தாயே மன்னித்துவிடு

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து கொண்டிருந்தேன். குடியிருந்தது திண்டுக்கல்லில். தினமும் காலை 4.30 மணிக்கு எழுந்து 5.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸையோ அல்லது அதற்குப் பின்பு வரும் டிரெயினையோ பிடித்து மதுரை வந்து, அங்கிருந்து வேறொரு பஸ்ஸில் 8 மணிக்குள்ளாக ஒர்க்ஷாப்பிற்குள் போயாக வேண்டும்..!

எனது அம்மாவுக்கு படிப்பறிவே இல்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. கையெழுத்து கூட போடத் தெரியாது. உடல் வலுவும் இல்லை. ஒல்லிக்குச்சியாக இருக்கும். எப்போதும் காலை நீட்டி சுவரில் சாய்ந்துதான் உட்கார்ந்திருக்கும். வீட்டில் சமையல் வேலையெல்லாம் எனது அக்காள்கள்தான்..! எனக்காக எனது அக்கா செல்வமணி காலை 4 மணிக்கு எழுந்து சமையல் செய்து கொடுக்கும். சில நாட்களில் அக்காவால் முடியலைன்னா அதுவும் படுத்திரும்.

காலை 4.15 மணிக்கு முதல் அலாரம் ஒலித்த சில நொடிகளில் என் அம்மா கண் முழிச்சிரும்.. “தம்பி...” என்று குரல் கொடுக்கும். என்னிடமிருந்து ஏதாவது அசைவுகள் வரவில்லையெனில் “ராசா” என்று இன்னொரு குரல் கொடுக்கும்.. அதற்கும் நான் பதில் அசைவு கொடுக்கவில்லையெனில் எழுந்து உட்கார்ந்து நான் போர்த்தியிருக்கும் பெட்ஷீட்டை லேசாக உருவியபடியே “கண்ணு.. எந்திரி கண்ணு.. அலாரம் அடிச்சிருச்சு..” என்று சொல்லும்..!

அப்படி, இப்படி என்று திரும்பி, அலுத்துப் போய் எழுந்து உட்கார்ந்து அம்மாவை பார்த்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு.. கோபம்.. எல்லாம் சேர்ந்து வரும்.. “அதான் எந்திரிச்சிட்டேன்ல.. அப்புறம் எதுக்கு நொய்.. நொய்யுன்ற..” என்று கடுப்போடு எழுந்து போவேன்.. அம்மா இதைக் கண்டு கொள்ளாமலேயே இன்னொரு பக்கம் படுத்திருக்கும் அக்காளை எழுப்பத் துவங்கும். “செல்வா.. தம்பி எந்திரிச்சிட்டான் பாரு..” என்று குரல் கொடுக்கும். அக்காள் உடனே எழுந்தால் நல்லது. இல்லையெனில், கோபத்துடன் வசவுகளை வாரி வழங்கும். இந்தக் கோபக் குரலைக் கேட்டே அக்காளுக்கும் கோபம் வரும்.. “ச்சே.. ஆத்தாளுக்கும், மகனுக்கும் வேலையில்லை. உயிரை வாங்குறீங்க..” என்று சொல்லிக் கொண்டே எழுந்திருக்கும்.. “ஆமா.. எனக்கு வேலையில்லை.. வேலைக்குப் பொற புள்ளைக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதாடி..?” என்று கேட்டுவிட்டு மீண்டும் படுத்துக் கொள்ளும் அம்மா..!

நான் குளித்து முடித்து ரெடியாகி வரும்வரையில் அக்காவிடமிருந்து சின்னச் சின்ன முனங்கல்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக அம்மாவும் எதையாவது படுத்த நிலையில் இருந்தே அள்ளி வீசிக் கொண்டிருக்கும். அதிகமாக “உனக்கு கொழுப்பு கூடிப் போச்சுடி.. பொம்பளை மாதிரியா இருக்குற..? அவனுக்கு சமைச்சுக் கொடுக்க உனக்கு வலிக்குதா.. நாம செஞ்சு கொடுக்கலைன்னா வேற எவ செஞ்சு கொடுப்பா..?” என்பதாகவே இருக்கும்..!

“இந்தாடா.. கிளம்பு.. போய்த் தொலை.. உயிரை எடுக்குறான்..” என்று அதிகப்பட்சம் முறைப்புடன் அக்கா, டிபன் பாக்ஸை கையில் கொடுத்துவிட்டு எப்போது வெளியேறுவேன்.. கதவைச் சாத்தலாம் என்கிற ஆசையோடு காத்திருக்கும்.. நான் பேக், டிபன் பாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பும்வரையிலும் படுத்திருக்கும் அம்மா, வாசல் கதவு அருகே சென்றவுடன் எழுந்து உட்கார்ந்து, “தம்பி.. பாஸ் எடுத்துக்கிட்டியா..? எல்லாம் எடுத்திட்டியா..? காசு வைச்சிருக்கியா..?” என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகளை வீசும். ஒரு நாள்கூட ஒரு கேள்விக்கும் மரியாதையாய் பதில் சொல்லியதில்லை. “எல்லாம் எடுத்துக்கிட்டேன்.. ச்சும்மா தொண, தொணன்னு அனத்தாதம்மா.. படுத்துத் தொலை..” என்று வெறுப்பை கக்கிவிட்டுத்தான் கிளம்பியிருக்கிறேன்..!

இந்த வெறுப்பை என்றைக்கும் எனது அம்மா கண்டு கொண்டதில்லை.. அடுத்த நாள்.. அதற்கடுத்த நாள்.. அந்த 2 வருட அப்ரண்டிஸ் பீரியட் முடியும்வரையிலும் அதனுடைய கேள்விகளும், விசாரணைகளும், அக்கறையும் ஒரு நாள்கூட நின்றதில்லை..! அதற்குப் பின்பு கேன்சரில் அது படுத்த படுக்கையாகும்வரையிலும்கூட இரவு வேளையில் நான் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் “சாப்பிட்டியா கண்ணு..?” என்று வார்த்தைகளை வீசாமல் தூங்கியதில்லை....!

எனக்கும் என் அண்ணனுக்கும் இடையில் 16 வருட இடைவெளி. இது தலைமுறை இடைவேளையாக பரவி.. ரோட்டில் பார்த்துக் கொண்டால்கூட பேசிக் கொள்ளாமல் செல்வதாக இருந்தது.. ஒரு நாள் டிரெயின் பாஸ் எடுக்க காசில்லை என்றார் அண்ணன். எனக்கு கோபம். தொடர்ந்து வீட்டுச் சண்டையில் வீட்டில் எல்லாரையும் சபித்துவிட்டு, பட்டென்று சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு “இந்த எழவெடுத்த வீட்டுக்கு இனிமேல் வரவே மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்..

மதுரை ஒத்தக்கடையில் என்னுடன் வேலை பார்த்த வேல்முருகனின் வீட்டில் டேரா போட்டுவிட்டேன். காலையில் மெதுவாக எழுந்து, ஹோட்டலில் சுடச் சுட இட்லியையும், மெதுவடையையும் சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கும் கடையிலேயே சாப்பிட்டு இரண்டாவது நாளிலேயே நாக்கு சுவை கண்டுவிட்டது..! மாதம் அப்ரண்டீஸ் உதவித் தொகையாக 450 ரூபாய் கொடுத்தார்கள். அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று மனதுக்குள் ஒரு நப்பாசை..!

2-வது நாள் மாலையே எனது அண்ணன் ஒர்க்ஷாப்பிற்கு போன் செய்தார். “டேய் அம்மா கூப்பிடுதுடா.. வந்திருடா..” என்றார். “அதுக்கு வேற வேலையில்லை.. எங்கிட்டாவது போகச் சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு வைக்கிறேன்னு சொல்லாமலேயே போனை கட் செய்தேன்.. மாலை வேலைகளில் ஒத்தக்கடை சிவலிங்கம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் சினிப்பிரியா, மினிப்பிரியா என்று நண்பர்களுடன் அவர்களுடைய காசில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்தேன்..!

தினமும் மாலை 5 மணிக்கு எனது அண்ணன் போன் செய்வதும், நான் மறுப்பதுமாக நாட்கள் நகர்ந்தன. 10-வது நாள். மறுபடியும் போன்.. “டேய்.. அம்மா நேத்து காலைல இருந்து சாப்பிடலைடா.. உன்னை பார்த்தாத்தான் சாப்பிடுவேன்னு சொல்லுதுடா.. வந்து ஒரு வாட்டி முகத்தைக் காட்டிட்டுப் போடா. அது பாவம்டா...” என்றார் அண்ணன்.. இப்போதும் “உங்க வீட்டுக்கே வர விருப்பமில்லை. ஆளை விடுங்க” என்றேன்..!

மீண்டும், மீண்டும் அன்றைக்கே தொடர்ச்சியாய் போன்.. ஒர்க்ஷாப்பில் விசாரித்தார்கள். விபரம் தெரிந்து ஆள், ஆளுக்கு கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கிக் கொண்டு அடிக்க வந்தார்கள். “மரியாதையா இப்பவே கிளம்பலைன்னா நாளைக்கு வீட்டுக்குள்ள விடமாட்டோம்”னு நண்பர்களே சொல்லும் அளவுக்கு டிராக்டர் ஷெட் பஞ்சாயத்து சென்றுவிட்டது..

கடுப்போ கடுப்பு.. கோபமோ கோபம்..! கொஞ்சமும் நிம்மதியாய் இருக்க முடியலை.. நம்ம இஷ்டத்துக்கு விட மாட்டேன்றானுக என்று நெஞ்சு கொதிக்க.. நண்பர்களிடம் கை மாத்து வாங்கிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறினேன்.. மதுரையில் சிடி சினிமா, தீபா, ரூபாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்றுதான் பிட்டு படங்களை மாற்றுவார்கள். அது வியாழக்கிழமை.. நாளைக்கு ஒரு நாள் கூட இருந்து படத்தையாவது பார்த்துட்டுப் போகலாம்னு முடியலையே என்ற கோபமும் சேர்ந்து கொண்டது..!

திண்டுக்கல்லுக்கு இரவு 7.30 மணிக்கு வந்து சேர்ந்து அப்பவும் வீட்டுக்குப் போக மனசில்லாமல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாஸ் கடையில் பையை வைத்துவிட்டு அப்படியே என்விஜிபி தியேட்டருக்கு 8 மணி ஷோவிற்குச் சென்றேன்.. அப்போது பிட்டு படங்கள் மட்டுமே அந்த ஷோவில் ஓட்டுவார்கள்.. ஓட்டினார்கள்.. கண் குளிர பார்த்துவிட்டு மிக சாவகாசமாக போய்த் தொலைவோம் என்ற நினைப்பிலேயே 11 மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினேன்..!

உள்ளேயிருந்து என் அம்மாவின் குரல்தான்.. “செல்லா.. தம்பி வந்துட்டான்.. தம்பி வந்துட்டான்.. கதவைத் திறடி..” என்றது அவசரமான அந்தக் குரல்.. கதவைத் திறந்த அக்காள் தலையில் நொங்கு நொங்கென்று கொட்டினாள்.. “சனியனே.. சனியனே.. ஏன் எங்க உயிரை எடுக்குற..? உங்க ஆத்தாளுக்கு எவ பதில் சொல்றது..? வந்து தொலைய வேண்டியதுதானே..?” என்றது. படுக்கைகள் விரித்து தூங்கிப் போயிருந்தவர்களை எழுப்பியிருக்கிறேன் என்பது புரிந்த்து. இன்னொரு மூலையில் கட்டிலில் படுத்திருந்த அண்ணன் எழுந்து காலைத் தொங்கபோட்டபடியே என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகிலேயே தரையில் காலை நீட்டி அமர்ந்திருந்த எனது அம்மாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் அம்மாவின் குரல் வீடு முழுக்க திரும்பத் திரும்ப ஒலித்தது.. “சோறு எடுத்து வைடி.. புள்ள பசியோட வந்திருப்பான்..” என்றது.. அந்த ஒரு நொடிதான்.. எனக்குள் ஒரு மிருக வெறி.. அடுத்த 5 நிமிடங்களுக்கு எனது அம்மாவைப் பார்த்து எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கத்தித் தீர்த்தேன்..

சனியன், பிசாசு, பேய் என்று என்னென்ன அடைமொழி இருக்கோ அத்தனையையும் சொல்லி.. “ஏன் என் உசிரை எடுக்குற..? பார்க்கணும்.. பார்க்கணும்னு ஏன் என்னைக் கொல்லுற.. மதுரைல நிம்மதியா இருந்தேன்.. அதான் வந்துட்டேன்ல.. என்ன செய்யணும்.. சொல்லு.. சொல்லு..?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து அராஜகம் செய்தேன்.. எனது அண்ணன் எனது கையை கஷ்டப்பட்டு விலக்கி என்னைக் கீழே தள்ளிவிட்டார்..

எனது அம்மா தனது கண்ணாடியைக் கழட்டிவிட்டு கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு மீண்டும் அக்காவிடம் “தட்டு எடுத்து வைடி. சாப்பிட்ட்டும்...” என்று சொல்லிவிட்டு, “சாப்பிடுறா.. சாப்பிடு தம்பி.. ராசா சாப்பிடு..” என்றார். இப்போதும் என் தலையில் அடித்துக் கொண்டு, “சாப்பிடு.. சாப்பிடு.. சாப்பிடு.. ஏன் இப்படி உசிரை எடுக்குற..? சாப்பிடவா நான் பொறந்தேன்.. சனியனே உசிரை எடுக்காத.. காலைல சரவணான்னு எழுப்பின கொன்னே புடுவேன்..” என்று சொன்னபடியே விரித்திருந்த பாயில் மல்லாந்தேன்..!

எனக்கு இப்போதும் நியாபகம் இருக்கிறது. அன்றைய இரவில் நான் சாப்பிட்ட பின்பு எனது அம்மாவை வலுக்கட்டாயமாக எழுப்பி அண்ணன் ஒரு பக்கம், அக்காள் ஒரு பக்கமாக கெஞ்சு, கெஞ்சென்று கெஞ்சி சாப்பிட வைத்தார்கள்.. என்னைப் பார்த்தபடியே ஏக்கத்துடன் இருந்த அந்த சுருங்கிப் போன முகத் தோல்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு என் முதுகைக் காட்டிவிட்டு திரும்பிப் படுத்தேன்..! இப்படித்தான் தொடர்ந்திருந்தது எனக்கும், எனது அம்மாவுக்குமான பாசப் போராட்டம்.

சாப்பிடு.. தூங்கு என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு எதையும் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு தாயை நான் அப்போதைக்கு விரும்பாதவன்.. ஆனால் இப்போது..?

இன்று நீண்ட நாட்கள் கழித்து எனது தாயோடு நெருங்கிப் பழகிய ஒரு புண்ணிய ஆத்மாவிடம் சிறிது நேரம் பேசினேன்..! எனது அம்மாவைப் பற்றிச் சொன்ன அவர், “பாவம்டா உங்கம்மா.. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது.. உலகமே தெரியாது.. பாசக்காரி.. நீங்கதான் அவளைப் புரிஞ்சுக்கலை..” என்றார்..

அந்த வார்த்தைகள் என் நெஞ்சில் முள்ளாய் குத்தியது.. வீடு வந்து சேரும்வரையில் நான் என் நினைவில் இல்லை.. இப்போதுதான் கொஞ்சம் கூடுதலாக நினைத்துப் பார்க்கிறேன்.. எத்தனை பாசம்..? எத்தனை அன்பு..? எத்தனை ஈர்ப்பு..? எத்தனை கனிவு..? அத்தனையையும் கலந்து கொடுத்த ஒரு தெய்வத்தையே நான் மதிக்காமல்தான் வளர்ந்திருக்கிறேன்.. வந்திருக்கிறேன்..! புரிந்து கொள்ளாமல்தான் இருந்திருக்கிறேன்..!

பெற்றவர்களின் ஆசி எல்லாவற்றுக்கும் வேண்டும் என்பார்கள். நான் எல்லாவிதத்திலும் அவர்களை உதாசீனப்படுத்தியவன்.. கஷ்டப்படுத்தியவன்.. மரணத் தருவாயில் இருந்த எனது தாய், தந்தையர் இருவரிடமும் இரு வேறு சந்தர்ப்பங்களில் நேருக்கு நேராகவே கேட்டிருக்கிறேன்.. “செத்துத் தொலையக் கூடாதா..?” என்று..!

அவர்களுடைய இறுதிக் கட்டத்தில்தான் அவர்களுடன் நெருக்கமாகி, அவர்கள் இருக்கப் போவதே கொஞ்ச நாள்தான்.. பாவம் என்று பலரும் சொன்ன பின்புதான் தாய், தந்தையர் என்பதையும் தாண்டி ஒரு உயிர் என்ற பிற்போக்குத்தனமான பார்வையுடன் பார்த்திருந்த எனது கேடுகெட்டத்தனத்தை இன்றைக்கு நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது..!

அத்தனைக்கும் இப்போது படுகிறேன்..! நினைத்துப் பார்த்தால் இங்கேதான் ஜெயிக்கிறான் இறைவன்..! பட்டுத் திருந்து.. படாமல் போனால் கிடைக்காது புத்தி என்கிறான் இறைவன்..! இருக்கும்போது அதன் அருமை தெரியவில்லை. இல்லாதபோதுதான் புரிகிறது..! இன்றைக்கு ஒரு வேளை.. ஒரு வாய் சாப்பிட்டியா என்று கேட்கவே எனக்கு நாதியில்லை..! “தூங்குனியா..? உடம்பு சரியில்லையா..?” என்று அன்பை கொட்டவும் ஆளில்லை..! செத்துப் போனால்கூட தூக்கிப் போடவும் ஆளில்லை.. எத்தனை, எத்தனை விஷத்தைக் வார்த்தைகளில் தோய்த்து வீசியிருக்கிறேன் எனது தாயை நோக்கி.. அத்தனைக்குமான பதிலடிகளை இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன்..! எத்தனையோ முறைகள்.. எப்படியெப்படியோ திட்டமிட்டும் எதுவும், எதிலும் ஜெயிக்க முடியவில்லை. தோற்றுக் கொண்டேயிருக்கிறேன் ஒவ்வொரு விஷயத்திலும்..! தாயின் ஆசிகளே இல்லையே.. கிடைத்திருக்காதே.. பின்பு எப்படி வரும் நல்ல வாழ்க்கை..?

ஆண்டவனின் விளையாட்டில் எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.. அத்தனை பேருக்கும் அவன் அளந்துதான் கொடுத்திருக்கிறான்.. கொடுக்கிறான் என்பது இப்போது யோசித்துப் பார்த்தாலும் புரிகிறது.. நான் யார், யாரையோ இப்படி சொன்னேன்.. அப்போது நான் சொன்னது, இப்போது எனக்கே திருப்பியடிக்கிறது..!

வேறு வழியில்லை.. மனதை சாந்தப்படுத்த யாரிடமாவது பேச வேண்டும்போல் உள்ளது. நான் பேசுவதையும், மன்றாடுவதையும், மன்னிப்பு கேட்பதையும் தெரிந்து கொள்ளவும் ஆள் இல்லையே.. அதனால்தான் இந்த எழுத்து..!

தாயே.. கடைசி முறையாகக் கேட்கிறேன்.. மன்னித்து விடு..!




உண்மைத்தமிழன்

எழுதியவர் : (8-Mar-19, 2:05 am)
பார்வை : 381

மேலே