நிலவு
சின்னப்பொழுதிலிருந்தே எனக்கும்
வான் நிலவிற்கும் ஓர் தனி ஈடுபாடு
பசுமரத்திலடித்த ஆணிபோல் நினைவு
என் மனதில் அன்று என் வீட்டின் முற்றத்தில்
என்னை தன்மடியில் இருத்தி என் தாய்
நிலவை வா வா வெண்ணிலவே என்று கூப்பிட்டு
என் மகளுக்கு புத்தி சொல்லு அவளை இதோ
நான் ஊட்டும் தயிர்ச்சோறை சாப்பிடச்சொல்லு
என்பாள், நிலவும் சாளரத்துவழியே என்னை
நோக்கி வருவதுபோல் இருக்கும் நானும் அம்மா
தந்த சோற்று சிறு கவளங்களை வேகமாய்
உண்டிடுவேன் அம்மாவும் ஆனந்திப்பாள்
பள்ளிப்பருவம்….. திங்களை தெய்வமென்று
தாய் கூறினாள்; கோயில் செல்லும்போது
நவகிரகங்களில் ஒன்றாய் சந்திரனை
வணங்கிடவைத்தாள் வணங்கினேன் இன்றும்
அவ்வண்ணமே வணங்குகின்றேன் ……..
சித்திராபௌர்ணமி இரவு காவிரி கரையில்
எங்கள் குடும்பம் மணலில் மீது வந்தமர
வித விதமாக அம்மா செய்த அறுசுவை
அன்னங்களை ஆர்வமாய் உண்ண சிறுவர்
நாங்கள் கையில் தட்டோடு...….பௌர்ணமி
நிலவு ஆற்றின்மேலிருந்து கிளம்பி
தன்னொளி பரப்பி பீடு நடை போட்டுவர
அதனழகில் மனம் பறிகொடுத்து நானும்
நிலவை நாங்கள் குழுமி இருந்த இடத்திற்கு
அழைக்க அதுவும் வந்ததே ! இல்லை சிறுமி
நான் அப்படித்தான் நினைத்தேன் ……..
பிராயங்கள் மாற, நான் படித்து ஓர்
விஞானியானேன்… சந்திர மணடலத்தின்
மீது மனிதன் முதல் முதலில் கால் வைக்க
ஆம்ஸ்ட்ராங்கின் விண் வெளி புகைப்படம்
பார்த்தேன் , என் தாய் சொன்ன சந்திரன்
நம் பூமியைப்போல் கல்லும் மண்ணும்
மலைகளுமால் ஆனது என்பது தெளிந்தேன்
இருக்கட்டுமே , என்னைப்படைத்த இறைவன்
அல்லவோ திங்களை படைத்தான்....
பூமியை பூமாதேவி என்கிறோம் சந்திரனும்
ஓர் தேவதையாய் இருப்பதில் என்ன தவறு ?
சந்திரனும் மற்ற கோள்களைப்போல்,
சூரியனைப்போல் தாரகைகள்
பலவற்றைப்போல் அந்தரத்தில்
'அவனால்,ஆடவிடப்பட்டவையே என்று
மனம் தெளிந்தேன் ………
படைப்பில் எல்லாவற்றிலும் அவன்
இருக்கிறான் சிறு துரும்பிலிருந்து……
தங்க நிறத்தில் சதிராடும் நெல் கதிர்கள்
அதனுள் வெள்ளி முத்துக்களாய் புது
அரிசி …….. இப்படி இவற்றை யார்
தந்தார் நமக்கு ….இறைவனல்லவ்வா
முந்திரி பலம் தந்தவன் அதன் கீழ்
பாங்கான பெரும் சுவைத்தரும்
கொட்டையும் அல்லவா வைத்தான் !
பார்க்கும் பொருளில் எல்லாம் அவனே
என் மனம் கவரும் திங்களிலும் அவனே
எனக்கு இன்றும் சந்திரன் நான் கண்டு
மகிழும் பேரழகே ….
இரவில் நீலவானில் வெண்ணிலவோடு
உறவாட என் மனம் எப்போதும் விரும்பும்
நிலவிலா வானைக் கண்டால் என் மனம்
அல்லியைப்போல் வாடிவிடும்
இன்று என் காதலன் இன்னும் என்னைக்
காண வரவில்லை..... நிலவைத்தான்
என் நிலையை அவனிடம் சொல்ல
தூதனுப்ப எண்ணி இருக்கின்றேன் !
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ
எந்தன் கதையை………….
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
