வேர்த்திரள்
(காடும் காடு சார்ந்த இடமும்)
கூட்டங் கூட்டமாய் கூடியிருந்த காட்டில் - இன்று
அடையாளம் அறிவதற்கே அகழ்வாராய்ச்சியை நாடும் நிலை...
பெயர் தெரியா பல்லுயிர்கள் பவனி வந்த இடத்தில் - இன்று
பெயர் பலகை மட்டுமே பெயரளவில் நிமிர்ந்து நிற்கிறது ...
தனக்கென தனி ராசாங்கம் அமைத்து தன்னிகரற்று இருந்தவை – இன்று
தாகம் கொண்டு மொண்டு குடிக்க நீரில்லா நிர்வாண நிலை...
இயற்கையின் கொடையில் கொடிகட்டிப் ப(ற)ரந்த காடு – இன்று
தன்னை இழந்து தன் உறவுகளையும் தொலைத்து தரணியில் தொலைந்து போனது ...
விஞ்ஞானம் வளர்ந்தது அதனால் மெய்ஞ்ஞானம் வலுவிழந்தது
கண்காணிப்பு காமிராக்கள் படம்பிடிக்க இங்கு காட்சிகள் தான் இல்லை ...
சிறகடித்து பறந்து திரிந்து பல்லிசை கேட்டு பரவசம் கொண்டவை – இன்று
மொண்டி காலுடன் மூக்குடைந்து இரத்தச் சுவற்றில் கிறுக்குது...
வானம் பாடியாய் தேவகானம் பாடியவை - இன்று
தேவிடியா வீட்டில் சிறை கண்டு தன் சுயம் இழக்கிறது ...
அறிய பல அற்புதங்கள் தன்னில் கொண்டிருந்த தன்னிகரில்லா காடு
மூக்கு முட்ட சாப்பிட்டு தொப்பை போடும் மூர்க்கர்களின் முகவரியானது...
இயற்கையின் வனப்புகளை துவம்சம் செய்து இகழ்ந்துவிட்டு
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வெற்றி வாகை சூடி வீதியுலா நடக்கிறது ...
மார்பை அறுத்துவிட்டு குழந்தை அழுகிறது என்று பொய்க்குரலில் கூக்குரலிடும்
குப்பைத்தொட்டியில் நிதம் நிதம் குப்பை சேர்ந்து கொண்டே இருக்கிறது ...
வனத்தை அழித்து வானத்தை அழுகச் சொன்னால் எப்படி ?- நிலத்தடி நீரும்
நிர்வாணமான நிலையில் நம் கெளரவம் காக்கும் கௌரவர் யார் தான்?
உன் தலையை சீவி முதுகில் குத்தி பிறப்புறுப்பை அறுத்து - உனை
கொஞ்ச கொஞ்சமாய் கொலைசெய்து இப்போது தலை சொரிந்தென்ன பயன் ?..
சோலை வனம் உனை சூளையில் எரித்து - இன்று
சாலைகள் அமைத்து பாலையாய் மாற்றினர் பாமரர் பலர்…
அமிலம் நாம் தந்தும் அமிர்தமே நீ தந்தாய் - மண் அரிப்பை
நீ தடுத்தாய் எங்களுக்கு அரிப்பெடுத்து உனையே அழித்துவிட்டோம் ..
பழங்குடியினர் பலரும் உன் நிழலில் தான் இளைப்பாடினர் ..
இன்று பல குடிகளும் குலதெய்வம் இழந்து குடி மூழ்கிப்போனதே ...
ஒற்றை ஆள் என நினைத்து உன்னை ஓரம் கட்டினர் - ஒட்டுண்ணியாய்
எண்ணிக்கையிலடங்கா ஓராயிரம் உயிர்கள் உதிர்ந்து போனது ...
சின்னத்தம்பியை சிறைபிடிப்பதை விட்டு விட்டு - நாம்
சின்ன புத்திக்காரர்களின் மனச்சிறையை உடைத்தெறிய வேண்டும் ...