தொலைந்து போன வாழ்க்கை முறைகள்
#தொலைந்து போன வாழ்க்கை முறைகள்..!
கிளி பேசும் குயில் பாடும்
கீதங்கள் காதில் விழும்
அதிகாலை இன்பமெல்லாம்
காணாமல் போனதடி
மரமிருந்த இடமெல்லாம்
மாடி வீடும் ஆனதடி...!
சாணமிட்ட வாசல்வெளி
மஞ்சளிட்ட நிலைக்கதவு
நீண்ட நடை வாசல்
நிலவிறங்கும் நடுக்கூடம்
மாடங்களும் திண்ணைகளும்
தேடி எங்கு செல்வதடி..?
பல்லாங்குழி அஞ்சாங்கல்லும்
தாயக்கட்டை சோழி என்றும்
தோழியுடன் ஆடியது
நினைவினில் நிற்குதடி - இன்று
தொலைகாட்சி கணினி எல்லாம்
நம்மை சிறை வைத்ததடி...!
தாத்தன் அப்பன் பேரனென்றும்
அத்தை மாமன் மாமி என்றும்
கூடி உண்டு வாழ்ந்த சனம்
திசைக்கொன்றாய் போனதடி
கைபேசி பேச்சினிலே
நிழல் இன்பம் காணுதடி..!
கேப்பை கம்பு இல்லாம(ல்)
நோய்நொடி சேர்ந்ததடி
மரணித்து போனாலும்
துக்கம் ஓர் நாளில் தீருதடி
அந்நாளின் நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சில் வாசமடி..!
#சொ.சாந்தி-
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
