சிறுமொழியாடும் வறுமொழியாளர் வரின் மறுமொழி கூறாது அகல்க - குறும்பு, தருமதீபிகை 169

நேரிசை வெண்பா

சிறுமொழி யாடிச் சிலுகு புரியும்
வறுமொழி யாளர் வரினோ - மறுமொழி
கூறா(து) அகல்க; குறுகின் பழிதுயர்
வேறாய் விளையும் விரைந்து. 169

- குறும்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறுமொழிகளைப் பேசிச் சிலுகு புரிகின்ற வறுமொழியாளரைக் காணின் மறுமொழி கூறாமல் உடனே அகலுக; அகலாது நிற்பின் பழியும் துயரும் விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், ’குறும்புக்காரரைக் கூடாதே’ என்கின்றது.

கேலி, குறும்பு, கோள் முதலிய ஈன வார்த்தைகளை சிறுமொழி என்றது. தம்மை மருவினரைச் சிறுமைப் படுத்தி வருதலால் சிறுமொழி என நேர்ந்தன. சிலுகு - சேட்டை, கலகம்.

வீண் வார்த்தைகளையே விழைந்து பேசி யாண்டும் துழைந்து திரியும் வீணர்களை வறுமொழியாளர் என்றது. பொருள் அற்ற புன்சொல் வறுமொழி என வந்தது.

கெட்ட வார்த்தைகளையே பேசித் திரிகின்ற பட்டிகளைக் கிட்ட நெருங்கவிடின் தொற்று வியாதிகள் போல் ஒட்டிக் கெடுத்து விடுவர்; அக்கெடு காலிகளின் வாய்க்கு எட்டாமல் ஒதுங்கிவிடுங்கள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நீ மறுமொழி கூறின் அச்சிறுமொழி உன்னைச் சிறுமைப் படுத்திவிடும். வறுமொழியாளர் வாய் திறந்தால் இழி மொழிகளே வெளிவரும்; அவை உன் உள்ளத்தைக் கெடுத்து எவ்வவழியும் எள்ளற்பாடே விளைக்கும்.
.
’பழிதுயர் விளையும்’ என்றது கொடியாரது கொடுமொழியால் மனம் கெட்டு, எல்லாத் தீமைகளும் எளிதே புகுந்து அல்லல் பல பயந்து அழிவு தரும்; அதனை எதிரறிந்து இனிது தெளிக என விளைவு உணர்த்தி விளக்கியும் இருக்கிறார் கவிராஜ பண்டிதர். கேலிக்குறும்புகள் செய்யும் காலிகளை அணுகாதே என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-19, 7:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே