பூக்கள் வடிக்கும் புறநானூறு

#பூக்கள் வடிக்கும் புறநானூறு

அவ்வை பொன்முடி காக்கைப் பாடினி
சங்கப் பெண்களும் சாகசம் படைத்தார்
புண்ணியத் தமிழில் புறநானூறாய்
மண்ணில் மணக்குது மகிழம் பூவாய்..!

கண்ணியம் நிறைந்த வாழ்வில் அன்று
பெண்ணியம் தனியாய் வேண்டியதில்லை
கோவிலில் கற்பும் சூறை இன்று
கொடுமை அனைத்தும் களைவோம் கொன்று..!

ஆணிற்கிங்கே இணையாம் பெண்கள்
தேனைச் சொரியும் பூக்கள் வடிவில்
வாளும் ஏந்தி போரினில் வென்றார்
வேலுநாச்சியார் ஜான்சிராணியார்..!

பால்வெளி கண்ட கல்பனா சாவ்லா
போர்ப்படை விமானி தீரர் ஹினா
மயானப் பணியில் மேதகு ஜெயந்தி - இன்னும்
மாயங்கள் புரிவார் நிலவினில் உலவி..!

பூக்கள் என்றே நுகர்ந்தது போதும்
பாக்கள் படைக்கும் அற்புதம் பாரும்
ஆயுதங்கள் அன்னைத் தமிழில்
அம்பும் எய்வார் அர்ப்பர் நெஞ்சில்..!

பூக்கள் வடிக்கும் புறநானூறு
பொய்களை எதிர்த்து நடத்தும் போரு
வாழ்விலக்கணம் சமைக்கும் பாரு
வேழத்தின் வலிமை வீரத்தோடு..!

நாட்டிய மேடையில் ஆடவோ நங்கை
பாட்டினில் வெடியும் வைப்பார் மங்கை
கேட்டினை யளிக்கும் கூட்டமவர்க்கு
வேட்டினை வைப்பார் பாட்டிலவர்க்கு..!

எத்தனை எத்தனை இடர்கள் இங்கு
எத்தர் அவர்க்கு எடுப்போம் சங்கு
புத்தன் காந்தி போலவர் வேடம்
மொத்தம் கலைத்து மொழிவோம் பாடம்

உணவு சமைப்போம் அறுசுவையுடனே
விண்வெளி பறப்போம் விண்கலந்தனிலே
பண்ணும் இசைப்போம் மனதும் மயக்க
இன்னும் செய்வோம் மண்ணும் வியக்க..!

நாட்டின் நடப்பு நல்வினை தீவினை
ஏட்டில் எழுத்தில் அறியத் தருவோம்
உறங்கும் மக்களை உலுக்கி எழுப்பி
வெளிச்ச வழிக்கு விளக்கும் பிடிப்போம்..!

நேற்றைய பூக்கள் வடித்ததை குடித்தோம்
நெஞ்சில் வலிமை யாவும் படைத்தோம்
நாளைய விடியல் எம்மால் நடக்கும்
வெளிச்சம் பெறும்வரை எம்கோல் வெடிக்கும்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (11-Mar-19, 2:57 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 262

மேலே