அபினந்தனுக்கு அன்னையின் தாலாட்டு

மகா பாரதத்தில்
நீதிக்காகப் போராடியவன்
அபிமன்யு
பாரதத்தில் போராடியவன்
அபினந்தன்

நாட்டைக் கெடுக்க
வனங்களை அழிப்போர்க்கு
மத்தியில்
இவன் நாட்டைக் காக்க
ஆவணங்களை அழித்தவன்

இந்தியாவிற்காக
இவன் பட்டான் காயம்
அதனால்
இன்று இவன்
அனைவரும் அன்னார்ந்து
பார்க்கும் ஆகாயம்

இவன்
தாயின் கருவறையில்
பிறக்காது
தாய் நாட்டின்
கல்லறையில்
பிறந்தவன்

நம்
மானம் பறக்காமல்
இருக்க
இவன்
விமானத்தில் பறந்தவன்

இவன்
தன் கூட்டில்
பாரம் சுமந்து
பாக்கிஸ்தான்
நாட்டில் அபாரம்
செய்பவன்

காரம்தான்
இவன் ஆகாரம்

தாரம்தான்
இவன் ஆதாரம்

வீரம்தான்
இவன் கம்பீரம்

இவனின் துப்பாக்கி
பெறவேண்டியது
ஆணை மட்டும்தான் பாக்கி
ஆணை கிடைத்துவிட்டால்
ஆசிய வரைபடத்தில்
இருக்காது பாக்கி


வாழ்ந்து கொண்டே
இறப்போர்க்கு மத்தியில்
இவன்
இறந்து விட்டு
வாழ்பவன்

இவன் தேகம்
அது மேகம்
எதிரி மீது
குண்டு மழை
பொழிவதால்

தீவிரவாதியின்
கண் பாகம்
அதுவும் மேகம்
அதைக் கண்டு
மழை பொழிவதால்

மேல் லோகத்தில்
அசுரனை வதம் செய்து
தேவர்களைக் காத்தவன்
கந்தன்

பூலோகத்தில்
தீவிரவாதிகளை வதம்
செய்து
நம்மைக் காத்தவன்
அபி நந்தன்

இவன்
மாட்டிக் கொண்டாலும்
காட்டிக்கொடுக்காது
நாட்டின் பெருமையை
நிலை நாட்டிக்கொடுத்த
தமிழன்

இவன் பிறப்பு
நாட்டிற்கு பெருமையோ
இல்லையோ
நிச்சயம்
தமிழ் நாட்டிற்குப்
பெருமை

எழுதியவர் : புதுவை குமார் (9-Mar-19, 3:22 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 56

மேலே