சுவை

அவனை ஒரு மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். மிகவும் அழகாகத்தான் இருந்தான். முகத்தில் சதா ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவனை பார்த்தவுடன் எனக்குள் ஏதோ இரசாயன மாற்றங்கள். என்னை கடந்து செல்லும்போது கவனியாதவன் போல் சென்று விடுவான்.

இன்று பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன், அழகாக அலங்கரித்துக் கொண்டு அவனுடைய வரவுக்காக காத்திருந்தேன்.

சந்தித்து பேசியபோதே அவனைப் பற்றி தெரிந்துகொண்டேன், யாருமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதனை. என்னுடன் பேசுவதற்கு பல முறை முயன்றுள்ளதாக சொன்னான். நான் பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதாக புகழ்ந்தான், இரவு நேரங்களில் என்னுடைய இருப்பிடத்தை கடந்து செல்லும் போது பார்க்கமுடியாவிட்டால் மிகவும் சோர்ந்து போவதாகவும் சொன்னான். என்னுடன் தங்குவதற்கு விருப்பமா என்று நேரடியாக கேட்டுவிட்டேன், சிரித்துக் கொண்டே என்னுடன் வந்துவிட்டான்.

அடர்ந்த கருப்பு போர்வை இன்னும் இருகிக்கொண்டிருந்தது, அவன் களைப்பாக இருப்பதாக சொல்லவே அவனுக்கு படுக்கையை காண்பித்துவிட்டு நான் என் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

நேரம் மெதுவாக கரைய ஆரம்பித்தது என்னுடைய தாகத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை மெதுவாக அவனை அணுகினேன், அவனுடை முகம் தூக்கத்திலும் கவர்ச்சியாக இருந்தது. மெதுவாக அவனது நெற்றியை வருடி விட்டபடி முத்தமிட குனிந்தேன், எனக்குள் இருந்து இரண்டு கூர்மையான பற்கள்  கழுத்திலிருந்து  சுவையான இளம் சூடான அவனுடைய இரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்திருந்தது.

எழுதியவர் : சா.மனுவேந்தன் (15-Feb-19, 9:16 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : suvai
பார்வை : 741

மேலே