மென்மையானவள் - தொடர்ச்சி 2

" யாருக்குமே பிடிச்சமாதிரியான வாழ்க்கை அமைவதில்லை.
ஏதாவது ஒரு குறை இருந்துக் கிட்டே தான் இருக்கும்.
அதற்காக கவலைப்பட்டுக் கொண்டே இருந்தோமானால் மற்ற சந்தோஷங்களையெல்லாம் அந்த கவலையே முழுங்கிவிடும். ",என்று மகேஷிற்கு ஆறுதல் கூறினாள் முத்து.

சிறிது நேரம் மௌனம் நிலவியது.
பின் முத்து அங்கிருந்து நகர்ந்தாள்.
மகேஷ் தன் வேலைகளை செய்யத் தொடங்கினான்.

" உண்மையிலேயே உழைப்பு மட்டுமே கவலை மறக்கச் செய்யும் சரியான வழி.
தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் கவலை உணர்வோ, தனிமை உணர்வோ நம்மை பற்றிக் கொள்வதில்லை.
கவலை வந்தாலும் மறைந்து போகும். ",என்று மகேஷ் தன் மனதால் உணர்ந்து கொண்டான்.

அன்று மறுநாள் வயலில் நடுவை. வழக்கம் போல பாப்பம்மா பாட்டி நாத்து நட்டு, நடுவையைத் தொடங்கி வைத்தாங்க.

நல்லபடியாக நடுவை முடிந்தது.
பத்து நாட்கள் கூட ஆகவில்லை.
நெல் வயல்களில் இறங்கி கோட் சூட் போட்ட பலர் அளந்து கொண்டு வந்தார்கள்.

" எதற்காக அளக்கிறார்கள்? ",என்று கேட்டார் முனுசாமி.

" அரசாங்கம் இந்த இடத்தில் ரோடு போட போகிறாங்க. அதான் அளக்கிறோம். ", என்றார் அந்த அரைகுறை நரை மண்டை ஆபீஸர்.

" என்னது? விவசாய நிலத்தில் ரோடு போடப் போறீங்களா? ",என்று பதறினார் சுப்பையா.

" அட ஆமாய்யா! சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தங்கு தடையில்லா போக்கு வரத்து நடைபெற இங்கு சாலை அமைக்கப்பட அரசாங்கம் போட்ட ஆர்டர். ",என்றார் பக்கத்தில் நின்ற அந்த ஏரியா கவுன்சிலர்.

" அரசாங்கம் போட்ட ஆர்டர் தானே! ஆண்டவன் போட்ட ஆர்டர் இல்லையே! ",என்றவாறு வந்தான் மகேஷ்.

" ஆண்டவனுக்கு அடுத்தபடியாக இருக்கிறது அரசாங்கம் தான். ",என்றார் பஞ்சாயத்து தலைவர்.

" விவசாய நிலத்தில் சாலை அமைத்து நீங்க சொகுசா போவீங்க. அந்த நிலத்தை நம்பி வாழ்பவர்களெல்லாம் புறங்கையை நாக்கிக் கிட்டுட்டா போவாங்க.
கார்ல வெள்ளையும் சுள்ளையுமா வருகிறவனுக்கு தான் அரசாங்கம் என்றால் எங்களுக்கு அப்படி ஒரு அரசாங்கமே தேவையில்லை. ",என்றான் மகேஷ் கோபமாக.

" தம்பி! ஏதோ கோபத்தில் பேசுறீங்க. அரசாங்கம் துணையில்லாமல் பாதுகாப்பாக வாழ முடியாது. ",என்றார் சப் கலெக்டர்.

" என்னது அரசாங்கமில்லாமல் வாழ முடியாதா?
பொன்னா விளைகிற பூமி எங்களுக்கு சாமி மாதிரி இருக்கு.
அது எங்களோட இருக்கிற வரைக்கும் எவன் தயவும் தேவையில்லை. ",என்றான் மகேஷ்.

" இப்போ நீங்க எங்களை அளப்பதற்கு அனுமதிக்காவிடில் நாங்கள் காவல்துறையைக் கொண்டு நடவடிக்கை எடுப்போம். ",என்றார் கலெக்டர்.

" உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்.
தமிழன் என்பதில் எவ்வளவு பெருமையும் கர்வமும் அடைகிறேனோ, அதே அளவுக்கு விவசாயி என்பதில் பெருமையும் கர்வமும் அடைகிறேன்.
விலங்குகளில் இருந்து திரிந்து நாம் மனிதர்கள் என்ற அங்கீகாரம் பெற முதல் காரணமாக அமைந்தது இந்த விவசாயம்.
என் உடலில் உயிர் உள்ளவரை எனது பொறுப்பில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு ஊசி முனை நிலத்தைக் கூட தர முடியாது. ",என்று மகேஷ் தன் விவசாய உரிமைக்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடத் துணிந்தான்.

அதற்குள் சேதி ஊர் முழுவதும் பரவி ஊர்மக்கள் அங்கு வரத் தொடங்கினார்கள்.
அதனால் அரசு அதிகாரிகள் அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்கள்.

மேலும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்தனர்.
அந்த வழக்கை தானே முன் நின்று நடத்துவதாக முத்துவின் அண்ணன் காளியப்பன் வழக்கறிஞர் முன் வந்தார்.

நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி சத்யநாராயணன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தொடக்கத்தில் பேசிய நீதிபதி, " மற்ற ஏரியாக்களில் இருப்பவர்களெல்லாம் அரசு ஆணையை மதித்து சாலை அமைக்க அனுமதிக்கும் போது நிலத்தை வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? ",என்று கேட்டார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய வழக்கறிஞர் காளியப்பன், " விவசாய நிலத்தை அளிக்க நாங்கள் மறுப்பு தெரிவிக்கக் காரணம் விவசாயத்தை எங்கள் உயிராக நேசிக்கிறோம்.
உலகிற்கு உணவிடுபவன் விவசாயி. அவன் உண்ண உணவின்றி இறப்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது இந்த நாட்டில்.
அந்த நிலை எங்களுக்கும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதற்காக எங்கள் உயிரையும் இழப்பதற்கு தயாராகவுள்ளோம்.
பணம் நிரந்தரமற்றது.
பணத்தால் விவசாயிகளின் வாழ்வை அழிக்க நினைக்கும் இந்த அரசாங்கமும் நிலையற்றது.
ஆனால், காலம் காலமாக எங்களுக்கு உணவிட்ட அன்னை பூமி மட்டுமே நிரந்தரமானது.
அதுவே எங்கள் வாழ்வாதாரம்.
எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டியே நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். ",என்றார்.

அதைக் கேட்ட நீதிபதி, " உங்களின் உணர்வு புரிகிறது. இது குறித்து அரசு தரப்பு தனது விளக்கத்தை நாளை அளிக்க வேண்டுமென உத்தரவிடுகிறேன். ",என்றார்.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த காளியப்பனை மகேஷ் பாராட்டி நன்றி தெரிவித்தான்.

மறுநாள் வழக்கு விசாரணைக்காக காத்திருந்தார்கள்.

மறுநாள் காலை விசாரணை தொடங்கியது.
அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வரதராஜன் வாதாட வந்திருந்தார்.

வழக்கு ஆரம்பமாக நீதிபதி அனுமதி அளித்தார்.

முதலாவதாக பேச எழுந்த வரதராஜன், " இந்த எட்டுவழிச் சாலையால் நிறைய பயனடையப் போகிறவர்கள் மக்கள் தான்.
இந்த சாலை அமைக்க முன் வந்த விவசாயிகள் பயனடையும் விதமாக அவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குகிறது.
அது மட்டுமல்ல, அரசாங்கம் ஏற்கனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் போன்ற பல நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறது. இந்த சாலை அமைக்கப்படுவதால் நாட்டில் வளர்ச்சிக்கு வித்திடக் கூடியது. ",என்று கூறினார்.

அப்போது குறுகிட்ட காளியப்பன், " உண்மையில் அரசு இலவச மின்சாரம் வழங்கியுள்ளது.
ஆனால், இந்த சாலை அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான கிணறுகள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. இன்னும் மூடப்பட உள்ளன. கிணறுகள் இல்லாமல் இலவசமின்சாரத்தைக் கொண்டு என்ன செய்வது?
அடுத்தது விவசாயக் கடன் வழங்கியதும் அரசுதான். அந்த கடனை கட்ட முடியாமல் பல விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமும் அதே அரசுதான். ",என்றார் காளியப்பன்.

(தொடரும்...)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Mar-19, 6:22 pm)
பார்வை : 145
மேலே