தங்கம் தரும் மயக்கம்

தங்கத்தின் சக்தி தான் எப்படிப்பட்ட சக்தி! தங்கம் என்றவுடன் அனைவரும் மகிழ்ந்து புன்னகை பூத்து மகிழ்வர்.

உலகம் முழுவதும் நாடு, மதம், இனம், பால், மொழி, அந்தஸ்து ஆகிய எந்த வித பேதமும் இன்றி அனைவராலும் போற்றப்படும் ஒரு வசீகர சக்தி தங்கம் தான்!

நாம் தங்கத்தைப் பிடித்திருக்கிறோமா அல்லது தங்கம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா என்பது தான் தெரியவில்லை என்று பீட்டர் எல்பெர்ன்ஸ்டீன் தனது நூலான ‘தி பவர் ஆஃப் கோல்ட்’-இல் கூறுகிறார்.


தாலிக்கு கொஞ்சமேனும் தங்கம் இல்லா வாழ்க்கை பாரதப் பெண்களைப் பொறுத்த மட்டில் வாழ்க்கையே இல்லை.

உலகில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா? பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதையும் மூடினால் முழங்கால் அளவுக்குத் தங்கம் இருக்கிறதாம்!

இதற்கு மதிப்பு எல்லா நாட்டிலும் இருந்தாலும் நமது நாட்டில் இதற்கு மவுசு ஒரு படி கூடத்தான்!

இந்தியாவில் எல்லா இல்லங்களிலும் இருக்கும் தங்கம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது, அவ்வளவு தங்கம்! என்றாலும் கூட ஒரு உத்தேச மதிப்பீட்டின் படி சுமார் மூன்று லட்சம் டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறதாம்..

அழகுக்கு அழகு செய்கிறது;ஒரு கம்பீரத்தையும் கௌரவத்தையும் தருகிறது. பணம் இருக்கிறது என்கிற அந்தஸ்தைக் காட்டுகிறது; ஆபத்துக் காலத்தில் கை கொடுத்து உதவுகிறது; எப்போது வாங்கினாலும் நாள் செல்லச் செல்ல மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.

ஆகவே தான் தங்கம் சிறந்த முதலீடு என்று கருதப்படுகிறது.

பிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர், வெள்ளியில் முதலீடு, ஆங்காங்கே நிலம் அல்லது வீடு வாங்கல் ஆகிய எந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் தங்கத்தில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை என்பது உண்மை தான்!

உலகெங்கும் இதுவரை 1,65,446 டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒலிம்பிக் அளவிலான இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இதில் ஐம்பது சதவிகிதம் சென்ற 50 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தங்கம் பூமியில் புதைந்து கிடக்கிறது.


பல விசித்திர குணாதிசயங்களைக் கொண்டுள்ள ஒரு உலோகம் என்பதால் இதை அறிவியல் அறிஞர்கள் கூட சற்று மயக்கத்துடன் தான் பார்க்கிறார்கள்.

இதன் அடர்த்தி எண் மிக அதிகம்.இது மிக கனமான உலோகமும் கூட! தண்ணீரை விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட! ஒரு கிராம் தங்கத்தை ஒரு சதுர மீட்டர் தங்கத் தகடாக மாற்றலாம். அந்தத் தகடில் ஒளி ஊடுருவிப் பாய்ந்து தகதகத்து நம்மை மயக்கும்; மகிழ்விக்கும்!

31 கிராம் தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றினால் அது 100 கிலோமீட்டர் தூரம் இருக்கும்!

தங்கத்தின் மீது எந்தக் கெமிக்கலும் தன் “வேலையைக்” காண்பிக்க முடியாது. மிகச் சில இரசாயனங்களே தங்கத்தைத் “தாக்க” முடியும்..

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட அதன் பளபளப்புப் போகாது.

அழகான சிவந்த மங்கையரின் மார்பிலும் தலையிலும் இடையிலும் காலிலும் வெவ்வேறு ஆபரணமாக மாறி அது தவழும் போது அதன் மதிப்பும் தனி தான்; அதை அணியும் அழகியின் மதிப்பும் தனி தான்!

ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் மாறுபடலாம்; அரசியல் மாற்றங்களால் செல்லாமல் போய் விடலாம். அரசாங்கம் நோட்டுக்களை ‘டீமானிடைசேஷன்” செய்து மதிப்பிழக்கச் செய்யலாம்.

நிலம், வீடு போன்றவை இயற்கைச் சீற்றத்தால் அழிந்து படலாம்; மதிப்புக் குறையலாம்.


ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர்கள் நூற்றுக் கணக்கான காரணங்களால் மதிப்பை இழந்து முதலீட்டு விலையை விடக் குறையலாம், ஏன் ஜீரோ என்ற அளவிற்கு தாழ்ந்து போகலாம்.

ஆனால் தங்கம் ஒன்று மட்டுமே தன்னம்பிக்கை தரும் ஒரு பாதுகாப்பான இன்வெஸ்ட்மெண்டாக காலம் காலமாக இருந்து வருகிறது. மதிப்பும் குறையாது; மானத்தையும் இழக்க விடாது!

வீட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் தங்கம் உதவுவதில்லை; நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவிக்கு ஓடி வருவது தங்கம் தான்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் ஒரு பிரச்சினை எழுந்த போது அந்த நாட்டின் பிரதமர் மஹாத்திர் முஹம்மது அந்த நாட்டு மக்களிடம் தங்களிடம் உள்ள தங்கத்தை அரசாங்கத்திடம் தற்காலிகமாக முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தங்கத்தை முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கம் அரசின் பொக்கிஷத்தை நிரப்பிய போது நிலைமை சீர் திருந்தியது. உடனே மலேசியா அரசாங்கம் தங்கத்தை மக்களிடம் திருப்பித் தந்தது.

பெரு நாட்டில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதில் சுரங்க வேலை செய்யச் செல்வோர் கிளம்பும் போது வீட்டாரிடம், “அல் லேபர் மில் வாய் நோ சே சி வொல்வேர்” என்று சொல்வார்களாம். அதாவது, “வேலை செய்யப் போகிறேன். திரும்பி வருவேனோ வரமாட்டேனோ தெரியாது” என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லி விட்டு சுரங்க வேலைக்குச் சென்றால் ஒரு வேளை இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏராளமான நன்மை வந்து சேருமாம்.

தங்கத்திற்காக உயிரை விடக் கூடத் தயார் என்பதையே இது காட்டுகிறது.

பெரு நாட்டில் மட்டுமல்ல; நமது நாட்டிலும் கூட எதை இழந்தாலும் இழக்கத் தயார்; ஆனால் தங்கத்தை இழக்கத் தயாரில்லை” என்பது தான் நிலை.

அப்படிப்பட்ட அருமையான மஞ்சள் உலோகத்தை ‘இன்வெஸ்ட்மெண்ட் டாப்’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

மங்கையர் தங்கம் மங்காத செல்வம்!

தங்கம் தரும் மயக்கமடி – தங்கமே தங்கம்!

எங்கும் எதிலும் இல்லையடி – தங்கமே தங்கம்!!


***
ஏப்ரல் 2019 கோகுலம் கதிர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை


ச.நாகராஜன்

எழுதியவர் : (17-Apr-19, 7:45 pm)
பார்வை : 8

மேலே