வேர்த்திரள்
கோடரிக் கறையான் அரிக்கத் தொடங்கிய
வன தாயின் நாடித்துடிப்பு மெல்லமெல்ல
அடங்க முனையும் அஸ்தமன காலநதியில்
வறட்சியாறுகளின் பெருக்கெடுப்பு வையமெங்கும்
பாய்தலில் சிக்குண்ட வயிற்றுக்கு சோறுபோடும்
விவசாயி தற்கொலையை ஊடகங்கள் வழி
கண்டு கடந்தபடி உல்லாசம் கொள்கிறோம்.
.**
நிழற்குடைகளின் கீழ் சொகுசு வாகனங்களை
தரித்துவிட்டு அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள்
கவர்ந்திழுக்கும் செயற்கை மர அழகை ரசித்தபடி
சூழல் மாசடைவு கருத்தரங்கு நிகழ்த்துகிறோம்!
**
கைகளில் அழுக்குப்படாமல் குழந்தையை
வளர்த்து மேற்படிப்பிற்காக மேல்நாடுகளுக்கு
அனுப்பும் முயற்சியில் மூழ்கிவிடும் நாங்கள்
அது சுவாசிக்க சுத்தமான காற்றுக்காய் ஒரு
மரக்கன்றையேனும் நட்டுவைக்க மறக்கிறோம்!
**
ஞாபகங்களைத் தொலைப்பதற்கான மறதியை மட்டும்
ஞாபகமாய் வாங்கி வைத்திருக்கும் நாங்கள்
எங்கள் முன்னோர்கள் எங்களுக்குப் போதித்த
இயற்கை நேசத்தையும் என்றோ மறந்துவிட்டோம்.
**
செங்கல் நாட்டி கட்டிட மரங்கள் வளர்க்கும்
அறிவு முதிர்ச்சியால் நெகிழிப் பூங்கன்று
வாங்கி வாசனைத்திரவியம் பூசி மகிழ்ந்தபடி
பாலைவன விரிவாக்கத்திற்கு துணைசெய்த
கடைசிப் பரம்பரை என்றப் பெருமையோடு
அற்றுப்போகும் எங்கள் உயிரின் வேர்த்திரள்
இனி மனிதமற்ற உலகை அறிமுகம் செய்துவைக்க
இப்பூமியை விட்டு விடைபெற முனைகிறோம்!
**மெய்யன் நடராஜ் **