அம்மா---பாடல்---
சொந்த மெட்டில்...
அன்னையின் நிழலில் வாழும் சின்னப் பையன், அவள் இறந்ததும் உடலுக்குத் தீவைத்து விட்டு நின்று எரிவதை வலியோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்நேரம் அந்தப் பையனின் மனம் மட்டும் பாடலோடு பயணித்து வந்து சேர்கிறது. இது தான் சூழல்...
பல்லவி :
ஆ... ஆ... ஆ... ஆஆ ஆஆ (2)
நான் நான் நான் பாடும் இராகம்
ஏன் ஏன் ஏன் நீயும் தூரம்... (2)
பக்கம் வந்தால் ஒனக்குள் அனலே
தள்ளி நின்றால் எனக்குள் அனலே... (2)
உன் உடல் இன்று கருகுதே
என் உயிர் நின்று உருகுதே... (2)
நான்...
சரணம் 1 :
பாலும் சோறும் எனக்கு ஏன்
உந்தன் பாசம் ஒன்றே எனக்குத் தேன்...
வாழும் வீடும் தனிமை தான்
உந்தன் வாசம் இன்றி நரகம் தான்...
கொடியின் வேரும் அறுந்து போனால்
மலரின் சிரிப்பும் வதங்கிச் சருகாய் உதிரும்...
ஒனக்கு வச்ச நெருப்பினாலே
துடிக்கும் இதயம் வெளக்குத் திரியாய்க் கருகும்...
ஒடம்பில் உசுரா நொழஞ்ச ஒன்ன
பிரிஞ்சு எப்படி நானும் வாழ்வேன்...
கரையில் தவிக்கும் கொளத்து மீனா
தெனமும் ஒத்தையில் துடிச்சுச் சாவேன்...
அன்புத் தூறல் போடும் மேகம் என்ன விட்டுப் போக
வெந்து சாகும் இந்தப் பூமி போல நானும் மாற
யார் தான் இனிமேல் வருவார்...
பாச நீரை ஊத்தி வளப்பார்... (யார்...)
நான்...
சரணம் 2 :
வானும் மண்ணும் இருட்டில் தான்
எந்தன் பாசத் தெய்வம் நெருப்பில் தான்...
சாமி கண்ணத் தெறக்காதோ?...
இப்பப் போன உசுர கொடுக்காதோ?...
நதியின் நீரை இழந்தப் பின்னால்
நகரும் படகும் கவுந்து தரையில் கெடக்கும்...
விடியும் போது எனது வாழ்க்கை
உனது நிழலை இழந்து வெயிலில் நடக்கும்...
தொப்புல் கொடியில் பிரிஞ்ச என்ன
உடுத்தும் சேலையில் முடிஞ்சு வச்சே...
புழுதிப் படிஞ்ச படத்தப் போல
அடிக்கும் காத்துல அலையப் போறேன்...
என்னைக் காத்த உந்தன் ஆவி நீங்கும் கோலம் பாத்து
நெஞ்சுக் கூட்டில் செல்லும் மூச்சுக் காத்து ஓய்வு கேட்க
யார் தான் இங்கே தடுப்பார்...
உந்தன் அன்பைத் தந்து அணைப்பார்... (யார்...)
நான்...