பெண்ணாகிய நான்
கொஞ்சம் உடல் பருமனா இருந்தால்,
முரட்டு சாப்பாடு!
ஒல்லியாக இருந்தால்,
உடம்பில் ஏதோ பிரச்சனை!
நன்றாக உடை அணிந்தால்,
வெட்டி பந்தா!
மிக எளிமையாக இருந்தால்,
ஏழைபோல் நடிக்கிறாள்!
அமைதி காத்தால்,
அனுதாபம் தேடுகிறாள்!
கொஞ்சம் பேசினால்,
அரக்கி அவள்!
கொடுக்க மறுத்தால்,
கஞ்சம் அவள்!
அள்ளிக் கொடுத்தால்,
ஊதாரி அவள்!
பகை வேண்டாம் என ஒதுங்கி சென்றால்,
பாவம் அவள் பயந்துவிட்டாள்!
சரியென சண்டையிட்டால்,
மனுஷியா இவள் மிருகம்!
கால்மேல் காலிட்டு அமர்ந்தால்,
பண்பு கெட்டவள்!
எவரைக் கண்டாலும் எழுந்து நின்றால்,
நல்லாவே நடிக்கிறாள் இவள்!
எல்லாம் சொல்லி வெளிப்படையாக இருந்தால்,
சரியான உளருவாய் அவள்!
எதையும் சொல்லாமல் மௌனம் காத்தால்,
ஊரைக் கெடுக்கும் ஊமை அவள்!
வாழ்வில் கொஞ்சம் வீழ்ச்சி கண்டால்,
அவள் செய்த பாவம் தேவைதான் இது!
முட்டி மோதி தட்டி எழுந்தால்,
இவளுக்கு வந்த வாழ்வைப் பார்!
ஆண் நண்பர்களே இல்லை என்றால்,
பொய் சொல்லி ஏதோ செய்கிறாள்!
நண்பர் சிலருடன் வெளியில் சென்றால்,
வெட்கம் கெட்டவள் சுற்றித் திரிகிறாள்!
அடுத்தவர் புகழ அமைதி காத்தால்,
பெருமை பிடித்தவள்!
புகழ்வது பிடிக்கவில்லை வேண்டாம் என்றால்,
சரியான கர்வம் கொண்டவள்!
அப்படி செய்தால்,
அவளா இவள்!
இப்படி செய்தால்,
இவ்வளவுதான் இவள்!
எனை ஏய்க்கும் கூட்டம்
எல்லாம் பேசட்டும்,
நான் கேட்கும் வரை மட்டும்!
நன்றாய் செய்யட்டும்,
நான் தாங்கும் வரை மட்டும்!
ஒரு நாள் நான் எழுவேன்
நான் நானாக, என் எனக்காக
சுயத்தை விட்டு
ஒருபோதும் வாழேன்!
அப்போது இக்கூட்டம்
விலகி வழி விடும்
விரும்பித் தேடி வரும்!
அதுவரை,
காதை மூடிக்கொள் என் மனமே
பொறுமை கொள் என் மனிதமே!!!