சுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த எளிய வழிகள்

நாம் வாழும் இடத்தை மாசற்ற நிலையில் வைத்துக் கொள்ள எளிய வழிகள் ஏராளம் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதன் மூலமாக காற்று, நீர், வசிக்குமிடம் ஆகியவை மாசு நீங்கியதாக அமைந்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும்.

எளிய வழிகளைப் பார்ப்போமா?

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கூடியமட்டில் தவிர்ப்போம். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பைகளை மட்டுமே பயன்படுத்துவோம். மளிகை சாமான்கள் வாங்க கடைக்குச் செல்லும் போது நமது துணிப்பைகளைக் கொண்டு செல்வோம்.

அச்சடிப்பதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவிற்குக் குறைப்போம். பேப்பர் பயன்பாட்டைக் கூடுமானமட்டில் தவிர்ப்போம். எழுத வேண்டிய தருணங்களில் பேப்பரின் இரு புறமும் எழுதுவோம்.

நீர், ஜூஸ் போன்றவற்றிற்கான பாட்டில்களைப் பயன்படுத்தும் போது மறுசுழற்சிக்குள்ளாக்கக் கூடிய பாட்டில்களையே பயன்படுத்துவோம்.

கூடுமானமட்டில் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துவோம்; மின் சக்தியைச் சேமிப்போம்; நமது செலவையும் குறைப்போம்.

நீரைச் சுத்தமாக இருக்கும்படி மூடி வைத்துப் பாதுகாப்போம். நீரைத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம். திறந்த குழாயில் வரும் நீரைப் பயன்படுத்தி நீரை வீணாக்காது பக்கெட்டுகளில் நீரைப் பிடித்து வைத்து தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.அவ்வப்பொழுது குழாய்களைப் பராமரித்து நீர் ஒழுகாமல் இருக்கும்படியும் நீர் வீணாகாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வோம்.

குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வோம் அல்லது சைக்கிளில் செல்வோம்.அவசியம் ஏற்படும் போது மட்டும் கார்களில் பலருடனும் இணைந்து செல்லும் ஏற்பாட்டைச் செய்து கொண்டு செல்வோம்.

தனி நபருக்கு மட்டும் என்று கார் எடுத்து ஓட்டும் நிலையைத் தவிர்ப்போம்.

வாகனப் பயன்பாட்டில் வெளிவரும் புகை நாட்டையே மாசு படுத்தும் என்பதால் அதி நவீன கார் எஞ்ஜின்களை மட்டுமே பயன்படுத்துவோம்.

சிறு அளவில் என்றாலும் எங்கெல்லாம் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சோலார் எனர்ஜியைப் பயன்படுத்தி மற்றவருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வோம்.

இது பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து அனைவருக்கும் ஊட்டுவதை தேசீயக் கடமையாக எண்ணிச் செயலாற்றுவோம்.

நாம் செய்யக்கூடிய அனைத்தையும் திட்டமிட்டுச் செய்து நமது பகுதியை சுற்றுப்புறச் சூழல் மேம்பட்ட பகுதியாக மாற்றுவோம்.

வாழிய பாரதம்!
------------------------------------------------------------------------------------------------------------

*ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 10-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை


ச.நாகராஜன்

எழுதியவர் : (17-Apr-19, 8:02 pm)
பார்வை : 84

மேலே