மற்றவர்கள் உள்ளம் துயரமுறச் சொல்வரெனின் கொலைஞரே - கொடுஞ்சொல், தருமதீபிகை 155
நேரிசை வெண்பா
வில்லாலும் வாளாலும் வெய்யவடி வேலாலும்
கொல்லார் எனினும் கொலைஞரே - சொல்லாலே
மற்றவர்கள் உள்ளம் மறுகித் துயரமுற
எற்றேனும் சொல்வர் எனின். 155
- கொடுஞ்சொல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
வில், வாள், வேல் முதலிய கொலைக் கருவிகளால் கொல்லாதவராயினும், பிறர் உள்ளம் துடிக்கக் கொடிய சொற்களைச் சொல்லுவரேல் அவர் பொல்லாத கொலைஞரே என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் கொடுஞ்சொல் கொலை ஒக்கும் என்கின்றது.
மறுகுதல் - நிலைகுலைந்து தவித்தல். எற்றேனும் - யாதாயினும். சிற்றளவு சொல்லினும் கொடிய குற்றமாம் என்க. சுடு சொல் படுதுயர் விளைக்கும்; அவ் வடுவுரையை யாதும் வழங்காதே என்பதாம்.
கொலை என்பது உயிரை உடலிலிருந்து நீக்கிவிடுவது. இது, பாவங்களுள் தலைமையானது. கொலை செய்பவர் கொலைஞர் என நின்றார்.
உடல் துடிக்க உயிர் பதைக்க வதைப்பது கொலையாம்; கொடுஞ்சொல்லும் உள்ளம் பதைத்து உயிர் துடிக்கச் செய்தலால் அதுவும் கொலை என நின்றது.
உடலைவிட்டு உயிர் பிரிந்து போதலால் கொலைத் துயரை உயிர் உடனே மறந்து விடுகின்றது. புலைச்சொல் அங்ஙனமின்றி உடல் நீங்கும் அளவும் உளத்தில் நிலையாக நிலைத்து உயிரை வதைத்து வருதலால் அக்கொலையினும் இப்புலையின் கொடுமை அறியலாகும்.
வாள் வேல் கொண்டு வெட்டிக் குத்திக் கொல்வது மட்டும் கொலையன்று; வாய்கொண்டு கொடுஞ்சொற் சொல்வதும் கொடிய கொலையாகும்.
அது, உடற்கொலை; இது, உயிர்க் கொலை. சக்திரவதை அது; சித்திரவதை இது என நிலைமையை உய்த்துணர்ந்து கொள்க. விற்கொலை முதலியவற்றினும் சொற்கொலை தீயதாம்.
பொல்லாத கொலைப் பழியைச் சொல்லால் விளைக்காதே; பிறர் உள்ளம் நோகும்படி யாதும் பேசாதே என்கிறார் கவிராஜ பண்டிதர்.