உன்பால் உறுமுயர்வை நீ சொன்னால் இளிவாமே - போலி நிலை, தருமதீபிகை 128

நேரிசை வெண்பா

உன்பால் உறுமுயர்வை ஓர்ந்துபிறர் பாராட்டின்
இன்பாம்,நீ சொன்னால் இளிவாமே! - பொன்புனைந்த
தன்முலையைத் தன்கையால் தான்வருடின் ஓர்மங்கைக்(கு)
உண்மலியின்(பு) உண்டோ உணர். 128

- போலி நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உன்னுடைய உயர் நலங்களை உலகத்தார் உணர்ந்து புகழ்ந்தால் இன்பம் ஆகும்; நீயே சொல்ல நேர்ந்தால், அழகிய மங்கை தன் கொங்கையைத் தானே வருடியதுபோல் நகைப்புக்கே இடமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், தற்புகழ்ச்சி தனி இகழ்ச்சியாம் என்கின்றது.

ஓர்தல் - பலமுறையும் கூர்மையாக ஆராய்ந்து உணர்தல்; கூர்ந்து ஓர்ந்து தேர்ந்தவர் புகழ்வதே ஆன்ற மதிப்பாம். பாராட்டல் - புகழ்ந்து கொண்டாடல்;

தன்னைக் குறித்துப் பிறர் பெருமையாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்பது மனிதனது இயல்பான உயர் விருப்பம். அம்மதிப்பின் மோகத்தில் மதியீனமாய் மோசம் போகின்றான். அங்ஙனம் போகாதபடி இது போதித்துள்ளது.

போதனை எளிது தெளிவுற உவமை வந்தது. பருவ நலம் கனிந்து தருணியாயுள்ள உரிமை யுணர மங்கை என்றது.

பொன் – அழகு, பொன்புனைந்த என்றது அந்த இனிய உறுப்பின் இயல்புணர்த்தி நின்றது. வருடுதல் - இனிது பொதிந்து தழுவுதல்.

மங்கை, முலை, வருடல் என்னும் மூன்றும் மனிதன், உயர்வு, சொல்லல்களுக்கு முறையே ஒப்பாம்.

உள் மலி இன்பு உண்டோ? என்றது இல்லை என்று உணர்த்தும் தன்மையது. மலிதல் - நிறைதல். பரிச விளைவு பரவச மாயது.

தன் கொங்கையை உரிய காதலன் வருடின் அம்மங்கைக்குப் பெரிதும் இன்பமாம்; அவனுக்கும் பேரின்பமாகும்.

ஒரு மனிதனது உயர்வை அறிவுடைய பிறர் கூறின் இரு பாலார்க்கும் இனிய உவகையாம்; அவ்வாறின்றித் தானே உரைத்தால், அது சுவைக் கேடாம்.

தன் பெருமையைத் தன் வாயால் சொல்வோன், தன் முலையைத் தன் கையால் வருடும் மடமங்கை போல் இன்ப நலன் இழந்து இளிக்கப்படுவான். உவமையிலுள்ள விநய நயங்களை நுணுகி உணர்ந்து பொருள் நிலையை ஓர்ந்து கொள்ள வேண்டும்.

இன்னிசை வெண்பா

கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென்(று) எள்ளப் படும். 340 பேதைமை, நாலடியார்

நேரிசை வெண்பா

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம். 19 நீதிநெறி விளக்கம்

இவை ஈண்டு எண்ணத் தக்கன.

உயர்ந்த குணசீலனாய் அமர்ந்துள்ளவனை உலகம் விழைந்து புகழும்; தன்னைத் தானே வியந்து கொள்பவனை இகழ்ந்து தள்ளும் என்றும், தன் பெருமை பேசலாகாது என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Mar-19, 8:16 am)
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே