காதல் அழகானது

அந்திசாயும் நேரம், கதிரவன் தன் காதலியைகாணாத கோபத்தில் தனது வெப்பக்கதிர்களைஅதிகமாகவே இன்று இப்பூமிபந்தின் மீது தெளித்திருந்தான். அவனுடைய கோபம் அடங்கியதற்கு அறிகுறிகளாக பறவைகள் தங்கள் இருப்பிடம் தேடி பயணப்பட்டுக்கொண்டிருந்தன, தெருவோர மாலைக் கடைகள் உதயமாகிக் கொண்டிருந்தன. மெதுவாக அந்த சாலையின் ஓரத்தில் இருக்கும் பூங்காவினை நோக்கி பயணப்பட்டேன் என்னுடைய மாலை நேர தோழர்கள் யாரும் வந்திருக்கவில்லை. என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த மர இருக்கையில் அமர்ந்து கண்களை நான்கு புறமும் சுழல விட்டேன், ஆங்காங்கே ஜோடி ஜோடியாக இளம் காதலர்கள் தங்களை யாரோ பிரித்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் காற்றை வழிமறைத்தபடி நெருக்கமாக அமர்ந்திருந்தனர். சிறு குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிந்து உயர பறக்க முயன்று கொண்டிருக்கும்பட்டாம்பூச்சிகளைவிரட்டிக்கொண்டிருந்தனர்....

எனது பார்வை மீண்டும் காதலர்களின் பக்கம் என்னையறியாமல் சென்று வந்தது... என் மனதில் ஏதோ இனம்புரியா உணர்வு... நான் அமர்ந்திருந்த இருக்கையை தடவி பார்த்தேன்... என் கண்களில் கண்ணீர்த் துளிகள் துளிர்க்க ஆரம்பித்தது.... இத்தனை நாட்களுக்கு பின் ஏன் இந்த எண்ணம் என்னை பாடாய்படுத்தி எடுக்கின்றது என்ற எண்ணத்துடன் விழி நீரை சுண்டி விட்டேன், எண்ணங்களை வேறு திசையில் கொண்டு செல்ல முயன்றேன், என் முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. மெதுவாக பின்பக்கம் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். அந்த கடைசி நாள் என் கண்களின் முன் காட்சியாக விரிய ஆரம்பித்தது.

அதுவும் இதுபோல் ஒரு மாலை நேரம் தான் இதே இருக்கையில் முகமெல்லாம் எதிர்பார்ப்புடன் நுழைவு வாயிலில் கண்களை பதித்து அமர்ந்திருந்தேன். அதோ அவள் என் மனம் கவர்ந்தவள், என் வாழ்க்கைக்கு ஒளியேற்றுபவள், என் வாழ்வின் ஆணிவேரானவள்... என் முகமெல்லாம் புன்னகை அரும்ப ஆரம்பித்தது.
மஞ்சள் நிற ஆடை அவள் தங்க நிற மேனியை அலங்கரிக்க, அவளின் உதடுகளில் சதா ஒட்டிக்கொண்டிருக்கும் புன்னகையுடன் மெதுவாக என்னை நோக்கி நடந்து வந்தாள்...
வா... ”மைதிலி” என்று புன்னகையுடன் அவளை அழைத்தேன்.
என்னப்பா இன்னிக்கும் உன்னை காக்க வைச்சுட்டேனா என்ற கேள்வியுடன் எனது அருகில் அமர்ந்து கொண்டாள்.
"சாரிடா செல்லம்... இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது சரியா... என்ற அவளுடைய உதடசைவுகளுக்குத் தகுந்தபடி அவளின் காதணிகளும் நாட்டியம் ஆடின.

அப்படியெல்லாம் இல்லம்மா... இப்பத்தான் வந்தேன் அதுவும் நீ அவசரமா பார்க்கணும்ணு போன்ல சொன்னாயே... அதனால ஒரு மணி நேரம் முன் அனுமதியுடன் வந்து உனக்காக காத்திருக்கிறேன்.... இந்த காத்திருப்பில் கூட ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது...

அப்படியா என்றபடியே, அவளின் கண்கள் பட்டாம்பூச்சியாய் அடித்துக் கொள்ள அவளின் வெண்டை பிஞ்சு விரல்கள் எனது கேசத்தை கோதி விட்டன... நான் சிறிது மெய் மறந்து தான் போனேன். இந்த பதினொரு ஆண்டுகள் பந்தத்தில் அவள் இது மாதிரி செய்வது அபூர்வமானது... அதனால் அவளுடைய தீண்டல் எனக்கு மீண்டும் தேவைப்பட்டது.

என்ன மைதிலி உங்கவீட்டுலபேசிட்டியா...?
உம்... உம்... பேசிட்டேன்...
வாவ்... அப்புறம் என்ன எப்போது கல்யாணத்தை வைத்துக் கொள்வது... என்ற கேள்விக்கு மௌனமாக தலையை தாழ்த்திக் கொண்டிருந்தாள்...

என்னாச்சு... முடியாதுன்னுட்டாங்கள...? எனக்குள் துக்கம் என்னுடைய வார்த்தைகள் திக்கி திணறலுடன் வெளிவந்தது.

இல்ல ராகவ்... அவர்களுக்கு உன்னைப் போல ஒரு மாப்பிள்ளையை விட்டு விட விருப்பமில்லை....
அப்புறம் என்ன மைதிலி...?
இதுல எனக்குத்தான் உடன்பாடு இல்ல...
என்ன... என்ன... சொன்ன மைதிலி...
விளையாடுகிறாயா... எப்படியோ தறிகெட்டு போய்ட்டு இருந்த நான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறேனா... அதுக்கு நீ தானே காரணம்... நீ இல்லாட்டி என் வாழ்க்கை எப்படியோ போயிருக்கும் அல்லது மறைந்து நானும் மறக்கப்பட்டிருப்பேன் என்ற என்னுடைய வலியான வார்த்தைகளுடே அவளுடைய முகத்தினை ஏறிட்டு பார்த்தேன்…..
அவள் முகத்தில் எந்தவிதமான சலனங்களும் இல்லை…
மைதிலி… மைதிலி …. என்னாச்சு நீயா இப்படி பேசுவது….?
அவளிடமிருந்து பதில் இல்லை…
இந்த பொது இடத்தில் அவளிடம் இனி எப்படி பதில் வாங்குவது என்ற குழப்பத்துடன் அவளுடைய முகத்தினை உற்று நோக்கினேன்…..
மெதுவாக அவளுடைய உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன…
”ராகவ் எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்.., என்னைய எனக்கு பிடிக்கிறதவிட உன்னைய ரொம்ப பிடிக்கும்… என் வாழ்க்கையே நீதான்.. ஆனாலும் நான் தற்போதைய சூழலில் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது…. ”
என் கண்களில் நீர் திரையிட்டது…. ஏன் என்ற கேள்வியுடன் அவளுடைய முகத்தினை உற்று நோக்கினேன்….

நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் ராகவ்… என்னுடைய அண்ணன் மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா வரச் சொல்லியிருக்கார்னு.. அது இப்போது கைகூடி வந்திருக்கு… நான் என்னுடைய படிப்பு தொடர்பா இன்னும் இரண்டொரு நாளில் கிளம்பிவிடுவேன்… என்னோட படிப்பு முடிஞ்சு வருவதற்கு எப்படியும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகிடும் அதுவரை நீ பொறுமையாக காத்திருக்கணுமா ராகவ்……
உனக்கும் வயது கூடிக்கொண்டே போகுது … நல்ல சம்பாதிக்கிறே உனனுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் சந்தோஷத்திற்காகவாது வேறு திருமணம் செய்து கொள்…. நான் உன்னை சந்திப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும்…..
அவளுடைய உதடுகளில் இருந்து சரளமாக வார்த்தைகள் வந்து விழுந்தன, முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளும் தெரியவில்லை.. அவளுடைய வார்த்தைகளால் என் இதயம் நொருங்கியதை உணர்ந்தேன்…
மெதுவாக துாரல் மழை ஆரம்பித்திருந்தது… கோடை மழையல்லவா… அவள் என்னுடைய பதிலுக்காக காத்திருக்கவில்லை, என்னைவிட்டு எழுந்து நுழைவுவாயில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்… சாரல் மழை வலுக்க ஆரம்பிக்க என் கண்களின் கண்ணீர் திவலைகளுடன் மழைநீர் சேர்ந்து கொண்டது.

மைதிலி என்னிடம் அவ்வாறு பேசிவிட்டு சென்ற இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, இந்த இரண்டு நாட்களும் எனக்கு எதிலும் ஈடுபாடு இல்லை, எனது அறையிலேயே முடங்கி கிடந்தேன். அவளுடைய வீட்டு தொலைபேசிக்கு அழைத்தபோதெல்லாம்…. அழைப்புக்கள் ஏற்கப்படாமலேயே போய்க் கொண்டிருந்தது….
இந்த இரண்டு நாட்களில் என்னை நானே திடப்படுத்திக்கொண்டேன், முகத்தில் இரண்டு நாட்களாக சவரம் செய்யப்படாத தாடியுடன் அவள் வீடு இருக்கும் பகுதியில் நுழைந்தேன். இதயம் பட.. பட.. வென அடித்துக் கொண்டது.. அவள் என் கண்களில் பட மாட்டாள என்ற ஏக்கத்துடன் தெரு முழுவதும் கண்களை சுழல விட்டேன்….. அவள் தென்படவில்லை அவளுடைய வீ்ட்டு கதவில் பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
யாரிடம் கேட்பது…. அந்த தெருவில் அனைவரும் அன்னியமாகிப் போன உணர்வு… தளர்ந்த நடையுடன் என் அறையை அடைந்தேன். நாட்கள் மெதுவாக நகர்ந்தது… என் நண்பர்கள் என்னை தேற்றினர் மீண்டும் பணிக்கு திரும்பினேன், ஆனாலும் அவளின் நினைவுகள் என் மனதை விட்டு நீங்க மறுத்தபடி….
விருப்ப மாற்றல் வாங்கிகொண்டு புதிய இடத்தில் இந்த பத்தாண்டுகளை கழித்துவிட்டேன், ஏதோ ஒரு உணர்வால் மீண்டும் பணிமாற்றலாகி இங்கு நேற்றுத்தான் வந்தேன்….
வந்தவுடன் அவள் வீட்டை போய் பார்த்தேன்… வீடு சிதிலமடைய துவங்கியிருந்தது… எனக்குள் துாங்கிக் கொண்டிருந்த அவளின் நினைவுகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டுள்ளது… இதோ இங்கே அவளுடைய நினைவுகளை அசைபோட்டபடி…
அவள் எங்கே சென்றிருப்பாள்… இந்த பத்தாண்டுகளில் அவளைப் பற்றிய ஒரு சிறு விபரத்தினையும் என்னால் திரட்ட முடியவில்லை என்ற இயலாமை என்னை கேலிபேசியது.. நாளை எப்படியேனும் அவளை பற்றிய விபரங்களை சேகரித்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் என் நண்பர்களுக்காக காத்திருக்காமல் என்னுடைய அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
காலைச் சூரியன் மெதுவாக வெயியேறிக்கொண்டிருந்த இந்த காலை வேளையில் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் அவள் வசித்த அந்த தெருவில் மீண்டும் அடியெடுத்து வைத்தேன்.
காலம் தான் எவ்வளவு மாற்றங்களை விதைத்து செல்கின்றது… நிறைய மாற்றங்கள் அவளின் வீட்டைத் தவிர… அவளின் வீட்டின் அருகே போனபோது யாரோ சிலர் அவளின் வீட்டை சுத்தப் படுத்திக் கொண்டிருந்தனர்.
சார்… சார்… என்ற என்னுடைய குரல் கேட்டு ஒருவர் வெளிவந்தார்…. அவருடைய முகம் எனக்கு பரிச்சயமானதாக தோன்றவில்லை…
என்ன வேணும்.., சார் இந்த வீடு….?
இப்போது என்னோடது…., போன வாரம் தான் இதை வாங்கினேன்..
சார் அப்ப இந்த வீட்டு சொந்த காரங்க எங்க இருக்காங்கண்ணு உங்களுக்கு தெரியுமா…?
என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் ஆனாலும் என்னுடைய உடை எனது முகபாவம் அவருக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும் போல்..
ஒரு நிமிஷம் என்று உள்ளே போனார், திரும்பி வரும்போது அவரது கைகளில் ஒரு காகிதம்.. என்னுடைய யூகம் சரியாயிருந்தா நீங்கதான் ”ராகவ்” அப்படித்தானே… என்று கேட்டபடி என் முகத்தினை நோக்கினார்…
என்னுடைய முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம் அப்படியென்றால் எங்கோ என்னை பற்றி மைதிலி சொல்லியிருக்கின்றாள். இவருக்கு அவளின் இருப்பிடம் தெரியும்… மனதிற்குள் நீண்ட கால இடைவெளிக்கு பின்பு மத்தாப்புக்கள் வெடித்தன…, ஆமாம் சார்…. அப்படியா.. இந்தாங்க இந்த விலாசத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கலாம் என்று நினைக்கின்றேன் அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே காகிதத்தை வேகமாக பெற்றுக்கொண்டு, மிக்க நன்றி சார்.. என்று பாதி கூறியும் கூறாமலும் அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தேன் என்பதனை விட ஓடினேன்.
வாடகை காரில் அக்காகிதத்தில் இருந்த ஊரை நோக்கிய எனது பயணம் இன்னும் சிறிது நேரத்தில் அவளைப்பற்றிய ஏதாவது ஒரு தகவல் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனம் கனத்துப் போய் இன்பமா… துன்பமா.. என்று அறியாத நிலையில் மௌனமாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தேன்.
நான் சென்ற இடத்தில் இருந்த வீடு பழமையான வீடு… வீட்டில் யாரும் இருப்பதாக தெரியவில்லை ஆங்காங்கே செடிகள் வளர்ந்திருந்தது… மெதுவாக கதவறுகே சென்று… யாராவது இருக்கீங்களா.. என குரல் கொடுத்தேன்… அமைதியே பதிலாக கிடைத்தது… மீண்டும் குரல் கொடுக்க நினைத்த போது.. ”கீரீச்” என்ற சத்தத்துடன் கதவு மெதுவாக திறந்தது…. வயதான ஒரு அம்மையார் கதவின் ஒரத்தில் நின்றிருந்தார்… வீட்டிற்குள்ளும் அவ்வளவு வெளிச்சமில்லை…
எனக்கு அவர்களை பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை, அதனால் கண்களை கசக்கி கொண்டேன்.. இப்போது அவர்களின் முகம் எனக்கு பரிச்சயமானது… இது மைதிலியின் அம்மா… மஞ்சு.. என்னையும் அறியாமல் அத்தே என்றழைத்தேன்… அவர்கள் கண்களில் கண்ணீர் திவலைகள் எட்டிப்பார்த்தன… என்னிடம் ஏதும் பேசவில்லை மௌனமாக சைகையில் உள்ளே அழைத்தார்கள்.
அந்த வீட்டில் இருந்த மூன்று அறைகளில் ஒரு அறை முன் நின்று என்னை உள்ளே போகச் சொல்லி சைகை காண்பித்தார்கள்… எனக்கு ஏதும் புரியவில்லை, மெதுவாக அறையினுள் காலடி எடுத்து வைத்தேன்… இந்த அறையிலும் அவ்வளவு வெளிச்சமில்லை… அறையின் ஓரத்தில் கிடந்த கட்டிலில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது… என்னுடைய வருகையை உணர்ந்தது போல் அந்த உடலில் ஒரு சிலிர்ப்பு…
”ராகவ் வந்துட்டடியா…?” இந்த குரல் எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு என் செவிகளில் விழுகின்றது… வாடிய மலராக மைதிலிதான் படுத்திருந்தாள், அவளை இந்த நிலையில் பார்ப்பதற்கா நான் இவ்வளவு துாரம் கடந்து வந்தேன்… என் கண்களில் கண்ணீர் மழை ஆரம்பித்திருந்தது..
”ராகவ்” என்மேல் கோபமா…? நீ இன்னும் மாறவில்லையா… உன்னுடைய குடும்பத்தோடு வருவாய் என்றிருந்தேன்… ஆனால் நீ… அவளுடைய வார்த்ததைகளின் ஊடே இருமல் எட்டி பார்த்தது…
அவள் அருகில் அமர்ந்து என் நெஞ்சில் சாய்த்துக் கொண்டேன்..
”ஏன் இப்படி செய்தே மைதிலி…..?”
ஒரு வார்த்தை என்னிடம் உண்மையை சொல்லியிருக்கலாமே….உன் தோற்றத்தை வைத்துதான் நான் உனக்கு புற்றுநோய் எனறு தெரிந்து கொள்ளவேண்டுமா... மைதிலி... நான் அவ்வளவு வேண்டாதவனா..?


அவளுடைய உதடுகளில் மெல்லிய புன்முறுவலுடன்… ”நீ என் உயிர்” என்ற வார்த்தை மட்டுமே தெரித்து விழுந்தது. அவளுடைய கேசங்கள் உதிர்ந்த தலையில் என்கரங்களால் தடவினேன்…


அவளுடைய கண்களின் ஓரத்தில் நீர்த்திவலைகள் திரண்டு என் மார்பை நனைக்க ஆரம்பித்திருந்தது. நான் அவளின் நெற்றியில் ஆழமாக முத்தமிட்டேன் ”காதல் அழகானது” மைதிலி என்ற வார்த்தைகளுடன்.

எழுதியவர் : சா.மனுவேந்தன் (10-Mar-19, 4:56 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 796

மேலே