பாரதி – ஒலியும் மௌனமும்

பாரதியைப் பற்றி நினைக்கும் போது பெரும்பாலும் அவரை ஓசை-ஒலிகளுடன், சந்தங்களுடன், இடி, மின்னல், மழை போலாட்டம் எதிர்ப்புணர்வு ஆவேசங்களுடன் சம்பந்தப்படுத்தவே தோன்றும். உள்ளேயே இருக்கும் கடவுளுடன் கூட அவரது பேச்சு ஓங்கி உரத்து ஒலிக்கிறது. பாட்டின் ரசிகர்: கவிதையைப் பாட்டு என்றே சொல்லி வந்தவர்: ராக தாளக் கட்டமைப்புகளில் புழங்கியவர் பாரதி.

“ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பம்” எனக் கண்டிருந்தவர். “வெடிப்புறப் பேசு” என்பதையே தமக்குப் படைப்பு நெறியாகக் கொண்டவர்.

தேசியகவியாக, சமூக சீர்திருத்தக் கவியாக, புரட்சிக் கவியாக,அடிமைத்தனத்தையும் கீழ்மையையும் அச்சத்தையும் வறுமையையும் மனிதகுலப் பொது எதிரிகளாகக் கண்டு கவிதைகளால் போரிட்ட போராட்டக் கவியாக, முன்னோடி இல்லாமல் புதிதாகத் தோன்றிய உரத்த ஆளுமை பாரதி. தமக்குள் எப்போதும் சுதந்திரத்தை நிலவ விட்டிருந்தார். மீறல்களுக்குத் தயங்காதவராக இருந்தார். சொந்த வாழ்விலும் கவிதை வாழ்விலும் இலக்கணங்களை மீறினார்: மரபுகளை மீறினார்: தமது காலக் கருத்தோட்டங்களை எளிதாக மீறினார். இந்த மீறல்கள் எல்லாம் வெப்பமாகவும் அதட்டலாகவும் இருக்கின்றன. ‘சீறுவோர்ச் சீறு’, ‘சோதிடந்தனை இகழ்’, ‘நையப்புடை’, ‘ரௌத்திரம் பழகு’, ‘புதியன விரும்பு’, ‘வேதம் புதுமை செய்’ - இவைகள் மீறல்களே.

“செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர்சொல்லும் சாத்திரம் பேயுரையாம்” –

சாத்திரங்கள், பொய் வேதம், சாதி-மதக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனம் இவைகளை எதிர்ப்பது பாரதி காலத்தில் பெரும் மீறலேயாகும். சொல்லின் ஓசையை மீறிக் கொண்டு இந்தக் கருத்துக்களே பேரொலி எழுப்பக் கூடியவை.


கடவுளோடு பேசினாலும், மனதோடு பேசினாலும், மனிதரிடம் பேசினாலும் உரத்துப் பேசுவதே பாரதிக்கு வழக்கம்.

“தேவதேவா சிவனே கண்ணா வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா…. வாணீ காளீ அபயம் அபயம் நான் கேட்டேன்”

“சொல்லடி சிவசக்தி”, “சொல்லடீ சொல்லடீ மலையாள பகவதீ”, “பேதை நெஞ்சே” “பேயாய் உழலும் சிறுமனமே”- என்பன போன்றே இந்த அழைப்புக்கள், தெருக்கள் தாண்டிக் கேட்கும் கூவலாக இருக்கின்றன.

மக்கள் கூட்டத்தை நோக்கி எத்தனைக் கட்டளைகள், வேண்டுகோள்கள்! “கொடுமையை எதிர்த்து நில்”, “குன்றென நிமர்ந்து நில்”, “சிறுமை கண்டு பொங்கு”, ‘தீது செய்ய அஞ்சு’, “ஊதேடா சங்கம்” “ஊதுமினோ வெற்றி ஒலிமினோ வாழ்த்தொலிகள்”, “ஜெயபேரிகை கொட்டடா” ‘வாழ்க ஒழிக வளர்க வெல்க’- செவிப்பறை அதிர்கிறது பாரதி எழுத்தில். உறுதிமொழிகளையும் பிரகடனங்களையும் ஏதோ போர்க்களத்து ஆர்ப்பரிப்புகள் போலத்தான் வெளியிடுகிறார்.

“யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்”, “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை”, “முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடியும் வீழ்வோம்”, “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”.

சுயமான கருத்து வீரியத்தில் பாரதிக்கு எப்போதும் சந்தேகம் வந்ததில்லை. ‘தனியொருவனுக்கு உணவில்லையா, ஜகத்தினை அழித்துவிட வேண்டும்’. ‘கல்வி இல்லாத ஊரா, அதை எரித்துவிட வேண்டும். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனியது எங்கும் இல்லை’ ‘சாதிகள் இல்லை’ மாயை என்பது வெறும் பொய்: மனைவி மக்கள் மாயையா? காண்பது சத்தியம், இந்தக் காட்சி நித்தியம்’ ‘கற்புநிலை- அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்’ – உறுதிப்பட்டு கெட்டிப்பட்டுவிட்ட இந்தக் கருத்துக்களின் வெளியீடு ஒலித்தீவிரம் கொண்டது என்பதை வாசகன் எளிதில் காணமுடியும்.

‘தேசபக்தி’ பாரதியின் பக்திமார்க்கம் - பராசக்தியும் பாரத தேவியும் வேறுவேறில்லை. தேசபக்திப் பாடல்கள் எல்லாம் பாரதி பாரதியாகச் சேர்ந்த ஒரு பெரும் பாரதிக் கூட்டத்தின் கூட்டுக்குரல். இயல்பிலேயே சுதந்திரனாக இருந்ததும், சூழலின் உணர்ச்சிக் கொதிநிலையை உள்வாங்கிக் கொண்டதும் தேசபக்திப் பாடல்களின் சத்திய ஆவேசத்துக்குக் காரணம்.

“என்று தணியுமிந்த சுதந்திர தாகம்-என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்
என்றெம தன்னை கை விலங்குகள் போகும்”
“நாமிருக்கும் நாடு நமக்கே உரிமையாம்”
“பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்”
“ஏழையென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை ஜாதியில்”

தேச விடுதலை நோக்கத்தைத் தாண்டியும் பாரதி கவிதைகள் ஒலிக்கின்றன. புதிய கோணங்கியாக வரும் பாரதி, “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்”- பேச்சு மொழியை ஏச்சு மொழியாக்கி விடுகிறார்.

சரி. பாரதி ஓசைமயமானவர் என்பதைப் பார்த்து விட்டோம்ஃ பேச்சும் பாட்டும் கூட்டுக் கலவை ஓசைகளும் ஆட்டங்களும் கொண்டு நிரம்பிய பாரதிக்கு அழுத்தமான வேறொரு பக்கம் இருக்கிறது.

“வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே” என்ற ஆசை,
“நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந்திட நீ செயல்வேண்டும்” என்ற வேண்டுகோள்! பாரதியின் மௌனப் பகுதி அதிகம் பார்க்கப்படாதிருக்கிறது.

ஒலியும் மௌனமும் எதிரெதிர்த் திசைகள் என்றால் பாரதியைத் தேடி எந்தப் பக்கமாகப் போவது?
இப்போது ஒரு தெளிவு செய்து கொள்ளலாம். எது மௌனக்கலை, கவிதை? ஒரு வகையில் எல்லாக் கலை வெளிப்பாடுகளும் மூல ஊற்றில் மௌனத்திலிருந்து வெளிப்படுபவைதாம். பிறவியின் மௌனவாசனை அவற்றில் இருப்பது தேர்ந்த வாசகனுக்குத் தெரியக் கூடும். எந்தக்கலை, தன் பிறவியின் ஊற்றை நோக்கி வாசகனை ஈர்த்துச் செல்கிறதோ, அது மௌனக்கலை. சில கணப்பொழுதேனும் வாசகனைத் திடீரென ஒரு மௌனநிலைக்குள் ஆழ்த்திவிடும் வாய்ப்பு அதில் இருக்கும். இராமன் நிமிர்ந்து பார்த்த ஒரு பார்வையில் ஆலமரத்துப் பறவைகள் சட்டென ஆர்ப்படங்கி மௌனமானது போல இது நேரலாம். எந்தக்கலை, தரமானதேயாயினும், கவிஞனது உள்ளாழ்ந்த மூலைக்கு உங்களை அழைப்பதில்லையோ அது ஒலியைத் தலைமைப்படுத்தும் கவிதை எனக் கொள்ளலாம்.

மௌனம், ஓசை-ஒலிகளின் எதிரியா? நிசப்தம்தான் ஓசை ஒலிகளின் எதிரி. நிசப்தம் வேறு, மௌனம் வேறு. மௌனமோ, சப்தம், நிசப்தம் உள்ளிட்ட பிரபஞ்ச சலனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம். அண்டவெளி ஓசையற்றதா? நம் புலனுக்கு அறிவுக்கு முற்றிலும் எட்டாத ஓசைப்பெருக்கு அல்லவா இந்த அண்டவெளி! ‘பிரபஞ்ச வெளியில் மௌனம் பயங்கரத்தை எழுப்புகிறது’ என்றார் பாஸ்கல் என்னும் அறிஞர் (வுhந ளுடைநnஉந ழக உழளஅiஉ ளியஉந ளவசமைநச வநசசழச) இந்த மௌனத்தை நேரடியாக அனுபவம் கொள்ள முடியாது. உருவற்ற சலன மயத்தில் நாமே கற்பித்துக் கொள்ளும் சில இடைவெளிகள், உறை நிலைகள் தாம் நமக்கு மௌனத்தை அனுபவப்படுத்துகின்றன. இத்தகைய உறைநிலைகளைக் கவிஞன் தனது ஆயிரம் ஓசைகளுக்கு நடுவேயும் வைத்திருந்தால் அந்தக் கவிதை மௌன அனுபவத்தை நமக்குத் தந்துவிடும். அப்படித் தரும்போது கவிதையும் நாமும் மொழியைத் தாண்டலாம்: மொழி உறுதிப்படுத்தி வைத்திருக்கின்ற கால, வெளி வடிவங்களையும் தாண்டி விடலாம்.

‘எல்லா உணர்வும் ஒன்றே’ என்றார் பாரதி. பல்வேறுபட்ட உணர்வுகளையும் அவற்றின் ஆதிவடிவில், ஒரேவடிவில் தரிசித்ததனால் தான் இவ்வாறு சொல்ல முடிந்தது. அது போலவே, அனைத்து ஓசை ஒலிகளும் அவற்றின் ஆதிவடிவில், ஒரே ஒலியாக, மௌனத்தின் ஒலியாக இருப்பதைக் கவிஞன் காண்கிறான்.

மொழி, சிந்தனை, கருத்துருவாக்கம் என்பவை மேல்மட்டப் பிரக்ஞை அசைவுகள். இவற்றில் அடங்காத மிகப்பெரும் சக்தி கடலடிப் பனிப்பாறை போல மறைந்து பிரபஞ்ச மொழியில்தான் இருக்கிறது. பிரபஞ்ச மொழி மௌனம். இந்த மொழியைத் தொடும் போதுதான, கவிஞன், நம்மைச் சுற்றிலும் நமக்குள்ளேயும் நாமறியாமல் நிரம்பிக் கிடக்கும் அருவங்களையும், அகாதத்தையும், அகாலத்தையும் உணர்த்தத் துணிகிறான்.
--------
புறவுலகின் அனைத்து ஈர்ப்புகளுக்கும் இடையில் தன்னுள்ளிருக்கின்ற உள்மனிதனோடு உள்ள தொடர்பில் இடைவெளி விடாமல் பார்த்துக் கொள்பவனே கவிஞன், பாரதி உள்ளும் புறமுமாக மாறிமாறியோ, சில அற்புதக் கணங்களில் அகம்-புறம் என்ற பிரிவினையற்ற ஒருமையிலோ இருந்து வந்தவர். அவரது மௌனம் ஒலிகளுக்கு எதிர்த்திசையில் இல்லை: ஒலிகளின் உட்புறத்தில் இருக்கிறது.

“உட்செவி திறக்கும்: அகக்கண் ஒளிதரும்:
அக்கினி தோன்றும்: ஆண்மை வலியுறும்”

நவீனத் தமிழ்க் கவிதையின் முதல் கவிஞரான பாரதிக்குக் கிடைத்த சூழல் வளமானது. ஷெல்லி, விட்மன் போன்ற புரட்சிகரக் கருத்தோட்டங்கள் ஆங்கிலத்திலிருந்தும், வேதம், உபநிஷதம், கீதை போன்றவை சமஸ்கிருதத்திலிருந்தும், புரட்சிகரமான ஆன்மீகத் தடங்கள் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றவர்களிடமிருந்தும் கிடைத்தன. பாரதியின் உள் உலகம் இவைகளைச் செரித்துக் கொள்ளும் பக்குவம் கொண்டிருந்தது. புதுவையில் சந்தித்த குள்ளச்சாமி, ‘வேதாந்த மரத்தில் ஒரு வேராக’, ‘பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டவராகப் பாரதிக்குத் தோன்றினார்.
“பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால் பேரின்ப மெய்துவதே ஞானம்” என்ற குள்ளச்சாமியின் உபதேசம், பாரதிக்குள் முன்பே இருந்துவந்த பாதையை வெளிச்சமிட்டுத் திறந்திருக்கிறது. அதற்கப்புறமும் பாரதி பேசிவந்தார். பேச்சை நிறுத்திவிடவில்லை. ஆனால் பேச்சினுள் மந்திரச் சொற்களின் ஊடாட்டம் தொடங்கிவிட்டது. ஒலிகளின் உலகத்திற்குள் மௌனத்தின் நிறமற்ற உலகம் விரியத் தொடங்கிவிட்டது.

சொல்லைத் தேடுகிறாh பாரதி. ‘அது தேவசக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல், மந்திரம் போன்ற சொல்’, ‘மனிதனின் ரஸம் வாக்கு’, ‘பரப்பிரமத்தின் சக்தி வாக்கு ரூபமாக உபாசிக்கப்படுகிறது’ என்ற உபநிஷத்தின் வழியில் பாரதிக்கு இத்தேடல் அமைந்திருக்கலாம். அதனால்தான் “சொல்லில் விளங்கும் சுடரே சக்தி’ என்றார். சொல்வதன் அதிகபட்ச சாதனையை- அர்த்த விசறல்களை, கூர்மையை, ஆழத்தை நிகழ்த்தினால் அது கவிதைச் சொல் சொல்ல முடியாததை வாசகன் மனசுக்குள் பாய்ச்சும் சாதனையை நிகழ்த்தி விட்டால் அது கவிதைச் சொல்லினும் மேலான மந்திரச் சொல். சொல் அர்த்தத்தைச் சுமந்தோ அர்த்தத்தைத் தேடியோ சுற்றித் திரியாமல் நேரடியாகச் செயல் வடிவிற்கு வந்து விடுகிறது. எவ்வளவு ஆங்கார ஓசைகளின் நடுவே இருந்தாலும் அந்த மந்திரச் சொல் மௌன சக்தியின் வெளிப்பாடுதான். சாந்தத்தோடு சம்பந்தப்படுத்தப்படும் பிரணவநாதம் பாரதி பாட்டில், உலக வெடிப்பாகச் சீறி வெளிவருகிறது.

“ஓமென்றுரைத்தனர் தேவர்: ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்
பூமி அதிர்ச்சி உண்டாச்சு: விண்ணைப் பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று”

சொல் பிறக்கும் போதே செயல் பிறந்து விடுகிற இடைவெளியற்ற தன்மையை இங்கே உணர முடிகிறது.

மந்திரச் சொல் எங்கே கிடைக்கிறது? அகராதிகளிலிருந்து வெடித்து வெளியேறிக் கவிஞனுக்குக் கிடைக்கிறது. காதலின் தளத்திலிருந்து ஆன்மப் பெருவெளிக்கு நம்மை ஒரு மின்வெட்டில் தூக்கி எறியும் சொற்கள் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வேறு சில கவிதைகளிலும், எதிர்பாராத இடங்களில் திடுமென எதிர்கொள்கின்றன.

காதல் “கொன்றிடுமென இனிதாய். இன்பக் கொடு நெருப்பாய், அனற் சுவையமுதாய்” இருக்கிறது. கண்ணன் குழலோசை. ‘காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு” ஆக இருக்கிறது. காதலி, “ஏழுலகும் இன்பத் தீ ஏற்றுகிறாள். இங்கெல்லாம் சொல் இருக்கிறது: பொருள் இருக்க வேண்டிய இடத்தில் அனுபவமே திரண்டு நிற்கிறது. காக்கைச்சிறகு, பார்க்கும் மரங்கள், கேட்கும் ஒலி எனச் சாதாரணமாக வந்து கொண்டிருந்த கவிதை, ‘தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா’ என்று ஒரு பெரிய தளமாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது. அழகுணர்ச்சியின் உச்சநிலைகூட இதுபோலவே தளமாற்றம் காண்கிறது. வெண்ணிலாவின் ஒளியில் “கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள்ளொன்று” கூடியிருப்பதாகக் காண்கிறார். ‘கொல்லும் அமிழ்தம்’- பாரதியின் தனிப்பட்ட கருத்துருவாக்கம்.

வசன கவிதைகளிலும் வேறு கவிதைகளிலும் பல இடங்களில் நெருப்பு, கனல், அனல், மின்னல், சாவு, கள், அமுது, நஞ்சு போன்ற சொற்களை உருவேற்றி உருவேற்றி மந்திரச் சொல்லாகவே நிலவ விட்டிருக்கிறார் பாரதி எல்லாத்தீயையும் வணங்க வேண்டும் என்பவர் அறத்தீ அறிவுத்தீ என்பவைகளுடன் சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ என்பவைகளையும் சேர்க்கிறார். உணர்வுகளின் குணபேதங்களை ஊருவிப்போய் அவற்றின் மூலத்தை அடையும் போது கண்ட ஒருமையை – எல்லா உணர்வும் ஒன்றே என்ற உண்மையை - இவ்வாறு வெளிப்படுத்துகிறார். நல்லது-கெட்டது, வன்மை-மென்மை, எதிர்மறைகள் என்று எவையும் இல்லை என்பதை மந்திரச் சொற்கள் சுட்டிக் காட்டுகின்றன.

பாரதியின் உள்மனிதனுக்கும் வேலை nவிளியல்தான் இருக்கிறது. ஞான ஆகாசத்தின் நடுவே நின்று ‘பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக. துண்பம் மிடிமை நோவு வாவு நீங்கி உயிர்கள் இன்புற்று வாழ்க’ என்று பாரதி கட்டளை இடுவாராம். கடவுள் ‘அங்ஙனே ஆகுக’ என்று சொல்ல வேண்டுமாம். ‘வையந்தழைக்க வைப்பேன்: வானம் மூன்று மழைதரச் செய்வேன்’. ‘இனி வையத் தலைமை எனக்கருள்வாய்’- இவைகள் விநோதக் கற்பனை, நிறைவேறாதவை என்ற சிந்தனை பாரதியிடம் இல்லை. சொல்லைச் சொல்லிப் பார்க்காமல், சொல்லை வாழ்ந்து பார்க்கும் அவரது உள்மனிதனின் செயல்பாடு இது: உள் மனிதனின் பேச்சு இது.

வேதம் புதுமை செய்து வேதவாழ்வினைக் கைப்பிடிக்க உறுதி கொண்டவர் பாரதி. வேதவாழ்வு என்பது வியனுலகனைத்தையும் அமுதென நுகர்வது: படைப்பின் அனைத்துப் பொருள்களையும் ஒன்றே என உணர்ந்து, அந்த ஒன்று ‘தான்’ என்பதைக் கண்டு ‘தானே தெய்வம்: தான் அமுதம்: தான் இறவாதது’ என்ற பேருண்மையில் திளைப்பதுதான் வேத வாழ்வு. ‘புள், விலங்கு, மரம், காற்று, விண்மீன், வெட்டவெளி – எல்லாமே நான்’ ‘மனிதர் தேவர், ஞாயிறு, சுவர், மலை, கடல், இன்பம்-துன்பம் உயிர்-இறப்பு இவை ஒருபொருள்’. ‘மனம், சித்தம், உயிர், காடு, அருவி, நிலம், நீர், காற்று, தீ, வான்- எல்லாமே தெய்வங்கள்’ ‘உணர்வு அமுதம் உணர்வே தெய்வம்’ “அவனியிலே பொருளெல்லாம் ‘அது’வாம்: நீயும் அதுவன்றிப் பிறிதில்லை” “சாமிநீ சாமிநீ கடவுள் நீயே”- இவ்வாறெல்லாம் உபநிஷத் வழியில் பிரம்மத்தை விளக்குகிறார். எல்லாமே தெய்வமென்றால், படைப்பில் உள்ள தீயவை, கீழ்மை, கொடுமை, ஒவ்வாமைகள் பற்றி என்ன முடிவு செய்வது என்ற சந்தேகம் வரலாமல்லவா! பாரதிக்கு அந்தச் சந்தேகம் இல்லை. ‘கழுதை. கீழான பன்றி, தேள், கூளம், மலம்- வணங்கத்தக்கவையே! “புன்னிலை மாந்தர் பொய்யெலாம் நான், துன்பம்நான், நான் எனும் பொய்யை நடத்துவோன் நான்” “கவுரவரும் அவனே, அர்ச்சுனன் தேர் ஓட்டியாக நின்றவனும் அவனே” “குரு மட்டுமின்றிப் புலையனும் சிவம்தான்”- மனித தர்க்கத்தைத் தள்ளிவிட்டுக் கவித்துவ அதர்க்கத்தின் துணையோடு படைப்பின் ஒருமையை உணர்த்துகிறார்.

பொருள்கள் எல்லாம் ஒன்றே என்பது போல, நிகழ்வுகள் எல்லாம் ஒன்றே என் உணர்ந்த உண்மை பாரதியைத் தரைகாணாத ஆழத்தில் கொண்டு சேர்க்கிறது. ‘காத்தல்-காக்கப்படுதல், அழித்தல்-அழிக்கப்படுதல், உண்ணல்-உண்ணப்படுதல், வாழ்தல்-சாதல் எல்லாம் ஒன்றே. தெய்வங்களிடம் பாரதி சொல்கிறார்: “எம்மை உண்பீர்- எமக்கு உணவாவீர்! உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர்”- இங்கே உண்ணுதலும் உண்ணப்படுதலும் ஒரே செயல், ஒரே பொருளான பிரமத்தின் ஒரே செயல். எதுவும் அழிவதும் இல்லை: அழிப்பதும் இல்லை. அதனால்தான் “உயிர்நன்று, சாதல் இனிது” என்கிறார்.

“காற்றே உயிர்: காற்று உயிர்களை அழிப்பவன்
காற்றே உயிர்: எனவே உயிர்கள் அழிவதில்லை”

சாவு உண்டு. அழிதல் இல்லை என்றால், எல்லா நிகழ்வும் ‘இருத்தல்’ என்ற ஒரே நிகழ்வின் பிம்பங்களே. ஒருவகையில் இருத்தல் என்பது ஒரு நிகழ்வுமன்று: அது ஓர் உண்மை, பேருண்மை எனப் புரிந்து கொள்ள முடியும். சமூகத்தினின்றும் தமது அன்றாடச் சூழலினின்றும் விலகித் தனித்துப் போகாமலே பாரதிக்குத் தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அவர் உபதேசங்களாகவோ, ஆசிரமச் சரக்குகளாகவோ ஆக்கி விடவில்லை: தம்மை இயக்கிக் கொண்டிருக்கும் கவிதையனிடமே ஒப்படைத்து விட்டார்.
‘நான்’ என்பது எப்படியோ விரிவாகித் ‘தான்’ என ஆகிவிடக் கண்டிருக்கிறார். “என்னுளே நானெனும் பொருளாய், நானையே பெருக்கித் தானென மாற்றும் சாகாச் சுடராய்”த் தேவி நிற்கிறாள் என்கிறார். தரிசனங்கள் தமது முயற்சி அல்ல என்கிறார். “என்கண்ணை மறந்து உன் இரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நின் கண்ணால் புவியெல்லாம் நீயெனவே நான் கண்டு” எனக் குறிப்பிடுகிறார். ‘பரசிவ வெள்ளம்’ என்ற கவிதையில் அவர்கண்ட ஒரு அரூபதரிசனம் இடம் பெறுகிறது. பொருள்களுக்கு. உணர்வுகளுக்குத் தனித்தனியே ‘தன்மை’கள் (இயல்புகள்) உண்டு இல்லவா! ஏதோ ஒரு கணத்தில் பொருள்களைப் பிரிந்து தன்மை தனியாகிறது: பிரமத்தில் இணைகிறது. பிரம்மம் தன்மையற்றது அல்லவா! ஆகவே ‘தன்மை’ என்பதும் இல்லாமல் போகிறது. பல தன்மைகளையும் உட்கொண்டு;ம் தன்மையற்றிருக்கும் பிரமத்தின் அனுபவம் பாரதியின் கவிதை வரிகளில் விரிகிறது:


“தன்மையெலாம் தானாகி தன்மையொன்றில்லது வாய்த் தானே
ஒரு பொருளாய் தன்மை பலவுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே”

கண்ணன் பாட்டு ஒரு பாவனை உலகம்: இனிய ஓசை ஒலிகளும் வண்ண வெளிச்சங்களும் உலாவும் உலகம்: சொற்கள் எல்லாம் கள்ளம் கபடமில்லாமல் ஆடல் பாடல்களில கலந்து கொள்கின்றன: சூழ்நிலை இசைமயமாக இருக்கிறது. பரவசமோ, மகிழ்சியோ, பெருமூச்சோ, அழுகையோ, கலகலப்போ, ஈரமோ இல்லாத இடமே இல்லை. அந்த உலகில் நுழையும் வாசகன் எவனுக்கும் புலன்கள் நிரம்பிக் கனக்காமல் போவதில்லை. இவ்வளவு இருந்தும், ‘பாவனை’ என்ற அடிப்படை காரணமாக, ஓசை ஒலிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நம்மை. நமக்குள்ளிருக்கும் மௌனத்தை நோக்கி நகர்த்தும் பாடல்களும் வரிகளும் கண்ணன் பாட்டில் உள்ளன.

ஓர் அனுபவம். அதைக் கனவு நிலையாகச் சித்திரிக்கிறார் பாரதி. உருத்தெளிவில்லாத- அல்லது உருவமே இல்லாத ஒன்று வந்து தொடுகிறது. அது இன்னது என்ற தெளிவு இல்லை. சொல்லுக்கும் சிந்தனைக்கும் அகப்பட மறுக்கிற அது, உணர்வில் கலந்து புதிய சாந்தி பிறக்கச் செய்கிறது. சாதாரணமான காதலைச் சொல்கின்ற காதல் வரிகளில் ‘சாந்தி’ என்ற சொல்லைக் கொண்டு ஆன்ம அனுபவத்தைப் பாரதி புலப்படுத்துகிறார்.

“கண்ணுக்குத் தோன்றாமல், இனம் விளங்காமல் எவனோ
என்னகம் தொட்டு விட்டான்: எண்ணும் பொழுதிலெல்லாம் -
அவன்கை இட்ட இடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ-புதிய
சாந்தி பிறந்ததடீ”

தரிசனங்கள் நீடிப்பதில்லை: மங்கலாகி மறைகின்றன., நினைவைக் கொண்டும் உணர்வைக் கொண்டும் உள்ளே துழாவித் தேடுகிறார்.

“ஆசைமுகம் மறந்து போச்சே…நேசம் மறக்கவில்லை நெஞ்சம்-எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?...கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணன் அழகு முழுதில்லை”

வெளியே கேட்காத ஒரு ஓலம் இந்தக் கவிதையில் நிறைந்திருக்கிறது. தரிசனம் நழுவுகின்ற கடுமையான ஆன்ம நெருக்கடி நிலை இது.

“மோனத்திருக்கதடீ-இந்தவையம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ”

என்ற வரிகளில் மேலோட்டமாகக் காதலின் கனத்த பிரிவுத்துயரம் தெரிகிறது. “நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சாதேனே” என்ற குறுந்தொகைத் தலைவியின் துயரம் போல்தான் தோன்றுகிறது. உலகம் முழுவதையும் ஒருதட்டில் வைத்து, மறுதட்டில் தன்னை வைத்துப் பார்த்துக் கொள்ளும் ஒப்பீட்டில் வையகம் தேடுதலற்று உறங்கிக் கொண்டிருக்கும் போது தனக்கு மட்டும் நேர்ந்திருக்கிற ஆன்ம விழிப்பு அந்த அவஸ்தை நரகமாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையில் துயரமோ நரகமோ அன்று. ‘கொன்றிடுமென இனிதாக’ இருக்கும் நிலை “ஏக மவுனம் இயன்றது காண்: மற்றதிலோர் இன்ப வெறியும் துயரும் இணைந்தனவால்” என்ற துன்ப இன்பம்: அல்லது இரண்டுமற்ற நிலை.

வானவெளி வியப்புகள் பாரதியை எப்போதும் களிப்பில் ஆழ்த்தி வந்திருக்கின்றன. அவருக்குள்ளேயே வெளி வியாபித்துக் கிடக்கிறது. வசன கவிதைகளில் வானவெளி அனுபவங்கள் உக்கிரமடைந்து வானவெளியாகவே ஆகிவிடுகிறார். “வெட்டவெளியின் விரிவெலாம் நான்” என்று பேருணர்வு கொள்கிறார். கண்ணம்மாவின் காதலோ, சக்தியின் காட்சியோ விரிந்த வானவெளியாகவே அனுபவமாகின்றன. அண்டவெளியும் ஆன்ம உள்வெளியும் வேறானவை அல்ல என்ற உபநிஷச் சாரம் பாரதியிடம் படிந்துள்ளது. வானம் அண்ணாந்து பார்ப்பதில் இல்லை: சுற்றிலும் பார்க்கலாம்: ‘மண்ணிலும் வானம்தானே இருக்கிறது: ஆகவே மண்ணில் வேலிபோட்டால் வானத்தில் வேலி போட்டது போலத்தான்’ என்று சொல்கிறார். வெளி பற்றிய விஞ்ஞான உண்மைகளும் பாரதிக்கு உடன்பாடு சொல்கின்றன. அவ்வப்போது உள்-வெளி பேதம் உடைந்த களிவெறியில் பாரதியைக் காண முடிகிறது.

ஒலியையும் சொல்லையும் ஏன், அர்த்தத்தையும் தாண்டிய அனுபவம் தான் கவிஞனின் சோதனைக்களம். அவனது கவித்துவத்தின் முடிவுறாத இறுதி வரிகளை இந்தக் களம்தான் தீர்மானிக்கிறது.

பிரபஞ்சங்கள் தோன்றி விரிவது எப்போதோ குவிந்து ஒடுங்குவதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. காலமும் வெளியும் அண்டங்களும் ஏதோ ஒரு பொழுதில் அழியக்கூடும். விஞ்ஞானம் இந்த நிகழ்வுகளைத் தொலைதூரக் கலங்கல் காட்சிகளாகச் சொல்ல முயன்று கொண்டிருக்கிறது. இந்தச் சொல்லும், தகவலும், அறிவும் பாரதிக்குத் திருப்தி தரவில்லை., அண்டங்களின் அழிவை அவர் பார்க்க வேண்டும். சொல்லோ பொருளோ துணை வராவிட்டால் என்ன? சொல்லையும் பொருளையும் தாண்டிய சுத்தக் கவிதை அவரிடம் இருக்கிறது. சுதந்திரம் வருமுன்பே கற்பனையில் அதை அடைந்த விட்ட பாரதி, ஊழி வருமுன்பே அதை அனுபவம் காண்கிறார். ஊழிக்கூத்து என்ற கவிதை பாரதியின் கவித்துவ உச்சம்.

அண்டகோளங்கள் வெடித்துச் சிதறுதல், வெற்று வெளியில் பூதங்களி;ன் ரத்த வெறியாட்டம், ஐந்து பூதங்களும் நொறுங்கி ஒரே பூதமாதல், பின் அதுவும் சக்திக் களியில் மூழ்குதல், பாழ்வெளி உருவம் குலைதல், சக்திப் பேய் தலையொடு தலை முட்டி அன்னையின் வழி நெருப்பில் எரிதல், காலம் நிர்மூலமாதல் - கவிதையை வரிவரியாக அல்ல, அணு அணுவாக வாசிக்க வேண்டும். அணுவின் ஆற்றல் அதில் நிரம்பிக் கிடக்கிறது.

சந்தச் சொடுக்காலும் வார்த்தை வெறியாலும் இக்கவிதை, ஓசையின் உச்சம் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கும் மேலாக காலம் வெளி இரண்டும் ஒன்றாக அழிகிற நிர்மூலம் என்பது யுகயுமாகச் சேமிக்கப்பட்ட அவ்வளவு ஓசைகளின் ஒரே வெடிப்பு. அதை மௌனம் என்றுதான் சொல்ல முடியும். பாரதி அப்படித்தான் சொல்கிறார்: “காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகும்-அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்” மோனம் என்பது பாரதிக்கு எல்லாவற்றுக்குப் பின்பு எஞ்சியிருக்கும் உவமையில்லாத ஒளி-வெளிச்சம். கவிதையில் வரும் நிகழ்வுகள் நம் கருத்து வரம்பிற்குள் கொண்டு வரப்பட முடியாதவை. “ஐந்துறு பூதமும் சிந்திப் போய் ஒன்றாதல்”, உருவற்ற பாழ்வெளி அந்த உருவற்ற ‘உருவும் குலைதல்’, ‘காலம் நிர்மூலமாதல்’ இவை எப்படிச் சிந்தனைக்குள் வரும்? அன்னையின் பாத ஒலியில், பூதங்களின் பாடல் பொருள் கலந்து விடுகிறது. சொல்லின் (பொருளின்) பயங்கர மௌனமும் சக்திக் கூத்தின் பயங்கர ஆவேசமும் ஒன்று கலந்து விடுகின்றன. சக்தியின் நடன வேகமோ ‘சிந்தை நழுவும் வேகம்’ முடிவில் எதுவுமற்ற ஏதோ ஒன்றில் அன்னையின் கூத்து தொடர்கிறது.

இப்படி, உணர முடியாததை உணர்ந்த, சொல்ல முடியாததைச் சொன்ன கவிஞனின் அகவிழிப்பு, ஓசையின் உச்சம் மௌனம் என்ற அரூபத்தைக் கண்டு கொள்கிறது.

எந்த நல்ல கவிஞனும், தனக்குப் பின்வரும் காலத்திற்கென்று, தனது கவித்தவத்தின் ஆகக் கூர்மையான பகுதியை வழிகாட்டியாக விட்டுப் போவான். பாரதியிடமிருந்து அப்படிக் கிடைத்தவைகளில் ஒன்று ‘அக்கினிக் குஞ்சு’.


“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காற்றிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

குறிப்பிட்ட ஓர் அர்த்தத்தின் கையில் கவிதையைப் பிடித்துக் கொடுத்து விடாமல், கால-இடவெளிகளில், சொல்லின் மர்மச் சுழல் பாதைகளில் சுதந்திரமாகக் கவிதையை அலைய விடலாம் என்பதைப் பாரதிக்குப் பின்வந்தவன் இந்தக் கவிதை மூலமாகப் புரிந்து கொண்டான். ‘அக்கினிக்குஞ்சு’ கவிதைக்குப் பொருள் சொல்வோர் எத்தனையோ குறியீட்டுப் பொருள்கள் சொல்லலாம்ஃ அது முக்கியமில்லை. பாரதிக்கு நேர்ந்த தரிசனத் தீவிரம்தான் முக்கியம். தரிசன அனுபவம் வெளிப்பட வேண்டுமானால் மொழியின் சுவர்களை உடைக்க வேண்டும் என்கிறார்கள் அறிஞர்கள். கவிதை முடியும் போது கேட்கிற ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ என்பதை மொழியின் சுவர் உடைபடுகிற ஓசையாகவே கொள்ளலாம். மேலும் சொல்லச் சொல் கிடைக்காத நிலையில், சொல்ல வேண்டிய மிச்சத்தை உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல் எழுந்து நின்று தாண்டவம் ஆடத் தொடங்கி விடுகிறான் கவிஞன். ஒலியும் மௌனமும் எதிரெதிர்த் திசைகள் என்றால் பாரதியைத் தேடி எந்தப் பக்கமாகப் போக வேண்டும்? இப்போது குழப்பம் விடுபடுகிறது. ஒலியும் மௌனமும் எதிரெதிர்த் திசைகள் என்ற மரபான கருத்து பாரதியிடம் பொய்யாய்ப் போகிறது. ஓசைகளின் ஆழத்திலும், உச்சியிலும் தான் மௌனம் இருக்கிறது என்பதைப் பாரதியின் கவிதை கண்டுபிடித்திருக்கிறது. ஆகவே பாரதியைக் காண ஒரே திசையிலேயே போகலாம்.

மௌனத்தை நோக்கி நகரும் கவிதைகளை அடையாளம் காண்பது எப்படி? எங்கே மொழி அதன் வெளிப்புற வியாபகத்துக்குப் போகவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறதோ, எங்கே உணர்வுகளும் எண்ணங்களும் சொல்லைத் தேடி அலைந்ததற்கான சுவடுகள் இல்லையோ அங்கெல்லாம் மௌனத்தை நோக்கிய நகர்வு இருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை
----------------------------------------------------------------------------------------------
--- கவிஞர் அபி ---
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடுகையிட்டது சந்திர சேகரன்

எழுதியவர் : (26-Feb-19, 4:56 pm)
பார்வை : 139

மேலே