துக் கொண்டேன், என்றையும்விட இன்று மிக அழகாக தோன்றுவதாக ஓர் எண்ணம், அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக உடலில் ஒரு சிலிர்ப்பு.
சிறிய கதவை திறந்து கொண்டு சாலையை அடைந்தேன், சாலையில் மனித நடமாட்டம் குறைந்திருந்தது. எங்கோ அவசர ஊர்தியின் ஊ....ஊ..... என்ற அலரல் சத்தம் மட்டுமே, கண்களை மூடிக் கொண்டேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் அவளை சந்திக்கப் போகின்றேன், அவளிடம் பெற்ற அந்த கடைசி முத்தம் நீங்காமல் இன்னும் மனதில். ஒரு சந்தோஷமும், அமைதியும் குடிகொண்ட மனநிலையில் அவளின்இருப்பிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாள் போலும், கதவின் ஓரத்தில் கைகளை முன்புறம் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றிருந்தாள். வீடு ஒன்றும் பெரியதல்ல, அவளுடை முகத்தில் புன்னகை என்னை தன்னுடைய மார்புடன் தழுவிக் கொண்டாள். எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் நானும் அவள் கன்னத்தில் உதடு பதித்தேன்.
உபசரிப்பு பானம் கொடுத்தால், அதனை மெதுவாக உறிஞ்சியபடி, அவளை இரசித்துக் கொண்டே அறையை சுற்றி நோட்டம் விட்டேன், சென்ற முறை வந்து சென்றதற்கும், தற்போதைக்கும் மாற்றம் ஏதும் இல்லை. அவள் என் பார்வைகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் போல் "புதிதாக ஒன்றுமில்லை" என்று கூறினால்.
சரி என்று எழுந்தேன், அவள் அருகிலிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டாள், நான் மெதுவாக அவளிடம் சென்று நெற்றியில் முத்தமிட்டேன், அவளுடை தலையை வருடியபடியே, காது அருகில் இருந்த பொத்தானை அழுத்தினேன் அவளுடைய உடலில் இருந்த மின்சாரம் நின்று போயிருந்தது. ரோபோ மருத்துவரான RX002 வான நான், அவளின் பழுதுகளை சரிசெய்ய ஆரம்பித்தேன்.