காலத்தின் கோலங்கள்

ரெலிபோன் மணி ஒலிக்கிறது. கொழும்பு மாநகரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, காலை உணவையும் மதிய உணவையும் வேளா வேளைக்குத் தயாரித்துக் கணவரையும் குழந்தைகளையும் அவரவர் அலுவல்களுக்கு அனுப்பி, குசினியைத் துப்புரவு செய்துவிட்டு ஓய்வு பெற எண்ணிய இந்துவைப் பரபரக்க வைக்கிறது போன் ஒலி. கைகளைத் துண்டினால் துடைத்துவிட்டு ரிசீவரை எடுக்கிறாள் இந்து. "ஹலோ...". மறுமுனையில் பெரிய அத்தானின் குரல் தழுதழுத்துக் கேட்கிறது. "அழுகிறாரோ...?"என்ற எண்ணம் இந்துவின் மனதில். அத்தான் செய்தியைத் தொடர்கிறார். மார்புப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுப் படுக்கையில் இருக்கும் சாரு அக்கா இனிக் கன நாளைக்கு இல்லையாம். இன்னும் ஆகக் கூடியது மூன்று மாதங்கள் தானாம். அக்கா இந்துவையும் மகன் கிளியையும் பார்க்கத் துடிக்கிறாராம். செய்தி போன் மூலம் பரிமாற்றம் பெறுகிறது. கொழும்பு வாழ்க்கை, கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று பம்பரமாகச் சுழலும் இந்துவுக்குக் கண்களில் கண்ணீர் பொலபொலவென்று உதிர்கிறது. அன்னையைச் சிறுவயதிலேயே இழந்த தன்னைச் சகோதரியாய் அன்றித் தன் மூத்த குழந்தையைப் போலவே போற்றித் தாய்க்குத் தாயாய் வளர்த்த சாரு அக்கா... ஒரே ஒரு மகனையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு, வருத்தத்திற்குப் பராமரிக்கவும் ஒருவரும் அருகில் இல்லாமல் கஷ்டப்படுகிறார். அத்தான் ஒரு வயோதிப மாதுவை வைத்துப் பராமரித்தாலும், பக்கத்தில் பெற்ற குழந்தையோ, கூடப்பிறந்த சகோதரியோ இருப்பது போல வருமா....? அதுவும் இந்த இயலாமை நேரத்தில்...

சாரு அக்காவின் இளமைக்காலம் இந்துவின் மனதில் புகையாய் எழுகிறது. அழகான சாரு அக்காவை அவளது அழகு, குணம், முடி அழகு என்பவற்றுக்காகவே அத்தான் எத்தனையோ பெரிய இடத்து சம்பந்தங்களையெல்லாம் உதறித்தள்ளி விட்டு அவளைக் கைப்பிடித்தார். கண்ணே படும்படியான ஒற்றுமையான தம்பதிகள். குழந்தைப் பேறு தள்ளிப் போகிறது என்று சாரு அக்கா கவலைப்படும் போதெல்லாம் அக்காவைக் கண் கலங்க விடாத அத்தான். ஓடி ஓடி வீட்டுவேலைகள், தையல் வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். சாரு அக்காவுக்கு எதையும் தான் செய்தால் தான் திருப்தி. அயலவர்களையும் தன் நேசத்தால் கவர்ந்திருந்தாள். அங்கு என்ன விழா என்றாலும் சாரு அக்கா தான் முன்னுக்கு நிற்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். அவ்விதம் பிறர்க்கு மாட்டேன் என்று சொல்லாமல் உதவிய சாரு அக்கா...... இன்று இப்படி ஒரு உயிர்கொல்லி நோயுடன் போராடுகிறாளே.... இந்து சிந்தனைகளால் நிலைகுலைகிறாள். எப்படியும் கடைசி நேரத்திலாவது தன்னை வளர்த்து ஆளாக்கிய அக்காவுக்குத் தன்னால் இயன்ற சேவையைச் செய்ய வேண்டும் என்ற இந்துவின் அபிலாசையை அவள் கணவர் பாலாவும் அங்கீகரிக்கிறார். பிள்ளைகளையும் கணவரையும் மாமியார் பராமரிப்பில் விட்டுவிட்டு மறுநாளே பேருந்தில் யாழ் நோக்கிப் பயணிக்கிறாள் இந்து.

ஏனைன் (A9)பாதை நீளம் வடக்கு சந்தித்திருக்கும் அழிவுகளைக் கண்கூடாகக் காண்கையில் நெஞ்சில் வலியுடன் கூடிய ஒரு நெருடல். சமாதானமும் சுபீட்சமும் விரைவில் எம் வாழ்வில் கிட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சாருவின் வீட்டை அடையும் இந்துவை அத்தான் வரவேற்கிறார். "இந்து வாரும்" என்றவுடன் வீட்டைக் களை கட்ட வைத்துச் சிரிப்பும் கும்மாளமுமாக "அய் என்ரை இந்துக் குட்டி வந்தாச்சு" என்று சந்தோஷ ஆரவாரத்துடன் கன்னங்களில் முத்தம் தந்து வரவேற்கும் சாரு அக்காவை அங்கே காணவில்லை. வீட்டில் இப்போதே மயான அமைதி நிலவுவது போன்ற உள்ளுணர்வு அவளை அலைக்கழித்தது. "இந்து! சாரு கடைசி அறையிலை இருக்கிறாள்; வா! " என்று அழைத்து சென்ற அத்தானைத் தொடர்ந்த இந்துவுக்குக் கட்டிலுடன் ஒட்டி நாராகக் கிடக்கும் சாருவை கண்டதும் துக்கம் பொங்கியது. குழறி அழுதபடி ஓடிச் சென்று சாரு அக்காவைக் கட்டிக் கொள்கிறாள். "எப்ப.... எப்ப வந்தனி" எனச் சைகையால் கேட்கிறாள் சாரு அக்கா. "ஐயோ! என்ரை அக்காவால கதைக்கக் கூடவா முடியேல்லை" என்று தனக்குள் வினவிய அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. என்ன அழகான குரல்... "சின்னஞ்சிறு கிளியே.." பாரதி பாடலை எவ்வளவு திவ்வியமாகப் பாடுவாள்... அதைக் கேட்டுத் தான் செய்யும் வேலையையும் மறப்பாளே இந்து... சாருவின் கண்களிலும் கண்ணீர் அருவியாய் சொரிகிறது. "என்ரை ஆசை அக்கா!" என்று இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுக்கிறாள் இந்து. சாருவின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசமும் மலர்ச்சியும் அவள் அகத்தின் சொல்லொணா மகிழ்வை எடுத்தியம்பியது.

"அடுத்த கிழமை கிளியும் லீவில வந்திடுவான்" அத்தானின் குரல் ஒலிக்கிறது. வெளியே வந்த இந்துவுக்கு டாக்டர் சாருவின் உடல்நிலை பற்றிக் கூறிய அனைத்தையும் உரைத்தார் அத்தான். அவரது முகத்தில் எல்லையில்லா வேதனை தென்படுகிறது. "அதுதான் நான் வந்திட்டனே... கடைசி வரையும் இருந்து கவனிச்சுக் கொள்ளுறன்.." என்று உறுதி கூறுகிறாள் இந்து. அப்போது தான் அவளுக்கு மனச்சுமை சற்றுக் குறைந்தால் போல் இருந்தது.

சாரு அக்கா மகனை எதிர்பார்த்து ஏங்குவது தெரிகிறது. “கிளியைப் பார்க்க வேண்டும்” என எழுதிக் காண்பிக்கிறாள். அடுத்த கிழமை வந்து விடுவான் என இந்து புரிய வைக்கிறாள். அந்த நாளும் வந்தது... முன்னொரு முறை கிளி வந்த போது, சாருவும் அத்தானுடன் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று அவனை வரவேற்று அழைத்து வந்தது இந்துவின் நினைவில் நிழலாடுகிறது... சாரு அக்காவுக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி! புஷ்டியாகக் கொளுத்து நிறத்து வளர்ந்திருந்த கிளியைத் திருஷ்டி முறித்துத் தடவியதும் கூடவே சிந்தனைக்கு வர, அத்தானிடம் கிளியைப் பற்றி விசாரிக்கிறாள் இந்து.

கிளி வந்து விட்டான். "இந்து சித்தீ...! என்று வழக்கம் போலக் கூவியழைத்துக் கைகளைப் பற்றியவன், தாயிடம் ஓடிச் செல்கிறான். "அம்மா....!" அவனது கதறல் அனைவர் கண்களையும் குளமாக்குகின்றது..."அம்மா ஓடி வந்து என்னை அணைப்பாவே சித்தீ... எத்தினை கதை சொல்லுவா...எத்தினை கேள்வி கேப்பா... உச்சி மோந்து.."கிளி... கிளி...." எண்டு எத்தினை தரம் தடவிக் கொடுப்பா... கர்த்தாவே..! இது என்ன சோதனை..? என்ர அம்மா ஆருக்கும் ஒரு கெடுதியுஞ் செய்யேல்லையே... கிளியால் தாங்கவே முடியவில்லை.. கண்ணின் கருமணியாய்க் கண்ணுக்குக் கண்ணாகப் போற்றி வளர்க்கப்பட்டவன்...பள்ளிக்கு வெளிக்கிட்டுப் படலை வரை வந்து சைக்கிளில் ஏறிய பின்பும், இறங்கி ஓடிப்போய் "எணை குனியெணை" என்று சாரு அக்காவை முத்தமிட்டு, அணைத்து, விடை பெறும் சிறுவன் கிளி தான் நினைவுக்கு வருகிறான்...நோயின் உபாதை தெரியாமலிருக்க டாக்டர் கொடுத்த நித்திரைக் குளிசையின் உதவியோடு நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த சாருவை எழுப்ப மனமின்றிக் காலடியிலேயே கண்கலங்கி நின்ற அவனை இந்து ஆசுவாசப் படுத்தி வெளியே அழைத்துச் செல்கிறாள்.

மறுநாள் கண்விழித்த கிளி, கண்கள் செக்கச் செவேலெனச் சிவந்திருக்க, பேயறைந்தது போன்ற முகத்தோற்றத்துடன் வெளியே வருகிறான். அன்னையின் எண்ணம் இல்லாமலே வெளியே செல்ல ஆயத்தமான அவன் மறித்த இந்துவின் கைகளைத் தட்டிவிட்டுச் சென்றுவிடுகிறான்.. இந்துவுக்கு இப்போது நிலைமை நன்கு புரிந்தது. போதைக்கு அடிமையாகி விட்ட கும்பலில் கிளியும் ஒருவன் ஆகி விட்டான் என்று... "ஐயோ இது என்ன கொடுமை! சாரு அக்கா இவனைத் தன்னுடனேயே வைத்திருந்திருக்கலாம்... விதியின் விளையாட்டை என்னவென்பது...?"

மாலையாகியும் கிளி வீடு திரும்பவில்லை யாவரும் கவலையோடு இருக்க, நடுச்சாமத்தில் வீடு திரும்புகிறான் கிளி. துணைக்கு ஓரிருவர்; அதுவும் போதை கும்பல் போலும்... அவர்கள் அத்தானிடம் கிளியின் பணம் முழுவதும் வழிச் சண்டையொன்றில் சூறையாடப்பட்டதைச் சொல்லிச் சென்றனர். எதையும் உணரும் நிலையில் கிளி இல்லை.... கனவில் மிதப்பவன் போல் இருந்த அவனைப் பார்க்கப் பார்க்க அழுகை பொங்கியது இந்துவுக்கு...

விடியற்காலை, இந்து சாருவுக்காகிய எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டுக் குளியலறைக்குச் சென்றாள். திரும்பி வந்து பார்க்கையில், பிரக்ஞை அற்றுக்கிடந்த சாரு அக்காவின் காதுத் தோடுகளைக் கழற்றிக் கொண்டிருந்தான் கிளி. இந்து ஓடிச்சென்று, "ஏய்! கிளி... என்ன வேலை இது? என்ன வேலை? விடு... விடுடா... ஏன் கழட்டுறாய் அம்மாடை தோட்டை?". வைரக்கல் பதித்த, அத்தான் ஆசை ஆசையாகச் செய்து கொடுத்த தோடு அது! "எனக்குக் காசு வேணும் சித்தி! மருந்து வேண்டக் காசில்லை. நான் கொண்டு வந்த காசெல்லாம் களவு போட்டுது. என்னால அது இல்லாம இருக்கேலா. . இங்க பார் சித்தி! கை கால் எல்லாம் ஒரே நடுக்கம்..." என்று காட்டுகிறான் கிளி. இந்து கையறுநிலையில் திக்பிரமையுற்று நிற்க, அந்த இடைவெளியைப் பயன்படுத்தித் தோட்டுடன் கிளி வெளியேறிவிட, "சாறு அக்கா...உனக்கா இந்த நிலை?" என்று குமுறி அழுகிறாள் இந்து. அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. சாருவைப் பார்க்கிறாள். அடிவயிற்றில் உண்டாகும் மூச்சு அவதானத்தில் தெரிய, அக்காவின் அந்திம நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து, அத்தானுக்கு ஆள் அனுப்பிவிட்டு, அக்காவின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள். நீண்ட நெடுமூச்சுடன் சாரு அக்காவின் உயிர் பிரிகிறது.

கண்கள் குளமாகின்றன. அத்தான் போதகரை அழைத்து வருகிறார். இறுதி யாத்திரைக்குத் தயாரான அக்காவுக்கு வேண்டிய காரியங்கள் யாவும் செவ்வனே நடைபெறுகின்றன." அக்கா.... அக்கா...." என்று மகன் வந்தும் காணக் கிட்டாமல், எட்டாத உலகத்திற்குச் சென்றுவிட்ட அக்காவுக்கும் எட்டும்படி உரத்த குரலெடுத்து அழுகிறாள் இந்து. சாறு அக்கா இறுதி யாத்திரைக்குத் தயாராகிவிட்டாள். தாய்க்குப் பிடி மண் போட்டு, அத்தர் தெளிக்கக்கூட நாதியின்றி, ஸ்மரணை அருகி கிடந்தான் கிளி. போதகரின் ஆராதனையைத் தொடர்ந்து, ஆலயக்குழு பாடலைத் தொடங்கிற்று... "இன்பராய்.... ஈற்றிலே.... மோட்சக் கரையில்.... நாம் சந்திப்போம்...." மயானத்தில் நின்ற அனைவர் கண்களும் குளமாகின. அணைத்து நேசம் கூட்டி வளர்த்த அக்கா, மெல்ல... மெல்ல..... குழிக்குள் இறக்கப் படுகின்றாள்... தாங்க முடியாமல் தரையில் விழுந்து புரண்டு அழுத இந்துவை அணைத்துச் சமாதானப்படுத்த முயன்றோர் தோற்றனர். அத்தான் கிளியைக் கைத்தாங்கலாகக் கொண்டுவருகிறார்... பெற்ற தாய்க்குப் பிடிமண் போடுவதைத் தன்னுணர்வின்றிச் செய்கிறான் கிளி... "ஐயோ அக்கா உன்ரை கிளிக் குஞ்சுக்கு ஏன் இந்த நிலை?" என்று வெடித்தழுத அவளைக் கணவர் அணைத்து ஆறுதல் கூறுகின்றார். இது... காலனின் கோலமா...? இல்லை... காலத்தின் கோலமா...?

முற்றும்.

படைத்தவர் : தமிழ்க்கிழவி

(2006 இல் அகில இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற இச்சிறுகதை, சிறு வயதில் தமிழ்க்கிழவியின் மனதில் பதிந்த உண்மைச் சம்பவத்தின் பிரதிபலிப்பு ஆயினும் கதாபாத்திரங்களின் பெயர், இடம், உறவு முறைகள் யாவும் கற்பனையே)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (12-Mar-19, 3:31 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 785

மேலே