வீழ்வேனென்று நினைத்தாயோ
எரிகுழம்பு எச்சமென,
எங்கள் நிலம் பழுத்திருக்கும்,
வரிக்குதிரையின் மிச்சமென,
வாய் பிளந்தே நசிந்திருக்கும்...
தொழிற்சாலை புகைமூட்டத்தில்,
தொய்ந்துபோன மழை கூட்டத்தில்,
வைரங்கள் கொட்டுமென,
வானங்கள் பார்த்திருப்போம் - கடன்,
மூத்திரங்கள் முத்தமிட்டே,
கடைவயிற்றை கருக்கியிருப்போம்...
புல்லுக்கே வக்கில்லை,
புலிகளா வளர்த்திருப்போம்,
தற்கொலை பழகுமென்றே,
ஆடுமாடு தவிர்த்திருப்போம்...
பன்னாட்டு கோமணத்திற்காய்,
பல்லிளிக்கும் கூட்டத்தில்,
உள்நாட்டு உரங்களெல்லாம்,
உதவாக்கரை ஆனதன்றோ!!
உயிரில்லா நிலமெல்லாம் - கட்டிட
உதவி கேட்டு போனதன்றோ!!
ஆட்காட்டி விரல் நகத்தில்,
ஆணிகளை அடித்துக்கொண்டோம்,
ஆட்கூட்டி அரசியல் களத்தில்,
அம்மணமாய் வெடித்து கொண்டோம்..
விழி கட்டி விட்டது போல்,
விழிப்பற்று விட்டோமே ! - நகர,
வீதி நோக்கி பெருகூட்டம், - செம்மை,,
வி(தை)டைகேட்டு நடை போட்டோமே! - எங்கள்,
பாதம் கிழிந்து பரந்த உதிரம்,
பாரெங்கும் பறை செய்யும்...
"நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ!"