மாற்றமாய் உருவெடு
என்னமோ எழுதி வைத்தான் இறைவன் என் தலையில்.
எழுதியதை திருத்தி எழுதடா என்றே விருந்து வைத்தேன் வாழை இலையில்.
வாழை போல் வாழ வைக்கும் இறைவனை காணவில்லை.
நான் வைத்த விருந்தை உண்ண வருவதற்கும் அவனுக்கு நேரமில்லை.
ஏதப்பா பழனியப்பா!
கோவணத்தோடு நீயிருக்க உன் கோபமே காரணமப்பா.
பாடிய ஔவையின் கண்களுக்கு தெரிந்த நீ என் கண்களுக்கு தெரியாதது ஏனோ அப்பா?
எங்கு வந்து உன்னை காண்பேனோ? மனம் இரங்கி நீயும் கூறப்பா!
ஆழ்கடல் சிப்பிக்குள்ளே முத்தாக நீ இருப்பாயோ?
தாழ்வாரத்துள்ளே நீ இருந்து வீட்டைக் காக்கும் பூட்டானாயோ?
யாரப்பா பூட்டி வைத்தது உன்னை?
காணாது தவிக்கது வைத்தது என்னை?
ஓடாமல் ஒளியாமல் கண் முன்னே வந்து காட்சி விளக்கம் தந்திடு.
என் சந்தேக இருளை ஓட்டி புதிய வெளிச்சம் தந்திடு.
நீயாக வந்திடு. உன்னைவிட வேறேதும் எனக்கென்று நாதியில்லை.
சீக்கிரம் வந்திடு.
என் சித்தத்தை தெளிவாக்கிடு.
சடுதியில் வந்திடு.
சறுக்கி விழுந்த என்னை சட்டென தூக்கிவிடு.
அச்சமென்ற மடமை நீக்கி அலைகடலை கடத்திடு.
நினைத்த இடம் சேர்த்திடு.
அணுவிலே புகுத்திடு.
ஆற்றலாய் தேக்கிடு.
மாற்றமாய் உருவெடு.
அகிலத்தையே அமைதியாய் மாற்றிடு.
ஓம் முருகா ஓம்.