சிறகொடிந்த நினைவுகள்

சிறகொடிந்த நினைவுகள்
பெண்ணே….
விழி மூடித்தான் கிடக்கின்றேன்
தட்டாது தள்ளாது இமை புகுந்து
இம்சிக்கிறாய் கனவுகளால்….

நீ உதிர்த்த சிரிப்பொலிகள்
அனல் மூட்டமிடுகின்றன
நெருப்பு வளையமொன்றை
எனைச் சுற்றி அமைத்ததனால்……

வழித்தெறிந்த பின்னும்
ஒட்டிக் கொண்ட வாசம் போல்
உன்னுடன் கை கோர்த்த
நாட்களின் ஞாபகங்கள்…...

ஆண்டின் இறுதி நாளில்
அட்டையாகிப் போன நாட்காட்டி போல்
உன் நினைவுகளைக் கிழித்தெறிந்து
தனித்து தொங்குவதாய் என் இதயம்

வெறுப்பென உதிர்ந்த உன் வார்த்தைகள்
முள் காடென குத்தும் போதும்
காலணியற்றவனாய் கடந்து போகின்றேன்
இரக்க இயலாத உன் நினைவுப் பொதியோடு….

சு. உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (21-Apr-19, 8:45 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 255

மேலே