கிழிந்த பந்து

பிரகாசமான காலைப் பொழுது,
அமைதியாய் இருந்த குறுக்குச் சந்து,
முப்பதடி சாலையின் இருபுறமும்
அடுக்கு மாடி குடியிருப்புகள்.....

தெருவிலிருந்து அண்ணாந்து பார்த்தால்,
ஒவ்வொரு ஜன்னல் அல்லது பால்கனியின் வழியே
துளிர்விட்டு தொங்கிக் கொண்டிருக்கும்
"மனி பிளான்டுகளும் ", பறிக்காத ரோஜாக்களும்...

தெருமுனை அடுக்ககத்தின் கேட்டருகில்
சலனமின்றி சாய்ந்து கிடக்கிறது
ஒரு கிழிந்த டென்னிஸ் பந்து...

எங்கிருந்து வந்திருக்கும்?
யார் வாங்கியது ?
யார் விளையாடியது ?
யார் விசிறியடித்து கிழித்தது ?
கிழிசல் கண்ணுக்கு தெரியாமலிருந்தும்,
காற்றுப்போன பந்தானதால், வீசி எறிந்திருப்பாரோ?
ஒன்றும் தெரியவில்லை !

பந்து இந்த பூமி வந்த பயனையடைந்து
பாதையோரத்தில் மூர்ச்சையாயிருக்குமோ?
இல்லை, இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்க
மூச்சை தக்கவைத்து, தார்ரோட்டில் தர்ணா செய்கிறதோ?
புரியவில்லை....

நேரம் கரைய கரைய...
லேசா வீசும் காற்று,
சற்று பலமாய் வீசுகிறது,
காற்று பட்டு காற்றற்ற பந்து
இடமும் வலமும் அசைகிறது.

அடித்த காற்று,
அடங்கிப்போகவே,
பந்தின் ஆட்டமும் நின்றுபோனது.

திரும்பவும் அரங்கேறியது சுவையற்ற காட்சிகள்,
அந்த தெருவே வரைபடமாய்
உறைந்திருந்தது.

கீச்சுக் குருவியொன்று,
குட்சிக் கால்கொண்டு
பந்துமேல் வந்தமர்ந்தது....

பஞ்சு பஞ்சாய் பந்து மேல் ஒட்டியிருக்கும்,
தோலை கொத்திக் கொத்தி நூல் பிரித்தது...
கொஞ்சம் வேதனை தந்தாலும்,
இன்னும் இந்த உலகத்திற்கு செய்ய - ஏதோ
மிச்சமிருப்பது புரிந்த பந்து,
இன்பவலியை ரசிக்க துணிந்தது...

ஒரு நூற்பாலை ஓடுவதுபோல்
சத்தமாய் கேட்க,
சிதறி நகர்ந்தோடியது சாலையிலுள்ள
சிறு குறு ஜீவராசிகள்....

கூட்டிற்கு தேவையான
வஸ்தரத்தை எடுத்த பின்,
நன்றி கூட சொல்லாமல்,
கூட்டிற்கு பரந்தோடியது கீச்சுக் குருவி.

மேல்புற மேனி கலைந்திருந்த பந்து,
அடுத்தென்னவோவென்று சிந்திக்க முனையும் முன்,
கிரீச்சென்று மிதிவண்டி பந்தை பதம் பார்த்தது.

நியூஸ்பேப்பர் பையன் பந்தை
கவனிக்காமல் வண்டியை மேலேற்றி,
சறுக்கி விழுந்தான்..!

மிதிவண்டியும், நியூஸ்பேப்பர்களும் தெருவுக்கே
செய்திகள் இலவசமாக வாசித்துக் காட்டியது...

குடியிருப்பு வாசிகள்,
சத்தத்திற்கு செவி சாய்த்து,
எட்டி பார்த்து,
பின்பு கூட்டிற்குள் சென்றமர்ந்தனர்...

கோவம் கொப்பளித்த பையன்,
ஒதுங்கி ஒழிந்திருந்த பந்தைத் தேடி,
கையிலெடுத்து எதிர் சுவரில்
விட்டெறிந்தான்...

படாரென்று சத்தமெழுப்பி,
அதே தெருவில் வேறிடத்திற்கு
இடம்பெயர்ந்தது ...

பந்து செய்த தவறென்ன என்று
யோசித்து மௌனமானது...

புது இடமோ சாலையின் மையப்புள்ளியில்,
இடமும் வலமும் தெருவாசிகள்
நடந்தவண்ணம் உள்ளனர்.

சத்தம் கொடுக்காத ஆட்டோ ஒன்று,
பந்தில் ஏறி இறங்கியது...

சுவரில் அறைந்தால் ஓட்டை
பெரிதாகிப்போன பந்தின் முகம்,
இப்போது சப்பையாய் போயிருந்தது...

முயன்று முயன்று,
தான் இழந்த முகவரி-யை
மூச்சுப் பயிற்சியின் மூலம்
திரும்ப பெற்றது.

மாலைப் பொழுதில்,
பள்ளிச் சிறுவன்,
கிடந்த பந்தைப் பார்த்து, வியந்து போய்,
கையிலெடுத்து, தடவிக்கொடுத்து,
வீட்டிற்கு அழைத்துச் சென்றான்...

தண்ணீரில் குளிப்பாட்டி,
பால்கனியில் உலர்த்தவிட்டு,
ஹேர் ட்ரையர் மூலம் துவட்டிவிட்டு..
தன் படுக்கையறையில் பத்திரப் படுத்தினான்.

இப்படியே கழிந்தது பல நாட்கள்..

கோடை விடுமுறை வரவே,
சுற்றுலா செல்ல வெளிநாடு சென்றான்
பள்ளிச் சிறுவன்...

பந்தோ அதே தெருவில்
விலாசமற்றுப் போனது...

பழைய நினைவுகளால்
காலத்தை கழித்து வந்தது.

சித்திரை மாதம்,
தீடீர் கோடை மழை
சோவென பேய்ந்து,
லேசான நீர் தேக்கம்...

பந்து மிதந்து மிதந்து,
இரண்டு தெரு தள்ளிச் சென்று சேர்ந்தது.

நீர் வற்றி,
கோடை உஷ்ணம் கொதிப்பேற,
தெரு நாய்களும் மசைப்பிடித்து
அலைய ஆரம்பித்தது..

இப்படி அலையும் ஒரு நாயிடம்,
இந்த பந்து மாட்டிக்கொள்ள,
பந்தை சல்லை சல்லையாய் பிரித்து
மேய்ந்தது...

அகோரமாய் மாறிப்போன பந்து,
வாழ்க்கையின் சகல அவலங்கையும்
பார்த்துவிட்டதாய் உணர்ந்தது.

கண்ணின் ஓரம் சிறு துளி
துளிர்த்து, அது கொஞ்சம் தடிமனாகி
நீராய் வடிகிறது..

பூமிக்கு வந்த பயனை
அடைந்தாய் பந்திருக்கு நினைக்க தோன்றியது...
சந்தோஷமும், துக்கமும் இல்லாத
சம நிலையை தொட்டு விட்டதாய்
ஒரு அமைதிக்கடலில் மூழ்குவதுபோல்
மூழ்கத் துடங்கியது..

இரவு நேரம்,
இந்த அமைதியின் வீரியும்
மென் மேலும் கூடுவதாய் அறியக் கண்டது...

சட்டென்று யாரோ,
பந்தை கையிலெடுக்கின்றார்..
மேல்புறமும் அடிப்புறமும் தட்டிவிட்டு,
தாடியை விளக்கி, வாய் கொண்டு ஊதி விடுகிறார்...

லேசாக திருநீர் இட்டு,
எங்கோ எடுத்து வைக்க நினைக்கிறார்..
லேசாக கண் விளக்கி பார்க்கும் பந்து,
ஆயிரம் சூரியன் உதிக்கும் பிரகாசமாய் ஒளிர்ந்தது...

அய்யா பெரியவரே,
உற்சவ மூர்த்தி சமஸ்தானம்,
அடங்கமறுத்து ஆடிய படி இருக்கே?
அந்த கையில இருக்கும் அடைப்பானை
முட்டுக் குடுத்து மூர்த்திய நகுராம நிப்பாட்டும் என்றார் பூசாரி !
சத்தம் கேட்டு,
கையிலுள்ள பந்தை,
உற்சவ மூர்த்தியின் நாற்காலியின்,
ஒரு காலின் அடியில் சொருகி விட்டார் பெரியவர்.

பந்து கொஞ்சம் தலை தூக்கி பார்க்கும் போது,
ஜனமான ஜனம் - வரிசைகட்டி,
பெருமாளை சேவிக்க காத்திருக்க,
மறுபுறம் சிலர் கையிலுள்ள
விடு பூக்களை வாரி வாரி
பெருமாளை நோக்கி வீசுகின்றனர்,
பெருமாள் மேல் விழும் பூக்கள்,
பந்தின் மேலும் விழ விழ,
பந்து விட்டுப்போன அமைதிக் கடலில்
மூழ்கிப் போகும் பிரயாணத்தை
மீண்டும் தொடர்ந்தது.....!!!!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (19-Apr-19, 4:16 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
Tanglish : KILINTHA panthu
பார்வை : 281

மேலே