காதலின் சமாதானம்

ஆணி வார்த்தைகளை
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
என் பசுமனதில் அடித்துச் செல்கிறாய்

எனக்கெனவே உருவானவள் நீயென்பதால்
எனக்கெனவே வழங்கப்பட்ட எல்லா அவமானங்களையும் ஒருங்கே தொகுத்து தருகிறாய்

கோபக் கொடுவாளால் என் உள்ளந்தலை வகிடில் தொடங்கி உனக்கு சொந்தமான பகுதி வரைக்கும் கிழித்து இருகூராக்குகிறாய்

நமக்குள் எந்த இடைவெளியும் இருக்கவேண்டாம்
என்று சொல்லிமுடிப்பதற்குள் சீனச்சுவருக்கு அடித்தளம் இடுகிறாய்

நான் கொஞ்சுவதை அமைதியாய்
உள்வாங்குகிறாய் என நினைத்தால்
தூக்கத்தோடு சேர்ந்துகொண்டு என்னை அவமதிக்கிறாய்

உன்னை நானும் கவனித்துதான் வருகிறேன் உன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இதுவரை ஏற்படவில்லை

நீ நீயாகவே இருக்கிறாய்
நான் நானாகவே இருகிறேன்

காதல் நம்மை
சமாதானப்படுத்திவிடுகிறது.

பாரதிநேசன்
12/02/19
11.47 PM

எழுதியவர் : பாரதிநேசன் (16-Feb-19, 4:52 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 258

மேலே