மதம் இல்லாத மனம்

ஒன்றாய் கூடி உழுது களைத்து அன்பு
தென்னை மரத்தின் மடியில் அமர்ந்து
பொன்னாய் விளைந்த சோறு சமைத்து
நண்பா உண்ணோம் இதயம் கரைந்து

ஒருங்கே இருந்த உலகம் தன்னில் ஓர்
மின்னல் போல இறங்கி வந்து அழகாய்
மயக்கிப் பேசி விற்றான் இந்த மருந்தை
உண்டால் தீரும் கவலை என்றான்

பிணி ஏதும் இல்லா மனிதரும் பசி
கூட இல்லா நிலையில் ருசிக்காமல்
வாங்கி தின்றார் அட இதில் என்ன போயிற்று
நீயும் கொஞ்சம் எடுத்துக்கொள் என்றார்

வித விதமாய் மருந்துகள் பார்த்து வியந்து
நானும் வகை வகையாய் ருசித்தேன்
நெடுநெடுவென நாட்கள் கழிந்தது எங்கும்
பக்க விளைவுகள் வெடித்தெழுந்தது

அறம் கொண்ட மனிதரும் வெறிகொண்டெழுந்து
பிறர் மீது பாய்ந்து அடித்து விரட்ட இது
மருந்தேதும் இல்லை என்று அறிந்தேன் சாதி
மதம் தான் என்று நன்கு உணர்ந்தேன்

அப்பனும் பாட்டானும் எவ்வழி வந்தாலும்
என் அன்னையும் சிலரைக் கும்பிடச் சொன்னாலும்
நீயும் நானும் ஓர் இனம் என்பதை
மறக்கச் செய்த கடவுளும் வேண்டாம்

எழுதியவர் : ரா.சா (16-Apr-19, 11:25 am)
சேர்த்தது : ராசா
பார்வை : 684

மேலே