மண்ணெய்யின் துர்மணம்

வெளியே குதிரை கனைத்தது. அழைப்பை இனங்கண்டு கொண்ட கலேரி வீட்டுக்கு வெளியே ஓடினாள். குதிரை அவளது பெற்றோரின் கிராமத்தில் இருந்து வந்திருந்தது. அது தான் தன் தந்தையின் வீட்டுக்குச் செல்லும் கதவே போல, அதன் கழுத்தில் தலை சாய்த்தாள் அவள்.

கலேரியின் பெற்றோர் சம்பாவில் வாழ்கின்றார்கள். சம்பா, உயர் நிலத்தில் அமைந்துள்ள அவளது கணவனின் கிராமத்தில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது. பாதையானது தாழ் நிலத்தை நோக்கி வளைந்து நெளிந்து இறங்கிச் செல்லும் இந்த இடத்தில் இருந்து பார்த்தால், நீண்ட தூரத்தில் இருக்கும் சம்பா காலடியில் பரந்து விரிந்து கிடப்பது போல் தோன்றும். பிறந்த வீட்டு நினைவு வரும்போதெல்லாம் கலேரி தன் கணவன் மானக்குடன் இந்த இடத்துக்குச் செல்வாள். ஆதவனின் ஒளியில் மின்னுகின்ற சம்பாவின் அகங்களைப் பார்த்திருந்துவிட்டுத் திரும்புவாள். அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.

ஆண்டுக்கு ஒரு முறை அறுவடைக்குப் பின்னர் தன் பெற்றோருடன் ஒரு சில நாட்களை கழிக்கக் கலேரி அனுமதிக்கப்படுவாள். அவர்கள் ஒருவனை லகர்மண்டிக்கு அனுப்பி அவளைச் சம்பாவுக்கு அழைத்துக்கொள்வார்கள். கலேரியைப் போலவே வெளியே மணம் முடித்துள்ள அவளது இரு நண்பிகளும் அதே நேரத்தில் சம்பாவுக்கு வருவார்கள். பெண்கள் மூவரும் தங்கள் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் அந்த வருடாந்த ஒன்றுகூடலுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். ஒன்று சேர்ந்து தெருக்களில் திரிவர். பின்பு, அறுவடைத் திருவிழா வரும். அறுவடைத் திருவிழாவுக்குப் புதிய துணிமணிகள் வாங்குவார்கள். அவர்களது துப்பட்டாக்கள் சாயமூட்டப்பட்டு. கஞ்சி இடப்பட்டு, மைக்கா தூவப்பெற்று மினுமினுக்கும். அவர்கள் கண்ணாடி வளையல்களும் வெள்ளிக் காதணிகளும் வாங்குவார்கள்.

கலேரி எப்போதும் அறுவடைக்கான நாட்களை எண்ணிக் கொண்டே இருப்பாள். இலையுதிர்கால இளந்தென்றல் மழைக்கால மேகங்களைக் கலைக்கும் வரை அவள் வேறு எதையும் சிந்திக்க மாட்டாள். அவளது நாளாந்தக் கடமைகளான, கால்நடைகளுக்குத் தீவனமிடல், கணவனின் பெற்றோருக்கு உணவு தயாரித்தல் ஆகியவற்றை முடித்தபின்னர், உட்கார்ந்து தன் பிறந்தகத்திற்கு அழைத்துச்செல்ல ஒருவர் வர இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்று எண்ணத் தொடங்கி விடுவாள்.

இப்போது, மீண்டும் ஒரு முறை, அவளது வருடாந்த விருந்துக்கான வேளை வந்துவிட்டது. அவள் குதிரையை மென்மையாக, மகிழ்ச்சியோடு தடவி விட்டு, அவளது தந்தையின் வேலையாள் நாட்டுவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து விட்டு, மறுநாள் புறப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டாள். அவளது மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க வேண்டியிருக்கவில்லை. அவளது முகமே அதனை வெளிக்காட்டப் போதுமானதாய் இருந்தது. அவளது கணவன் ஹுக்காவை ஒரு முறை இழுத்து விட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். அது புகையிலையை விரும்பாமையைப் போலவோ அல்லது மனைவிக்கு முகங் கொடுக்க இயலாமையை போலவோ தோன்றியது.

"சந்தைக் கடைக்காவது சம்பாவுக்கு நீங்கள் வருவீர்களா, இல்லையா? ஒரு நாளைக்காவது வாருங்களேன்...." அவள் இரந்தாள்.

மானக் அவனது சுங்கானை ஒருபுறம் போட்டான். ஆனால் பதில் இறுக்கவில்லை. "ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?" என்றாள் சிறு சினத்துடன் அவள். "நான் உங்களிடம் ஒன்று சொல்லலாமா?"

"நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும். நீ வருடத்துக்கு ஒருமுறைதான் உன் பெற்றோரிடம் போகிறாய். அத்துடன், இதற்கு முன் ஒருபோதும் நிறுத்தப்பட்டதும் இல்லை...."

"பின் ஏன் இம்முறை மட்டும் என்னை நிறுத்த விரும்புகிறீர்கள்?" அவள் உரிமையோடு கேட்டாள்.

"இம்முறை மட்டும்" அவன் சமாதானப்படுத்தினான்.

"உங்கள் அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. ஏன் நீங்கள் மட்டும் குறுக்கே நிற்கிறீர்கள்?". கலேரி குழந்தைத்தனமாக முரண்டு பிடித்தாள்.

"என் அம்மா....." மானக் வாக்கியத்தை முடிக்கவில்லை.

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காலைப்பொழுதில், கலேரி உதயத்திற்கு முன்பே தயாராகிவிட்டாள். அவளுக்குக் குழந்தைகள் இல்லாத படியால், அவர்களை விட்டு விட்டுச் செல்வதா, உடன் அழைத்துச் செல்வதா என்ற பிரச்சனையே எழ இடமில்லை. மானக்கின் பெற்றோரிடம் அவள் விடை பெற்றதும் நாட்டு குதிரைக்குச் சேணம் பூட்டினான்.அவர்கள் அவளது தலையில் தொட்டு ஆசீர்வதித்தனர்.

"நானும் கொஞ்ச தூரம் உன்னுடன் வருகிறேன்" என்றான் மானக்.

அவர்கள் புறப்பட்ட போது கலேரி மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தாள். மானக்கின் புல்லாங்குழலைத் தனது துப்பட்டாவின் கீழ் மறைத்து வைத்தாள்.

ஹாஜியாரின் கிராமத்துக்கு அப்பால் வீதியானது சம்பாவை நோக்கிச் செங்குத்தாய் இறங்கிச் செல்கிறது. அங்கு அவள் புல்லாங்குழலை வெளியே எடுத்து மானக்கிடம் தந்தாள். அவனது கரங்களைத் தன் கரங்களில் ஏந்திய அவள், "வாருங்கள்! உங்கள் புல்லாங்குழலை வாசியுங்கள்" என்றாள். ஆனால், சிந்தனையில் ஆழ்ந்திருந்த மானக் அதைக் கவனிக்கவில்லை. "ஏன் நீங்கள் உங்கள் புல்லாங்குழலை வாசிக்கவில்லை?" என்று அவள் நயமாகக் கேட்டாள். அவன் அவளைச் சோகமாகப் பார்த்தான். பின்னர் புல்லாங்குழலைத் தன் அதரங்களில் பொருத்தி இனந்தெரியாத சோக ராகம் ஒன்றை வாசித்தான்.

"கலேரி! போகாதே" என்று அவன் அவளிடம் இரந்தான். "மீண்டும் கேட்கிறேன்; இம்முறை மட்டும் போகாதே!". மேற்கொண்டு தொடர இயலாமல் புல்லாங்குழலை அவளிடம் கையளித்தான்.

"ஆனால் ஏன்?" அவள் கேட்டாள். "சந்தைக்கடையன்று வாருங்கள்; நாமிருவரும் சேர்ந்தே திரும்பலாம்; சத்தியமாய்".

மானக் மீண்டும் கேட்கவில்லை.

அவர்கள் பாதையோரத்தில் நிறுத்தினார்கள். தம்பதியரைத் தனியே விட்டுவிட்டு நாட்டு குதிரையை ஒரு சில அடி முன்னால் கொண்டு சென்றான். மானக்கின் சிந்தனை பின்நோக்கித் தாவியது. இதேவேளை ஏழு வருடங்களுக்கு முன்னர் அவனும் அவனது நண்பர்களும் இதே வீதி வழியே தான் சம்பாவின் அறுவடைத் திருவிழாவுக்குச் செல்வதற்காக வந்தார்கள். இந்தச் சந்தைக் கடையிலேயே மானக் கலேரியை முதன்முதலில் கண்டான். அவர்கள் தமது இதயங்களை பரிமாறிக் கொண்டார்கள். பின்னர் அவளைத் தனிமையில் சந்தித்து, அவள் கைகளைத் தன் கைகளில் ஏந்தி "நீ பால் மிகுந்த முற்றாத சோளத்தை ஒத்தவள்" என்றதை இப்போது நினைவு கூர்ந்தான்.

"மந்தைகள் தான் முற்றாத சோளத்துக்கு அலையும்" கலேரி பதிலிறுத்தாள். தனது கைகளை விடுவித்துக் கொண்டு, "மனிதர்கள் அது பொரிக்கப்படுவதையே விரும்புவர்; உங்களுக்கு நான் வேண்டுமானால் என்னைக் கைப்பிடிக்க என் அப்பாவிடம் போய்க் கேளுங்கள்”.

மானக்கின் உற்றார் இடையே திருமணத்துக்கு முன்பே மணப்பெண்ணுக்கான விலையைக் கொடுத்து விடுவது வழக்கமாக இருந்தது. கலேரியின் தந்தை தன்னிடம் இருந்து என்ன விலையை எதிர்பார்ப்பார் என்று அறியாத மானக் அஞ்சினான். ஆனால் கலேரியின் தந்தை செல்வச் செழிப்பு மிக்கவர்; நகரங்களில் வாழ்க்கை நடத்தியவர்; அவர் தன் மகளுக்காகப் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்றும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த உயர்ந்த ஒழுக்கமுடைய ஒருவனுக்கே மகளைக் கொடுப்பதாகவும் உறுதி பூண்டிருந்தார். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த மணமகனாக விரைவிலேயே மானக் தீர்மானிக்கப்பட்டான். மானக்கும் கலேரியும் விரைவில் மணமுடித்தனர்..... நினைவுகளில் ஆழ்ந்து இருந்த மானக் தன் தோளைத் தொட்ட கலேரியின் கைகளால் உசுப்ப பெற்றான்.

"எதைப் பற்றிக் கனவு காண்கிறீர்கள்?". அவள் அவனைப் பரிகாசித்தாள்.

அவன் பதிலிறுக்கவில்லை. குதிரை பொறுமை இழந்து கனைத்தது. கலேரி புறப்படுவதற்காக எழுந்தாள். "இங்கிருந்து இரு மைல்கள் தொலைவில் உள்ள நீல மணிக்கட்டை அறிவீர்கள் தானே?" என்றாள். அதனூடாகச் செல்பவர்கள் எவரேனும் செவிடாவர் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் நிச்சயம் நீலமணிக் காட்டின் ஊடாகச் சென்று இருக்க வேண்டும். நான் சொல்லும் எதையும் நீங்கள் கேட்பதாய் காணோம்.

" நீ சொல்வது சரிதான்; சரி நீ சொல்லும் எதையும் என்னால் செவியுற முடியவில்லை" என்று மானக் நெடுமூச்சு உயிர்த்தான்.

அவர்கள், ஒருவர் எண்ணத்தை மற்றவர் புரிந்து கொள்ளாமலேயே, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "நான் போகிறேன்" என்றாள் கலேரி மென்மையாக. "நீங்கள் திரும்புவது நல்லது; நீங்கள் வீட்டில் இருந்து நெடுந்தூரம் வந்து விட்டீர்கள்".

"நீயும் நீண்ட தூரம் நடந்து விட்டாய்; நீ குதிரையில் ஏறிக் கொள்வது நல்லது" எனப் பதிலளித்தான் மானக்.

"இந்தாருங்கள், உங்கள் புல்லாங்குழல்!"

"அதை நீயே எடுத்துக்கொள்"

"சந்தைக்கடை நாளன்று வந்து இதை வாசிப்பீர்களா?" அவள் புன்னகையுடன் கேட்டாள். அவளது விழிகளில் ஆதவனின் பிரகாசம் தெரிந்தது. மானக் அவனது முகத்தைத் திருப்பிக் கொண்டான். கலேரி குழப்பத்துடன் தோளைக் குலுக்கிக் கொண்டு சம்பா நோக்கி பயணித்தாள். மானக் வீடு திரும்பினான்.

வீட்டினுள் நுழைந்த அவன் ஏதும் செய்யத் திராணியற்றுத் தோற்றுப்போன மனநிலையோடு கட்டிலில் சாய்ந்தான். "நீ போய் வர இவ்வளவு நேரமா?" என்றாள் அவன் தாய் வியப்புடன். "சம்பா வரை போனாயா?"

சம்பா வரை அல்ல; குன்றின் உச்சி வரை" மானக்கின் குரல் கனத்திருந்தது.

"நீ ஏன் கிழவி போல முணுமுணுக்கிறாய்?" அவன் தாய் கடுமையாகச் சொன்னாள். "ஆண்மகனாய் இரு".

மானக் எதிர்த்துச் சுடச்சுடப் பதிலுரைக்க விரும்பினான். "நீங்கள் ஒரு பெண்; ஒரு மாற்றாக நீங்கள் அழுதால் என்ன?" ஆனால், அமைதி காத்தான்.

மானக்கும் கலேரியும் மணமுடித்து ஏழு ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாததால், மானக்கின் தாய் எட்டாவது வருடத்திலும் இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என்று இரகசியமாய் ஒரு முடிவெடுத்திருந்தாள். இவ்வருடம், அவளது முடிவுக்கு அமைய மானக்கிற்கு இரண்டாவது மனைவியைப் பெற்றுக்கொள்ள ஐந்நூறு ரூபாய்கள் செலுத்தியுள்ளதுடன், மானக் அறிந்தவரையில் புதிய மணமகளை கொண்டுவருவதற்கு கலேரி தன் பிறந்தகத்துக்குச் செல்லும் நாளுக்காகத் தான் காத்திருந்தாள். தாய்க்கும் மரபுக்கும் கட்டுப்பட்டு மானக்கின் உடல் புதிய பெண்ணை ஏற்றுக்கொண்டது. ஆனால் மனமோ அவனுள் மரத்துப் போனது.

ஒரு அதிகாலைப் பொழுதில் அவன் சுங்கான் பிடித்துக் கொண்டிருக்கையில் அவனது பழைய நண்பன் ஒருவன் கடந்து சென்றான். "டேய் பவானி! இந்த விடிகாலையிலேயே எங்கே போகிறாய்?" பவானி நின்றான். அவனது தோளில் ஒரு சிறு முடிச்சு வைத்திருந்தான். "ஓர் இடமும் இல்லை" என மழுப்பினான். மானக் "நீ ஏதோ ஒரு இடத்துக்கோ அல்லது இன்னோர் இடத்துக்கு தானே போக வேண்டும்?" என்று வியந்தான். "கொஞ்சம் புகை பிடிக்கிறாயா?"

பவானி தரையில் அமர்ந்து மானக்கின் கரங்களில் இருந்த சுங்கானை எடுத்துக்கொண்டான். "நான் சந்தைக் கடைக்குச் சம்பாவுக்குப் போகிறேன்" ஈற்றில் சொல்லியே விட்டான். பவானியின் வார்த்தைகள் மானக்கின் இதயத்தை ஊசிபோல் துளைத்தன. "இன்றைக்கா சந்தைக் கடை?" "இதே தினம் தான், வருடா வருடம்" பதிலுக்குக் கடுகடுப்புடன், "ஏழு வருடங்களுக்கு முன்னர் நாங்கள் ஒரே கூட்டமாய் இருந்தது உனக்கு நினைவில்லையா?" பவானி மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. ஆனால் மற்றவனின் கண்டனத்தைப் புரிந்து கொண்ட மானக் சஞ்சலம் உற்றான். பவானி சுங்கானைப் போட்டுவிட்டுத் தனது முடிச்சை எடுத்தான். அவனது புல்லாங்குழல் முடிச்சின் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. பவானி பார்வையிலிருந்து மறையும் வரை மானக்கின் விழிகள் புல்லாங்குழலின் மீதே நிலைத்திருந்தன.

மறுநாள் காலை மானக் வயலில் நிற்கையில் பவானி திரும்பி வருவதைக் கண்டான். அவன் வேண்டுமென்றே மறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் பவானியிடம் பேசிச் சந்தைக்கடை பற்றி எதையும் அறிய விரும்பவில்லை. ஆனால், பவானி மறுபுறமாக வந்து எதிரில் அமர்ந்தான். அவன் முகம் சோகம் கப்பி இருண்டு இருந்தது.

"கலேரி இறந்து விட்டாள்" பவானி தாழ்ந்த குரலில் சொன்னான்.

"என்....ன?"

"உனது இரண்டாவது திருமணம் பற்றிக் கேள்வியுற்ற வேளை, தன் உடைகளை மண்ணெய்யில் நனைத்து அவற்றுக்குத் தீயிட்டுக் கொண்டாள்".

வலியால் ஊமையான மானக்கினால் தனது வாழ்க்கையே எரிந்து முடிந்து விட்டதை உணர்ந்து வெறித்துப் பார்க்க மட்டுமே முடிந்தது.

நாட்கள் நகர்ந்தன. மானக் வயல் வேலைகளைத் தொடர்ந்தான். தனது ஆகாரங்களைக் கொடுக்கப்பட்ட வேளையில் உண்டான். ஆயினும் அவன் நடைப்பிணமாகவே காட்சி அளித்தான்.

முகம் உணர்ச்சி அற்று இருந்தது. கண்களில் வெறுமை நிரம்பி வழிந்தது.
"நான் அவரின் மனைவி இல்லை", அவனது இரண்டாம் மனைவி புகார் செய்தாள். "நான் அவர் மணமுடிக்க நேர்ந்த யாரோ ஒருத்தி".

எனினும் அவள் வெகு விரைவில் கருவுற்றாள். மானக்கின் தாய்க்கும் புதிய மருமகளை வெகுவாகப் பிடித்துப் போயிற்று. அவனிடம் அவனது மனைவியின் நிலை பற்றிக் கூறினாள். ஆனால் அவனோ ஏதும் புரியாதது போல் விழித்தான். அவன் விழிகளில் இன்னமும் வெறுமையே நிரம்பி வழிந்தது.

அவனது தாய் அவளது மருமகளை அவள் கணவனின் மனநிலைக்கேற்ப சிலகாலம் அனுசரித்து போகுமாறு ஊக்குவித்தாள். குழந்தை பிறந்ததும் அவனை அவன் தந்தையின் மடியில் போட்டால் மானக் தன்னாலேயே மாறிவிடுவான் என்றாள்.

மானக்கின் மனைவிக்கு உரிய நேரத்தில் ஆண் குழந்தையும் பிறந்தது. அவனது தாய் பேருவகையுடன் பையனைக் குளிப்பாட்டி, நல்ல துணிமணிகளை அணிவித்து, மானக்கின் மாடியில் இட்டாள். மடியில் இருந்த பிஞ்சுக் குழந்தையை உற்றுப் பார்த்தான் மானக். வெகு நேரம் சலனமற்று விழித்தான். பின்னர் திடீரென அவனது வெற்று விழிகள் திகிலால் நிரம்பப்பெற்றன. மானக் அலற ஆரம்பித்தான்.

"அவனைக் கொண்டு போங்கள்", அவன் ஹிஸ்டீரியா பிடித்தவன் போலக் கிறீச்சிட்டான. "அவனைக் கொண்டு போங்கள், அவனில் மணக்கிறது மண்ணெய் ..."

முற்றும்.

ஆங்கில மூலக்கதை: அம்ரிதா பிரிதம்
தமிழில்: தமிழ்க்கிழவி

(2006ல் அகில இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற தமிழ்க்கிழவியின் சிறுகதை மொழிபெயர்ப்பு இதுவாகும். பார்வையிட்டமைக்கு நன்றி🙏🏾)

எழுதியவர் : தமிழில் தமிழ்க்கிழவி (20-Mar-19, 6:27 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 316

மேலே