கற்றோற்குச் சென்றஇட மெல்லாம் சிறப்பு – மூதுரை 26
நேரிசை வெண்பா
மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇட மெல்லாம் சிறப்பு. 26 – மூதுரை
பொருளுரை:
அரசனையும், குற்றமில்லாது கல்வி கற்றவனை யும் ஆராய்ந்து பார்த்தால், அரசனைக் காட்டிலும் கல்வி கற்றவனே சிறப்புடையவன் ஆவான்.
அரசனுக்கு தன் நாட்டில் அல்லாமல் வேறு இடங்களில் சிறப்பு கிடையாது. கல்வி கற்றவனுக்கு அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும்.
கருத்து:
அரசனிலும் கல்வி கற்றவனே சிறப்புடையவன்.