நாமறியா இரவு
நாமறியா இரவு
குழந்தையின் விசும்பல் சத்தமாய்
இலை உரசி செல்லும் காற்று
இருட்டு பயத்தில் வானம்
வடித்த கண்ணீர்
இலையின் மேல் பனித்துளி
தொடர்ந்து ஊர்ந்த எறும்புகளால்
புலர்ந்த புதிய பாதை
வாளியின் கைப்பிடியில்
வழுக்கி விழும் கம்பளிப்பூச்சி
ஒரேயொரு மழைத்துளியில்
வெள்ளமாகும் ஈசலின் உலகம்
எங்கோ ஒரு இடத்தில்
எதோ ஒரு விதை
வெடித்து தயாராகிறது விருட்சமாக
மழை நின்றபின் இரைதேட
கிளம்பும் ஒரு பூனை
ஒரு தவளையின்
சன்ன சப்தம்
அதற்க்கு சாவுமணி ஆகிறது