கலாம் நம்பிய இளைஞன் நீ---அறுசீர் விருத்தம்---
அறுசீர் விருத்தம் :
வீட்டினில் இருளை நீக்கும்
*****விளக்கென வெண்ணம் கொள்வாய்க்
காட்டினில் எரியும் தீயாய்
*****கடமையில் நிமிர்ந்தே நிற்பாய்ப்
பூட்டினில் நுழைத்தச் சாவி
*****புதுவிடம் காட்டு தற்போல்
நாட்டினில் உயர்வைக் காட்ட
*****நன்றென வருவாய் இன்றே...
பொன்னிலம் புதைந்து பூக்கும்
*****புதுவிதை முயற்சி செய்வாய்
வன்னிலம் நிகர்த்தப் பாதை
*****வருந்தடை உடைத்து வெல்வாய்த்
தன்னலம் மறந்து பாயும்
*****தண்டலை வளர்க்கும் ஊற்றாய்த்
தன்னிலை இழந்து வாழும்
*****தாயகம் வளர்த்து வாழ்வாய்...
சிந்திய வியர்வை எல்லாம்
*****திரண்டிடும் முகில்கள் ஏற்று
விந்திய மலையிற் கொட்ட
*****வியன்நதி கிடைக்கும் நம்மை
முந்திய நாடும் பார்த்துன்
*****முயற்சியைப் போற்ற வேண்டும்
இந்திய உணர்வைத் தாங்கும்
*****இடிந்திடாப் பெருந்தூண் நீயே...