காற்றோடு சேர்ந்த கடுநெருப்பினுங் கொடிது கோளன் சொல் - குறளை, தருமதீபிகை 145

நேரிசை வெண்பா

காற்றோடு சேர்ந்த கடுநெருப்பி னுங்கொடிதாய்
வீற்றோடு வெய்து விரைந்துமே – மாற்றான
கோளன்சொல் மூண்டு குடிகெடுத்துப் பல்லுயிர்கள்
மாளப் புரியுமே மற்று. 145

- குறளை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கோளனுடைய மாறுபட்ட சொல் காற்றோடு சேர்ந்த நெருப்பினும் கொடிதாய் எங்கும் விரைந்து பரவி, மற்றவரின் குடி கெடுத்துப் பல உயிர்கள் இறந்து படும்படி வெந்துயர் விளைவிக்கும் எனப்பட்டது.

கடுநெருப்பு என்றது. அதன் அடுநிலை கருதி. வீற்றோடு விரைதல், யாதும் எதிரே தடுத்து ஆற்ற முடியாதபடி பாய்தல். வீறு – வலிமை, மாறு - பகை, தீமை.

கோள் கடுமையாய்ப் பரவி அடுதுயர் புரியும் கொடுமை நோக்கி கடுங்காற்றுடன் கலந்த சுடுதீயைக் கோளன் வாய்ச்சொல்லுக்கு ஒப்பு உரைத்தது,

மூண்ட தீயால் பல உயிர்கள் மாள்வது போல், மூட்டிய கோளால் குடிகள் பல அழிந்து போம் என்பதை குடிகெடுத்துப் பல் உயிர்கள் மாளப் புரியுமே! என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கோளனுடைய ஒரு சொல்லால் பலகுடிகள் கெடுமாதலால் அது நெருப்பினும் கொடிது என நேர்ந்தது.

பற்றிய தீயை நீரால் அவித்து விடலாம்; கோளால் விளைந்த குடிகேட்டை மீளப் பெறுதல் மிகவும் அரிதாம். கோளன் வாய்ச்சொல் ஊழித் தீ என உயிர்க்கேடு புரியும்; அத்தீயனை எவ்வகையினும் அணுகாதே என்பதாம். கோளர் தீயினும் கொடியர் என்பது குறிப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-19, 2:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே