எந்தைநல் கூர்ந்தான் என்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ – நன்னெறி 17
நேரிசை வெண்பா
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந்(து) என்றவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீஇ!
நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க்
கன்று முதவுங் கனி. 17 – நன்னெறி
பொருளூரை:
பசும் பொன்னாலாகிய வளையல்களை அணிந்தவளே! எங்கள் தந்தை இரப்பவர்க்குக் கொடுத்து வறியவனானான் என்று அவனுடைய புதல்வர் தமது ஈகையைக் கை விடுவாரோ? விடார்,
எதுபோல் எனின், முன்னே அழிவில்லாமல் நின்று கொண்டு பழமாகிய பயனைக் கொடுத்து அதனாலே அழிவையடைந்த வாழை மரத்தினது கீழ் நிற்கின்ற கன்றும் பழத்தைக் கொடுக்கும் அதுபோல.
பொருள்:
பசும்பொன்னாலான வளையல்களை அணிந்தவளே! வாழ்ந்திருந்து எல்லாருக்கும் உதவி, அழிந்த வாழையின் கீழ் தோன்றிய அதன் கன்றும் எல்லாருக்கும் கனி, காய், இலை, தண்டு இவைகளைத் தந்து உதவவே செய்யும், அது போலவே பிறர்க்குக் கொடுத்து வறுமை எய்திய தகப்பனுக்குத் தோன்றிய மைந்தர்களும் ஈகை குணத்தோடே இருப்பர்.