சித்திரைத் தாயே வருக

சித்திரைத் தாயே வருக
********************************************

சித்திரைத் தாயே சித்திரைத் தாயே
தோத்திரம் பாடியே உனையிங்கு அழைத்தோம்
இத்தரை மக்கள் வாழ்வு வளம்பெற
வித்திடு தாயே வேளாண்மை தொழிலுக்கு !

பூந்திரள் கொண்டுனை போற்றியே தொழுதோம்
மாத்திரை உண்ணும் நிலையது நீங்க
கோத்திரம் பலவுளும் சாத்திரம் ஒன்றாக்க
சித்திரைத் தாயே ஓடோடி வருக !

அலையாய் வருக அவனியது மகிழ
கலையாய் வருக அறிவு மேலோங்க !
தொலையாத துன்பங்கள் அகற்றி ஒழித்திட
மலைமகள் உருவில் சீராய் வருக !

வேனிலும் , வெயிலும் , வாடையும் மழையும்
நானிலம் தன்னை நடுக்கிடும் குளிரும்
வானியல் மாற்றமும் வருத்திடாது எங்களை
மானிட தெய்வமாய் வந்துநீ காக்க !

அனைத்து உலகும் அத்தனை உயிர்களும்
எனக்கன் பாக இன்முகம் காட்டிட
மனதில் மகிழ்ச்சி எக்கணமும் தொடர்ந்திட
எனக்கன்றி அனைவர்க்கும் இனிதே அருளுக !

எத்திறம் இன்றியே மந்திரப் பொய்களொடு
தந்திரம் காட்டும் இந்நாடாளும் போரினில்
சித்திரைத் தாயேஎம் நித்திரை களைந்து
முத்திரை பதிக்க சீராக வழிகாட்டு !

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Apr-19, 9:39 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 328

மேலே